Rule 72 n Finance: தனிநபர் பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும், விதி 72 குறித்து இந்த தொகுப்பில் விரிவாக அறியலாம்.


முதலீடுகளில் விதி 72 என்றால் என்ன?


பங்குகள், தங்கம், ரியல் எஸ்டேட் என முதலீடு என்பது பல வகைப்படும். அவற்றில் முதலீடு செய்வதன் மூலம் எவ்வளவு வட்டி அல்லது வருவாய் கிடைக்கும் என்பதைக் கணக்கிட்ட பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. சிலர் அதிக ரிஸ்க் உள்ள வழிகளை தேர்வு செய்து முதலீட்டை மேற்கொண்டு,  குறுகிய காலத்தில் அதிக வருமானம் பெறுவார்கள். மற்றொரு தரப்பினரோ, தங்களுடைய பணத்தைப் பாதுகாத்துக்கொண்டே, அதிக வருமானம் எங்கே கிடைக்கும் என்று ஆராய்ச்சி மேற்கொள்வார்கள். இந்த இரு தரப்பினர் மனதிலும் உள்ள மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், அவர்களின் முதலீடு  எப்போது இரட்டிப்பாகும்?அதற்கு எவ்வளவு காலம் ஆகும்? என்பதுதான்.


உங்கள் முதலீடு எப்போது இரட்டிப்பாகும் என்று நீங்களே கேட்டுக்கொண்டாலும், அல்லது வேறு யாராவது உங்களிடம் கேட்டாலும், திணறாமல் பதிலளிக்க பயனுள்ளதாக இருப்பதுதான் விதி 72. இது உங்களுக்கான கணக்கீடுகளை நொடிகளில் முடித்து பதிலளிக்கிறது. தனிநபர் பொருளாதாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த,  இந்த விதி 'விதி 72' அல்லது 'பெர்சனல் ஃபைனான்ஸ் 72 விதி' என்று அழைக்கப்படுகிறது. இந்த விதியின் உதவியுடன், நீங்கள் முதலீடு செய்த பணம் இரட்டிப்பாவதற்கு எவ்வளவு காலம் அல்லது எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பதை நீங்கள் எளிதாகக் கண்டறியலாம்.


கூட்டு வட்டிக்கான விதி:


மக்கள் பல்வேறு வகையான முதலீடுகளில் பெரும்பாலும் எளிய வட்டியை மட்டுமே பெறுகிறார்கள்.  ஆனால் சில சந்தர்ப்பங்களில் மட்டுமே அவர்கள் கூட்டு வட்டியின் பலனைப் பெறுகிறார்கள். கூட்டு வட்டி விஷயத்தில், முதலீடு செய்யப்பட்ட பணம் இரட்டிப்பாவதற்கு குறைவான நேரத்தை எடுக்கும், ஆனால் அதன் கணக்கீடு சற்று சிக்கலானது. தனிப்பட்ட நிதியின் விதி 72 இந்தக் கணக்கீட்டை எளிதாக மாற்றுகிறது.


விதி 72 எப்படி வேலை செய்கிறது?


உதாரணத்திற்கு 10 லட்சம் ரூபாயை வங்கியில் FD போட்டதாக வைத்துக் கொள்வோம். வங்கி உங்களுக்கு ஆண்டுக்கு 8% கூட்டு வட்டியை வழங்குகிறது. 72 விதியின் படி, நீங்கள் 72 ஐ வருமான விகிதத்தால் வகுக்கிறீர்கள். இப்போது உங்களுக்குக் கிடைக்கும் எண் உங்கள் முதலீடு இரட்டிப்பாக்க எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பதைக் கூறுகிறது. அதன்படி,  72ஐ 8 ஆல் வகுத்தால் 9 கிடைக்கும். அதாவது உங்கள் 10 லட்ச ரூபாயை 8 சதவிகித வட்டி தரும் திட்டத்தில் முதலீடு செய்தால், அது ரூ.20 லட்சமாக மாற 9 ஆண்டுகள் ஆகும். இதன் மூலம், உங்கள் முதலீடு இரட்டிப்பாக எவ்வளவு காலம் எடுக்கும் என்பதை நீங்கள் எளிதாக அறிந்து கொள்ளலாம்.