பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்த நிலையில் நேற்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40க்கு விற்கப்பட்டது. டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 91.43க்கு விற்பனையானது. இந்நிலையில், சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்த மாற்றமுமின்றி அதே விலையில் இன்றும் விற்கப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வந்த நிலையில், தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியைக் குறைத்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்ததால் விலை குறைந்தது.
முன்னதாக, சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆகஸ்ட் 13-ஆம் தேதி தொடங்கிய சட்டசபை கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பேசும்போது, இந்தியாவிலே தமிழ்நாட்டில்தான் இருசக்கர வாகனங்கள் அதிகம். பெட்ரோல் விலை உயர ஒன்றிய அரசுதான் காரணம் என்றாலும் மாநில அரசு வரியை குறைக்கிறது. பெட்ரோல் விலை மீதான வரி லிட்டருக்கு ரூபாய் 3 குறைக்கப்படுகிறது. இது உழைக்கும் வர்க்கத்தினருக்கும், நடுத்தர குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய நிவாரணமாக அமையும். இதனால், ஆண்டுக்கு ரூபாய் 1,160 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று கூறியிருந்தார்.
ஆனால், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மீதான சுங்க வரி குறைக்கப்படாது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள நிர்மலா சீதாராமன், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் வெளியிடப்பட்ட எரிபொருள் பத்திரங்களுக்கு இப்போதைய அரசு 5 ஆண்டுகளில் ரூ.70195 கோடி வட்டி செலுத்துள்ளது. 2026-ஆம் ஆண்டுக்குள் மேலும் ரூபாய் 37 ஆயிரம் கோடி வட்டியாக செலுத்த வேண்டியுள்ளதால், எரிபொருள் விலையை குறைக்க இயலவில்லை என்று கூறியிருந்தார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்