ஐபிஓ முதலீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் எல்.ஐ.சி நிறுவனம் சமீபத்தில் தனிநபர்களால் தொடர்ந்து பணம் செலுத்த முடியாத பாலிசிகளை மீண்டும் உயிர்ப்பூட்டும் பணிகளுக்கான பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. 


ப்ரீமியம் திட்டங்களில் பணம் செலுத்தும் காலத்திற்குள் பணம் செலுத்தப்படாமல் இருக்கும் பாலிசிகள் இந்தப் பிரச்சாரக் காலத்தின் போது மீண்டும் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாலிசி காலம் முடிவடைந்தால் அதனை மீண்டும் செயல்படுத்த முடியாது. இந்தக் கால அளவு வரும் பிப்ரவரி 7 முதல் மார்ச் 25 வரை செயல்படாத பாலிசிகளை மீண்டும் செயல்படுத்தலாம் என்று இன்று எல்.ஐ.சி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 


சமீபத்திய கொரோனா பெருந்தொற்று காலத்தில் நோய் பாதிப்பு காரணமாக எதிர்பாராமல் இறப்பதால் குடும்பத்தில் ஏற்படும் பணப் பிரச்னைகளைப் பெரிதும் உணர்த்தி இருப்பதால், எல்.ஐ.சி நிறுவனத்தில் காப்பீடு மேற்கொண்டிருப்பவர்கள் தங்கள் காப்பீடுகளை மீண்டும் செயல்படுத்துவதற்கும், ஆயுள் காப்பீட்டை மீண்டும் பயன்படுத்த தொடங்குவதற்கும் தங்கள் குடும்பத்தின் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் இந்தப் பிரச்சாரக் காலத்தை வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று எல்.ஐ.சி நிறுவனத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



மொத்த ப்ரீமியம் கட்டணத்தின் அடிப்படையில், தாமதாக செலுத்தப்படும் தொகைக்கான அபராதம் குறைப்பு, காப்பீட்டுக் காலத்தை உறுதிசெய்தல் ஆகியவையும் இந்தக் காலகட்டத்தில் வழங்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. 


மருத்துவ தேவைகளுக்கான காப்பீட்டில் எந்தத் தள்ளுபடியும் அமல்படுத்தப்படவில்லை. எனினும், குறிப்பிடப்பட்டுள்ள உடல்நலம், மைக்ரோ காப்பீட்டு திட்டங்கள் ஆகியவற்றில் தாமதாகத் தொகை செலுத்துவதில் அபராதம் குறைத்து தரப்படும் எனவும் இந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 


மொத்தமாக சுமார் 1 லட்சம் ரூபாய் பீரிமியம் தொகை வரை வழங்கும் உடல்நலம் குறித்த காப்பீட்டு திட்டங்களில் தாமதமாக அனுப்பப்படும் தொகையில் சுமார் 20 சதவிகிதம் வரை குறைப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும், இதன் அதிகபட்ச குறைப்பாக 2 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதே போல, 3 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான ப்ரீமியம் தொகை கொண்டிருப்பவர்களுக்கும், தாமதத்திற்கான அபராதத்தில் 30 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டு, அதிகபட்சமாக 3 ஆயிரம் ரூபாய் வரை குறைக்கப்படுகிறது. 



மேலும், மைக்ரோ காப்பீட்டுத் திட்டங்களில் தாமதத்திற்கான அபராத தொகையை முழுவதுமாகவும் தள்ளுபடி செய்யும் வாய்ப்பையும் எல்.ஐ.சி நிறுவனம் வழங்குகிறது. 


இந்தப் பிரசாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில ப்ரீமியம் திட்டங்களில் முதல் ப்ரீமியம் தொகை செலுத்தப்படாத நாளில் இருந்து 5 ஆண்டுகள் வரையிலான கால கட்டத்திற்குள் அவற்றை மீண்டும் செயல்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தத் திட்டங்களில் சில விதிமுறைகளும் நிபந்தனைகளும் விதிக்கப்பட்டிருப்பதாகவும் செய்திக் குறிப்பில் எல்.ஐ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.