வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. தொடர்ந்து மாத வருமானத்தை இந்த வழியில் பெற விரும்புபவர்களுக்கு இது உகந்த நேரம் இல்லை. உதாரணமாக, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வழங்கும் முதியோருக்கான மூன்று ஆண்டுகள் வைப்பு நிதியின் கீழ் 5.8 சதவிகித வட்டி வழங்கப்படுகிறது. ஒரு ஆண்டுக்கான வைப்பு நிதியில் 5 சதவிகித வட்டி வழங்கப்படுகிறது. இந்தியாவின் தற்போதைய பண வீக்கம் 5.6 சதவிகிதமாக உள்ளது. எனவே ஒரு ஆண்டு வைப்பு நிதிக்கு, பண வீக்கத்தை விட கொஞ்சம் அதிகமான பணம் மட்டுமே ஈட்ட முடிகிறது. அதிக வரி கட்டுவோராக இருந்தால், இன்னும் குறைவாகவே பணம் கிடைக்கும்.
வட்டி விகிதத்தில் உயர்வு பலரால் எதிர்பார்க்கப்பட்டும் அறிவிக்கப்படாமல் இருக்கிறது. வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டால் வங்கிகளில் இன்னும் அதிகளவில் வைப்பு நிதி சேர்க்கப்படும். எனவே தற்போதைய சூழலில் வைப்பு நிதியில் பணம் முதலீடு செய்வது அதிக பணத்தை ஈட்டித் தராது. என்ன செய்யலாம்?
முதியோரின் ஓய்வுக் காலத்தை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் முதியோர் சேமிப்புத் திட்டம் ஐந்து ஆண்டுகளுக்கான வைப்பாக வந்திருக்கிறது. இதில் வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.4 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் 1.5 லட்ச ரூபாய் வரை டெபாசிட் செய்பவர்களுக்கு வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. எனினும் இந்தத் திட்டத்தின்கீழ், அதிகபட்சமாக 15 லட்ச ரூபாய் வரை மட்டுமே டெபாசிட் செய்ய முடியும்.
இந்த அதிகபட்ச அளவைக் கடந்தால், பிரதான் மந்திரி வய் வந்தனா யோஜனா என்ற பெயரில் மத்திய அரசு, எல்.ஐ.சி நிறுவனமும் இணைந்து வழங்கும் திட்டத்தின் கீழ், முந்தைய திட்டத்தைப் போல ஆண்டுக்கு 7.4 சதவிகித வட்டி விகிதம் பெற்று, அதிகபட்சமாக 15 லட்சம் ரூபாய் வரை சேமிக்கலாம்.
இந்த இரு சேமிப்புத் திட்டங்களின் கீழும், 30 லட்ச ரூபாய் டெபாசிட் செய்த பிறகு, வேறு இரண்டு திட்டங்களை ஏற்றுக் கொண்டால், மாத வருமானமாக கணிசமாக ஒரு தொகையைப் பெறலாம். POMIS என்று அழைக்கப்படும் அஞ்சல் அலுவலக மாத வருமானத் திட்டக் கணக்கு என்ற இந்தியத் தபால்துறையின் திட்டத்தில் 4.5 லட்ச ரூபாய் வரை சேமித்து, அதில் இருந்து 6.6 சதவிகித வட்டியையும் பெறலாம். இந்தத் திட்டங்கள் 60 வயதுக்குக் குறைவானவர்களுக்கும் பொருந்தும்.
அதிகரிக்கும் வட்டிகளால் பயன்பெற விரும்புவோருக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் Floating Rate Savings என்ற திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு வட்டி விகிதம் அதிகரிக்கும் போதெல்லாம் லாபம் கிடைக்கும். இதில் ஆண்டுக்கு 7.15 சதவிகித வட்டி விகிதமும் கிடைக்கிறது. இதில் வழங்கப்படும் தொகை முந்தைய திட்டங்களைப் போல, தொடர் மாத வருமானம் விரும்புவோருக்கு உகந்ததல்ல என்ற போதும், இதிலும் கணிசமான தொகையை ஈட்ட முடியும்.
தனியார் நிறுவனங்கள் வழங்கும் வைப்பு நிதிகளில் அதிக வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. எனினும் சிலவற்றில் கடன் பிரச்னையும் இருக்கிறது. இந்த டெபாசிட்டை ஒரு ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை மேற்கொள்ளலால். ஆண்டுகள் ஏற ஏற, வட்டி விகிதம் ஏறும். உதாரணமாக, ஹெச்.டி.எஃப்.சி வழங்கும் வைப்பு நிதியில் 6.2 சதவிகித வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. அரசு நிறுவனங்கள் வழங்கும் கடன் பத்திரங்களில் நீண்ட கால முதலீடு செய்பவர்களுக்கு 9 சதவிகிதம் வரை வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.
வட்டியில் பெறப்படும் வருமானம் அனைத்துமே அதன் அளவீட்டைப் பொறுத்து வரி விதிப்பிற்கு உட்பட்டவை. அதிக வருமானம் பெறுபவர்கள், வெவ்வேறு பாண்ட் நிதிகளில் தங்கள் பணத்தைப் பிரித்து முதலீடு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். மூன்று ஆண்டுகள் சேமிப்புக்குப் பிறகு, படிப்படியாக பணத்தைத் திரும்பப் பெறுவது சிறந்தது.
பொருளாதார வல்லுநர்கள் மேலே குறிப்பிட்டிருக்கும் அனைத்து திட்டங்களிலும் முதலீடு செய்தால், சுமார் மூன்று ஆண்டுகள் கழித்து கையில் கணிசமான தொகையை ஈட்ட முடியும் என்று ஆலோசனை வழங்குகின்றனர்.