Recurring Deposit: ரெகர்ரிங் டெபாசிட் எனப்படும் சேமிப்பு கணக்கை தொடங்குவதற்கு, வங்கி அல்லது போஸ்ட் ஆஃபீஸ் இரண்டில் எது சிறந்தது என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.


ரெகர்ரிங் டெபாசிட் என்றால் என்ன?


ரெகர்ரிங் டெபாசிட் என்பது இந்திய வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களில் அமலில் உள்ள, குறுகிய காலத்திற்கான வைப்புத்தொகை ஆகும். இது மாதாந்திர வருமானம் கொண்டவர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை தங்கள் வைப்பு கணக்கில் டெபாசிட் செய்யவும், அந்த  நிலையான வைப்பு தொகைக்காக  சரியான விகிதத்தில் வட்டி பெறவும் உதவுகிறது. இந்நிலையில், அஞ்சல் அலுவலகம் மற்றும் வங்கிகளில் இந்த வைப்புத் தொகை திட்டத்திற்கு வழங்கப்படும் வட்டி விகிதங்கள் கீழே ஒப்பிடப்பட்டுள்ளன.


அஞ்சல் அலுவலகத்தில் ரெகர்ரிங் டெபாசிட்:


இந்த திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடு மாதத்திற்கு 100 ரூபாயாகும். இதில் முதலீடு செய்ய அதிகபட்ச வரம்பு இல்லை. ஆண்டுக்கு 6.7% வட்டியாக வழங்கப்படுகிறது. அஞ்சல் அலுவலக தொடர் வைப்புத்தொகையின் காலம் 5 ஆண்டுகள். தேவைப்பட்டால் திட்டத்தின் காலத்தை நீட்டித்துக் கொள்ளலாம்.


SBI RD வட்டி விகிதம்:


எஸ்பிஐ இணையதளத்தின்படி, பொது மக்கள் மற்றும் வயதான குடிமக்களுக்கான டெர்ம் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் தான் ரெகர்ரிங் டெபாசசிட்களுக்கான வட்டி விகிதமாக உள்ளது. தொடர்ச்சியாக ஆறு தவணைகள் செலுத்தப்படாவிட்டால், கணக்கு முன்கூட்டியே மூடப்பட்டு மீதமுள்ள நிலுவைத் தொகை கணக்குதாரருக்கு செலுத்தப்படும். மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவான காலத்திற்கு 5.45 சதவிகித வட்டியை வங்கி செலுத்துகிறது. 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான நீண்ட கால திட்டத்திற்கு 5.50 சதவிகிதத்தை  வழங்குகிறது.


HDFC வங்கி RD வட்டி விகிதம்:


HDFC வங்கி 6 மாதங்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான காலகட்டத்திற்கு,  4.50 சதவிகிதம் முதல் 7.10 சதவிகிதம் வரை வட்டி வழங்குகிறது.  60 மாத காலங்களுக்கு திட்டத்தை தொடர்ந்தால் 7 சதவிகித வட்டி வழங்குகிறது.


ஐசிஐசிஐ வங்கி RD வட்டி விகிதம்:



ஐசிஐசிஐ வங்கி வழக்கமான குடிமக்களுக்கு 4.75 சதவிகிதம் முதல் 7.10 சதவிகிதம் மற்றும் மூத்த குடிமக்களுக்கு 5.25 சதவிகிதம் முதல் 7.50 சதவிகிதம் வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது. 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான வைப்புத்தொகை திட்டத்திற்கு 7 சதவிகிதம் வட்டியை வழங்குகிறது.


யெஸ் பேங்க் RD வட்டி விகிதம்:


6 மாதங்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான காலத்திற்கு யெஸ் வங்கி வழக்கமான குடிமக்களுக்கு 6.10 சதவிகிதம் முதல் 7.50 சதவிகிதம் வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 6.60 சதவிகிதம் முதல் 8 சதவிகிதம் வரையிலும் வட்டி விகிதங்களை வழங்குகிறது. 36 மாதங்கள் முதல் 60 மாதங்கள் வரையிலான காலத்திற்கு 7.25 சதவ்கித வட்டி கிடைக்கிறது. 


கோடக் மஹிந்திரா வங்கி RD வட்டி விகிதம்:


கோடக் மஹிந்திரா வங்கியானது, வழக்கமான குடிமக்களுக்கு 6 சதவிகிதம் முதல் 7.20 சதவிகிதம் வரையிலும், மூத்த குடிமக்களுக்கு 6 மாதங்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான காலகட்டங்களுக்கு 6.50 சதவிகிதம் முதல் 7.70 சதவிகிதம் வரையிலான வட்டி விகிதங்களை வழங்குகிறது. 4 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகளுக்கும் குறைவான காலப்பகுதியில் 6.25 சதவிகித வட்டியை வழங்குகிறது.