தென் இந்தியாவின் மிகப் பெரிய பொழுதுபோக்கு நிறுவனமாக சன் நெட் ஓர்க் செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக கலாநிதி மாறன் செயல்பட்டு வருகிறார். இவரது மனைவி காவேரி கலாநிதி எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் ஆக பணியாற்றி வருகிறார். இவர்கள் பல வருடங்களாக இந்தியாவில் அதிகமாக சம்பளம் வாங்கும் நபர்களாக அறியப்பட்டு வருகிறார்கள். அது மட்டுமின்றி கடந்த பத்து ஆண்டுகளில் 1500 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தின் வருடாந்திர அறிக்கை சமர்பித்ததில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்களின்படி, 2012 ஆம் நிதியாண்டில் இருந்து 2021 ஆம் நிதியாண்டு வரை 1470 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. தலைவராக கலாநிதி மாறனும், எக்ஸிகியூட்டிவ் டைரக்டராக காவேரி கலாநிதியும் 2021 நிதியாண்டில் தலா ரூ. 87.50 கோடி சம்பளமாக பெற்றுள்ளனர். இருவருக்கும் ஊதியமாக 13.83 கோடியும், போனசாக 73.67 கோடியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிக ஊதியம் வாங்குபவர்களாக இந்த ஜோடிதான்  திகழ்ந்து வருகிறது. ஏப்ரல் 1, 2019 முதல் இயக்குநராகவும், நிர்வாக இயக்குநராகவும் நியமிக்கப்பட்ட இவர்களது மகள் காவியா கலாநிதி மாறன், நிர்வாக ஊதியமாக ₹1.09 கோடி பெற்றுள்ளார். 



இவர்களின் ஊதியம் இந்தியாவின் மற்ற உயர் பதவிகளில் இருப்பவர்களை விட மிக அதிகமாக உள்ளது. உதாரணமாக, L&T குழுமத்தின் MD & CEO, SN சுப்ரமணியன், 2021 ஆம் நிதியாண்டில் ரூ. 28.50 கோடியை ஊதியமாகப் பெற்றுள்ளார், அதே நேரத்தில் Tech Mahindraவின் CEO மற்றும் MD சிபி குர்னானி கடந்த நிதியாண்டில் ரூ. 22 கோடி சம்பளமாக பெற்றுள்ளார். இன்ஃபோசிஸ் சிஇஓ சலில் பரேக் ₹49 கோடியும், டிசிஎஸ் தலைவர் ராஜேஷ் கோபிநந்தன் ₹20 கோடிக்கும் அதிகமாகவும் சம்பாதித்துள்ளனர். இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி, வணிகம் மற்றும் பொருளாதாரத்தைத் தாக்கும் கொரோனா தோற்றுநோயால், தனது சம்பளத்தை தானாக முன்வந்து கைவிட்டதால் இந்த நிதியாண்டில் சம்பளம் எதுவும் பெறவில்லை. கடந்த வாரம் நடைபெற்ற வருடாந்திர பொதுக் கூட்டத்தில், சன் டிவி நெட்வொர்க்கின் பெரும்பான்மையான நிறுவன பங்குதாரர்கள் (86.3 சதவீதம்) கலாநிதி மாறனை செயல் தலைவராகவும், அவரது மனைவி காவேரி கலாநிதியை செயல் இயக்குநராகவும் மீண்டும் ஐந்தாண்டு காலத்திற்கு 25 சதவீத ஊதிய அதிகரிப்புடன் நியமிக்கும் திட்டங்களுக்கு எதிராக வாக்களித்தனர். 



எனினும், குடும்பமே நிறுவனத்தில் 75 சதவீத பங்குகளை வைத்திருப்பதால் இந்த தீர்மானங்கள் அங்கீகரிக்கப்படுவதைத் எவராலும் தடுக்கமுடியாது. நிறுவன முதலீட்டாளர்களின் பங்கு வெறும் 12 சதவீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. மும்பையைச் சேர்ந்த ப்ராக்ஸி ஆலோசனை நிறுவனமான இன்ஸ்டிடியூஷனல் இன்வெஸ்டர் அட்வைசரி சர்வீசஸ் (ஐஐஏஎஸ்) இரண்டு தீர்மானங்களுக்கும் எதிராக வாக்களிக்க பரிந்துரைத்தது. "துரதிர்ஷ்டவசமாக, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, நிறுவனத்தில் முதலீட்டாளர்களுக்கு மிகக் குறைவான ஆதாரமே உள்ளது. சிறுபான்மை முதலீட்டாளர்களுக்கு வாக்களிக்க குறைந்தபட்சம் இழப்பீட்டுத் தீர்மானங்கள் போடப்பட வேண்டும் என்பது எங்கள் நம்பிக்கை. இந்த விஷயம் முன்னோக்கி செல்ல வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். ஊதியம் தொடர்பான தீர்மானம் நிறுவன பங்குதாரர்களால் எதிர்க்கப்பட்டும் நிறைவேற்றுவது இது முதல் முறை அல்ல. நாங்கள் இதைத் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம்," என்று ஐஐஏஎஸ் நிறுவனர் மற்றும் எம்டி அமித் டாண்டன் கூறினார். ஆனால் அது மிகக் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் சம்பளம் 2012ஆம் நிதியாண்டில் தலா ₹57.01 கோடியிலிருந்து 2021ல் தலா ₹87.50 கோடியாக உயர்ந்துள்ளது குறிப்பித்தக்கது.