Emergency Funds: அவசர காலத்தின் சிறந்த நண்பனான எமர்ஜென்சி ஃபண்டை உருவாக்குவது எப்படி? என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.


அவசர கால நிதி (Emergency Fund):


வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் பல நிகழ்வுகள் நம்முடைய திட்டமிடலை கடந்ததாகவே உள்ளது. அப்படி கனவில் கூட எதிர்பாராத சிரமங்கள் எந்தவித அறிகுறியும் இன்றி நம்மை தாக்கி பொருளாதாரச் சிக்கலை ஏற்படுத்தலாம். அத்தகைய சூழலில் நம்மை பாதுகாத்துக் கொள்ள உதவும் ஒரு சிறந்த சேமிப்பு நடவடிக்கை தான் 'எமர்ஜென்சி ஃபண்ட்'.  குடும்ப பட்ஜெட் எதுவாக இருந்தாலும், வாழ்க்கையில் எதிர்பாராத நேரத்தில் ஏற்படும் செலவுகளுக்கு இந்த நிதியை பயன்படுத்தலாம். அவசர காலங்களில் பெரிய அளவில் கடன் வாங்க வேண்டிய நெருக்கடியை தவிர்க்க அவசர கால நிதி பயன்படும். 


அவசர நிதியில் எவ்வளவு டெபாசிட் செய்ய வேண்டும்?


ஒவ்வொரு நபருக்கும் பல பொறுப்புகள் உள்ளன. அதற்கெல்லாம் நடுவில் அவசர நிதியை உருவாக்குவது சவாலானது. ஆனால், அது உங்களுக்கு மட்டுமின்றி உங்கள் முழு குடும்பத்திற்கும் ஒருவிதமான பொருளாதார பாதுகாப்பை வழங்குகிறது. அவசர நிதியில் எவ்வளவு சேமிப்பது என்பது உங்கள் வருமானம் மற்றும் பொறுப்புகளைப் சார்ந்தது. மாதாந்திர செலவினங்களில் ஒரு பகுதியாக இதற்கான ஏற்பாடு செய்ய வேண்டும். குறைந்தபட்சம் 3 முதல் 6 மாத சம்பளத்துடன் அவசர நிதியை உருவாக்குவது பெரும் உதவியாக இருக்கும்.


உங்கள் சேமிப்பில் முதல் முன்னுரிமை எப்போதுமே அவசர நிதிக்கு கொடுக்கப்பட வேண்டும். பணத்தை வீட்டில் வைத்திருப்பதற்குப் பதிலாக, தேவையான விரைவில் திரும்பப் பெறக்கூடிய வழிகளில் முதலீடு செய்யுங்கள். உங்கள் சம்பளக் கணக்கிலோ அல்லது சேமிப்புக் கணக்கிலோ தானாகவே பணம் கழிக்கப்படும் வகையில் வாகனக் கடன் அமைக்கப்பட வேண்டும். பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்ய முறையான முதலீட்டுத் திட்டம் (SIP) பயன்படுத்தப்படலாம். பணத்தை முதலீடாகப் பயன்படுத்துவதன் மூலம், அவசரகால நிதியானது வட்டி அல்லது வருமானம் என்ற வடிவில் வளர்வது கூடுதல் பலனளிக்கும்.


அவசரகால நிதியை உருவாக்குவது எப்படி?


சேமிப்பு கணக்கு: இது மிகவும் எளிதான மற்றும் பாதுகாப்பான வழி. சேமிப்புக் கணக்கில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தை எப்போது வேண்டுமானாலும் திரும்பப் பெறலாம். வங்கி உங்கள் பணத்திற்கு வட்டியும் செலுத்துகிறது.


தொடர் வைப்புத்தொகை: ஒரு வருட முதிர்ச்சியுடன் தொடர் வைப்புத்தொகையைத் தொடங்கலாம். இது அவசரகால நிதியை உருவாக்குவது மட்டுமல்லாமல் வட்டி வடிவில் கூடுதல் வருமானத்தையும் வழங்குகிறது.


லிக்விட் மியூட்ச்சுவல் ஃபண்டுகள்: லிக்விட் மியூட்சுவல் ஃபண்டுகள் சேமிப்பிற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகும். இது ஒரு குறுகிய கால முதலீட்டு உத்தி. மியூட்ச்சுவல் ஃபண்டுகள் நீங்கள் டெபாசிட் செய்யும் பணத்தை கடன் மற்றும் பணச் சந்தைப் பத்திரங்களில் முதலீடு செய்கின்றன. அவற்றின் காலம் 91 நாட்களுக்கு மேல் இல்லை. இது சேமிப்புக் கணக்கை விட சற்று அதிக வட்டி விகிதத்தைப் பெறுகிறது.


குறுகிய கால நிலையான வைப்புத்தொகை: ஒரு வருடத்திற்கும் குறைவான கால அவகாசத்துடன் ஒரு குறுகிய கால FD வைக்கலாம். எவ்வாறாயினும், முதிர்வுக்கு முன் FD ரத்து செய்யப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.


அவசரகால நிதியை எப்போது பயன்படுத்தலாம்?



  • வருமானம் அல்லது வேலை இழப்பு ஏற்பட்டால், நீங்கள் புதிய வேலை/வேலைவாய்ப்பைக் கண்டுபிடிக்கும் வரை உங்கள் வீட்டுச் செலவுகளுக்கு அவசர நிதியைப் பயன்படுத்தலாம்

  • உடல்நலக் காப்பீட்டுத் திட்டம் இருந்தபோதிலும் குடும்பத்தினர் யாரேனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது, அவசரகால நிதியானது மருத்துவமனைக்கு வெளியே உள்ள செலவுகளை ஈடுசெய்ய உதவுகிறது. மேலும், அந்த நேரத்தில் வீட்டு செலவுகளையும் கவனிக்க பயன்படுகிறது.

  •  கார் திடீரென பழுதடைந்தாலும் அல்லது வீட்டை அவசரமாக சரிசெய்ய வேண்டியிருந்தாலும் மாதாந்திர பட்ஜெட்டில் துண்டு விழாமல் இருப்பதை அவசர நிதி உறுதி செய்யும்.

  • சில நேரங்களில் நீங்கள் எதிர்பாராத பயணங்களைச் மேற்கொள்ள வேண்டியிருக்கும், உங்கள் பாக்கெட்டில் பணம் இருக்காது. அத்தகைய நேரங்களில் அவசர நிதி உங்களுக்கு கைகொடுக்கும்.