Atal Pension Yojana: அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் மாதம் 210 ரூபாய் முதலீடு செய்வதன் மூலம், வாழ்நாள் முடியும் வரை 60 ஆயிரம் ரூபாயை ஓய்வூதியமாக பெறமுடியும்.


அடல் பென்ஷன் யோஜனா திட்டம்:


குறைந்த முதலீட்டில் அதிக ஓய்வூதியம் பெறக்கூடிய ஓய்வூதியத் திட்டத்தை தேடுகிறீர்களா? அமைப்புசாரா துறையுடன் தொடர்புடையவர் மற்றும் வேறு எந்த ஓய்வூதிய திட்டத்திலும் முதலீடு செய்யாதவர் என்றால், மத்திய அரசின் அடல் பென்ஷன் யோஜனா திட்டம் உங்களுக்கான சரியான தேர்வாக இருக்கும்.  இதில் அமைப்புசாரா துறையுடன் தொடர்புடைய எந்த ஒரு ஊழியர் அல்லது தொழிலாளியும் ஓய்வூதியம் பெறலாம். அடல் பென்ஷன் யோஜனாவில் ரூ.210 முதலீடு செய்வதன் மூலம், மாதம் ரூ.5,000 ஓய்வூதியம் பெறலாம். அதாவது, உங்கள் வாழ்நாள் முழுவதும் ஆண்டுக்கு ரூ.60,000 ஓய்வூதியம் பெறலாம். 


210 ரூபாயில் 60000 ரூபாய் ஓய்வூதியம்:


ஒவ்வொரு மாதமும் வெறும் நீங்கள் 210 ரூபாய் டெபாசிட் செய்வதன் மூலம், ஓய்வு பெற்ற பிறகு அதாவது 60 வயதுக்குப் பிறகு ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமாக 5,000 ரூபாய் ஓய்வூதியத்தைப் பெறலாம். அரசு நடத்தும் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ் உத்தரவாதமான ஓய்வூதியம் கிடைக்கிறது. விதிகளின்படி, மாதம் 5 ஆயிரம் ரூபாயை ஓய்வூதியமாக பெற வேண்டும் என்றால், 18 வயதிலிருந்து ஒவ்வொரு மாதமும் நீங்கள் ரூ.210 செலுத்த வேண்டும். இதே தொகையை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தினால், 626 ரூபாயும், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தினால், 1,239 ரூபாயும் செலுத்த வேண்டும். மாதம் ரூ.1,000 ஓய்வூதியம் பெற விரும்பினால், 18 வயதில் இருந்து ஒவ்வொரு மாதமும் ரூ.42 செலுத்த வேண்டும்.


அடல் பென்ஷன் யோஜனாவின் பலன்கள்


மூத்த குடிமக்கள் வருமானத்தை உறுதி செய்யும் நோக்கில்,  2015-16 பட்ஜெட்டில் அடல் பென்ஷன் திட்டத்தை அரசு கொண்டு வந்தது. இதன் மூலம் சாதாரண மக்களை, குறிப்பாக அமைப்புசாரா துறையுடன் தொடர்புடையவர்களை, முடிந்தவரை சேமிக்க அரசாங்கம் ஊக்குவிக்கிறது. அமைப்புசாரா துறையுடன் தொடர்புடையவர்கள் ஓய்வு பெற்ற பிறகு வருமானம் இல்லாத அபாயத்தில் சிக்குவதை தடுக்க இது உதவுகிறது.  இந்தத் திட்டம் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) நடத்தப்படுகிறது.


ஆண்டுக்கு 60,000 ரூபாய் ஓய்வூதியம்:


அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ், பயனாளர்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை ஓய்வூதியம் பெறுகிறார்கள். இதனால் இந்திய அரசு குறைந்தபட்ச ஓய்வூதிய பலனை உறுதி செய்கிறது. மத்திய அரசு சந்தாதாரரின் பங்களிப்பில் 50 சதவீதம் அல்லது ஆண்டுக்கு ரூ 1,000, எது குறைவோ அதை வழங்குகிறது. எந்தவொரு சட்டப்பூர்வ சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வராத மற்றும் வரி செலுத்துவோர் அல்லாதவர்களுக்கு அரசாங்க பங்களிப்புகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ், 1,000, 2000, 3,000, 4,000 மற்றும் 5,000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும். முதலீடும் ஓய்வூதியத்தின் அளவைப் பொறுத்தது. இளம் பருவத்திலேயே சேர்ந்தால் அதிக பலன்கள் கிடைக்கும்.


கணக்கை திறப்பது எப்படி?


தகுதியுடைய தனிநபர் அடல் பென்ஷன் யோஜனா திட்டக் கணக்கை ஆஃப்லைனில்  தொடங்க, அருகிலுள்ள வங்கிக் கிளை மற்றும் தபால் அலுவலகங்களை அணுகி, உரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்க வேண்டும். ஆன்லைனில் கணக்கை தொடங்க விரும்புவோர்,  தங்கள் சேமிப்பு வங்கி கணக்கு அல்லது e-NPS இணையதளத்தின் மூலம் நெட் பேங்கிங் வசதியை பயன்படுத்தி, அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தை தொடங்க விண்ணப்பிக்கலாம்.