பெண் குழந்தைகளுக்கான நலத்திட்டமான சுகன்யா சம்ரித்தி யோஜனாவின் வட்டி விகிதம் ஜனவரி-மார்ச் 2023-ஆம் ஆண்டில் தற்போதைய 7.6 சதவிகிதம் வட்டி விகிதம்  கவர்ச்சிகரமானது என்றே குறிப்பிடலாம். இத்திட்டம் ஒரு பெண் குழந்தையின் எதிர்காலத்தைப் பாதுகாக்க பெற்றோருக்கு உதவுகிறது.


சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் சேர்வதற்கான தகுதி


சுகன்யா சம்ரிதி யோஜனா கணக்கை 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் அவரது பெற்றோர் அல்லது பாதுகாவலர் தொடங்கலாம். சிறுமிக்கு 18 வயது ஆனதும், அவர் அதற்கு உரிமையாளராவார். இந்தக் கணக்கை ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் இரண்டு பெண் குழந்தைகளுக்குத் திறக்கலாம். 


SSY கணக்கை எந்த வங்கி அல்லது தபால் அலுவலகத்திலும் தொடங்கலாம். மேலும் அதனைப் பிற வங்கி கிளைகள் அல்லது தபால் நிலையங்களுக்கு எளிதாக மாற்றலாம். இந்த திட்டத்தின் முதலீட்டு காலம் 15 ஆண்டுகள் மற்றும் முதிர்வு காலம் 21 ஆண்டுகள்.


சுகன்யா சம்ரிதி கணக்கு: வைப்பு விதிகள்


சுகன்யா சம்ரித்தி யோஜனாவின் கீழ் தொடங்கப்பட்ட கணக்கில் குறைந்தபட்ச ஆரம்ப வைப்புத் தொகையான ரூ.250-ல் தொடங்கலாம். டெபாசிட் செய்பவர் ஒவ்வொரு நிதியாண்டிலும் குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம், ரூ.50-இன் மடங்குகளில். ஒரு மொத்த தொகை அல்லது ஒரு மாத அடிப்படையில் செலுத்தலாம். இருப்பினும், குறைந்தபட்ச தொகையை பராமரிக்கவில்லை என்றால், 50 ரூபாய் அபராதம் விதிக்கப்படும், மேலும் கணக்கு தவறியதாக கருதப்படும். ஒவ்வொரு ஆண்டுக்கும் குறைந்தபட்சம் ரூ. 250 + ரூ. 50 செலுத்துவதன் மூலம், கணக்குத் தொடங்கிய நாளிலிருந்து 15 ஆண்டுகள் முடிவதற்குள், அவ்வாறு தவறிய கணக்கை புதுப்பிக்க முடியும்.


சுகன்யா சம்ரிதி யோஜனா சேமிப்பு: வரி பலன்கள் மற்றும் வட்டி


சுகன்யா சம்ரிதி யோஜனா சந்தாதாரர் அக்டோபர்-டிசம்பர் 2022 காலாண்டில் டெபாசிட்டுகளுக்கு 7.6 சதவீத வட்டி விகிதத்தைப் பெறுவார். சம்பாதித்த வட்டி ஒவ்வொரு நிதியாண்டின் முடிவிலும் கணக்கில் வரவு வைக்கப்படும் மற்றும் வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 80C இன் கீழ் விலக்கு பெறத் தகுதியுடையது. அதே பிரிவின் கீழ் வைப்புத் தொகைக்கும் விலக்கு அளிக்கப்படுகிறது.


ரூ 250 உடன் கணக்கு தொடங்கி, முதிர்ச்சியின்போது ரூ 5 லட்சத்தை பெறுங்கள்


நீங்கள் ரூ.250-ல் கணக்கைத் தொடங்கி, முதல் மாதம் ரூ.750-ஐத் தொடர்ந்து மாதம் ரூ.1,000 டெபாசிட் செய்தால், உங்கள் மொத்த ஆண்டு வைப்புத் தொகை ரூ.12,000 ஆக இருக்கும். உங்கள் மகள் பிறந்தவுடன் கணக்கைத் திறந்தீர்கள் என்று வைத்துக் கொண்டால், அவளுக்கு 21 வயதாகும் போது உங்கள் முதலீடு ரூ. 1,80,000 ஆக இருக்கும், அதே சமயம் ரூ. 3,47,445 மதிப்புள்ள வட்டியைப் பெறுவீர்கள். எனவே, 21 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்வுத் தொகையாக ரூ.5,27,445 பெறுவீர்கள்.