நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ, பண்டிகை காலத்தை முன்னிட்டு பல்வேரு சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது.


அதன்படி கார் லோனுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 100% பிராசஸிங் கட்டண விலக்கு தொடங்கி, காருக்கு 90% நிதியுதவி வரை பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. யோனோYONO (You Only Need One App) மொபைல் ஆப் மூலம் கார் லோனுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு வட்டிச் சலுகையாக 25 பேசிக் பாயின்ட்ஸ் அறிவித்துள்ளது. அதேபோல் யோனா ஆப் வைத்துள்ளவர்கள் ஆண்டுக்கு 7.5% வட்டி விகிதத்தில் கார் லோன் பெறலாம்.


தங்க நகைக் கடன் பொறுத்தவரையில், வாடிக்கையாளர்கள் 75 பிபிஎஸ் (பேசிக் பாயின்ட்ஸ்) தள்ளுபடி பெறலாம். நாடு முழுவதும் உள்ள எஸ்பிஐ வங்கிகளில் யோனோ ஆப் உள்ளவர்கள், ஆண்டுக்கு 7.5% வட்டி விகிதத்தில் தங்க நகைக் கடன் பெற்றுக் கொள்ளலாம்.


யோனோ ஆப் வழியாக தங்க நகைக் கடனுக்கு விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு பிராசஸிங் கட்டணத்திலிருந்து வங்கி விலக்கு அறிவித்துள்ளது.


அதேபோல், தனிநபர் மற்றும் பென்ஷன் லோன் வாடிக்கையாளர்களுக்கு 100% பிராசஸிங் கட்டண விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு சிறப்புச் சலுகை:


கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி தனிநபர் கடன்களுக்கு விண்ணப்பிக்கும் முன்களப் பணியாளர்களுக்கு சிறப்பு வரிச் சலுகையாக 50 பிபிஎஸ் தள்ளுபடி வழங்கப்படும். இது கார் மற்று தங்க நகைக் கடனுக்கும் விரைவில் நீட்டிக்கப்படும்.


ரீட்டெய்ல் முதலீட்டாளர்களுக்காக பிளாட்டினம் டெர்ம் டெபாசிட்ஸ் அறிமுகப்படுத்துகிறது. இந்தியாவின் 75-வது சுதந்திர ஆண்டை முன்னிட்டு இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15, 2021 தொடங்கி செப்டம்பர் 14 2021 வரையிலான காலகட்டத்தில் முதலீட்டாளர்கள் 75 நாள், 75 வாரம், 75 மாதம் என தங்கள் முதலீட்டின் மீது எந்த பருவத்தை எட்டினாலும் அவர்களுக்கு முதலீட்டில் 15 பிபிஎஸ் கூடுதல் வட்டி கிடைக்கும்.


இவ்வாறு எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, வங்கியின் நிர்வாக இயக்குநர் ( ரீட்டெய்ல் மற்றும் டிஜிட்டல் பிரிவு) சி.எஸ்.ஷெட்டி கூறுகையில், “இந்தச் சலுகைகள் வாடிக்கையாளர்கள் அவர்கள் பெறும் கடன்களுக்கு கூடுதல் சலுகையைக் கொடுப்பதோடு, அவர்களின் பண்டிகைக் காலத்தை சிறப்பிக்கும் என நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.


கடந்த மாதம் எஸ்பிஐ வங்கி, ஆகஸ்ட் 31, 2021 வரை வீட்டுக் கடன்களுக்கு  நூறு சதவீதம் பிராசஸிங் கட்டணச் சலுகை அறிவித்தது. மேலும், 6.70%ல் வீட்டுக் கடனை அறிவித்தது.