Senior Citizen Savings Scheme: மூத்த குடிமக்கள் வீட்டிலிருந்தபடியே வருவாய் ஈட்டுவதற்கு உதவும், தபால் அலுவலக சேமிப்புத் திட்டம் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்:
மத்திய அரசின் ஆதரவு பெற்ற மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தை (SCSS) 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அல்லது 55 வயதுக்கு மேற்பட்ட ஓய்வு பெற்றவர்கள் அல்லது விருப்ப ஓய்வு பெற்றவர்கள் அல்லது 50 வயதை எட்டிய முன்னாள் ராணுவ வீரர்கள் (சிவில் பாதுகாப்புப் பணியாளர்களைத் தவிர) ஆகியோர் பயன்படுத்தலாம். இதற்கான கணக்கை தனிநபராக தொடங்கலாம். அதேநேரம், கூட்டு கணக்கு என்றால் மனைவியுடன் சேர்ந்து மட்டுமே தொடங்க முடியும்.
கணக்கு திறப்பு:
அங்கீகரிக்கப்பட்ட வங்கியில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கான கணக்கைத் திறக்கலாம். SCSS கணக்கை தபால் நிலையத்திலும் திறக்கலாம். விண்ணப்பதாரர் கணக்கு திறப்பிற்கான படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான KYC ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் ஓய்வூதிய நிதி பெறுவது தொடர்பாக முதலாளியிடமிருந்து பெறப்பட்ட கடிதத்தின் நகலை இணைக்க வேண்டும். அனைத்து SCSS கணக்குகளிலும் மொத்த வைப்புத்தொகை ரூ. 30 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும் வரை, பயனாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட SCSS கணக்குகளை பயன்படுத்தலாம்.
வைப்புத் தொகை வரம்பு:
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை டெபாசிட் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்பு 2023 பட்ஜெட்டில் வெளியானது. கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால், கூட்டு கணக்கின் மற்றொரு நபர் அல்லது திட்டத்தின் ஒரே நாமினியாக இருக்கும் மனைவி, கணக்கு அலுவலகத்திற்கு (அஞ்சல் அலுவலகம் அல்லது கணக்கு உருவாக்கப்பட்ட வங்கிக் கிளை) தகவல் தெரிவித்து SCSS கணக்கைத் தொடர்ந்து பயன்படுத்தலாம்.
குறைந்தபட்ச வைப்புத்தொகையான ரூ.1000 தொடங்கி அதிகபட்சமாக 30,00,000 உடன் கணக்கு தொடங்கலாம். வைப்புத்தொகையின் காலம் 5 ஆண்டுகளாகும், தேவைப்பட்டால் இதனை மேலும் ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிக்கலாம். இதற்கு எந்த வரம்பும் இல்லை.
வட்டி விவரங்களும், விலக்கும்:
ஒவ்வொரு காலாண்டிற்கும் ஒருமுறை மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் மீதான வட்டி விகிதத்தை அரசாங்கம் நிர்ணயிக்கிறது. ஜனவரி-மார்ச் 2024 காலாண்டிற்கான SCSS மீதான வட்டி விகிதத்தில் அரசாங்கம் எந்த மாற்றமும் செய்யவில்லை. கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் வைப்புத்தொகைக்கு 8.2% வட்டியைப் பெறலாம். வட்டித்தொகை ஒவ்வொரு காலாண்டிற்கு ஒருமுறை பயனாளருக்கு வழங்கப்படும். ஆனால், இதற்கு வரி பொருந்தும். அதேநேரம், வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C இன் கீழ் SCSS வரி விலக்கு உள்ளது. இருப்பினும், SCSS வரிச் சலுகை அதிகபட்சமாக ரூ. 1,50,000 ஆக உள்ளது. ஒரு நிதியாண்டுக்கு ரூ. 50,000க்கு மேல் வட்டி இருந்தால் டிடிஎஸ் பொருந்தும்.
முன்கூட்டியே திரும்பப் பெறுதல்:
முன்கூட்டியே திரும்பப் பெறுதல் திட்டத்தில் இருந்து முன்கூட்டியே வெளியேறுவதற்கு அரசாங்கம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, ஒரு வருட முதலீட்டு காலம் முடிவதற்குள் கணக்கை மூடினால், டெபாசிட் தொகையிலிருந்து ஒரு சதவிகிதம் நீக்கப்படும். முன்பு, ஒரு வருட கால அவகாசம் முடிவதற்குள் கணக்கு மூடப்பட்டால், கணக்கில் வைப்புத்தொகைக்கு செலுத்தப்பட்ட வட்டி வைப்புத்தொகையிலிருந்து எடுக்கப்படும். நிலுவைத் தொகை கணக்கு வைத்திருப்பவருக்கு அனுப்பப்படும்.