மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தனியார் பங்களிப்புடன் தூத்துக்குடி துறைமுகத்தில் 7500 கோடி மதிப்பீட்டில் 1000 கோடி மதிப்பில் புதிதாக கப்பல் கட்டும் தளம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு அரசின் இந்த புதிய அறிவிப்பு குறித்து, தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டிலும் தெரிவித்து இருந்தது.
இதனை தொடர்ந்து கப்பல் கட்டும் தளத்தை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியை தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் துரிதப்படுத்தியது. காயல்பட்டிணம் வடபாகம், வைப்பாறு மற்றும் பழைய காயல் உள்ளிட்ட பகுதிகள் கப்பல் கட்டும் தளத்திற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தூத்துக்குடி ஆட்சியர் அறிவித்திருந்ததுடன், மத்திய கப்பல்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இடத்தினை தேர்வு செய்வார்கள் என தெரிவித்து இருந்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தின் வளர்ச்சி என்பது துறைமுக வளர்ச்சியினை மையமாக கொண்டு அமைந்துள்ளது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் தனியார், அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் தற்போது சுமார் 2,500 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக இந்தியா மட்டுமின்றி இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் தூத்துக்குடி துறைமுகத்திற்கு நிலக்கரி இறக்குமதி செய்யபப்டுகிறது. தூத்துக்குடி துறைமுகத்தை பொறுத்தவரை ஆண்டுக்கு சுமார் 1900 கப்பல்கள் வரை வந்து செல்கின்றன. ஆண்டுதோறும் வளர்ச்சி விகிதமும் அதிகரித்து வரும் நிலையில் துறைமுகத்திற்கு கப்பல்கட்டும் தளமும் அமையுமானால் கூடுதலாக நன்மை வருவாயும் அன்னிய செலவாணியும் ஏற்படும் வாய்ப்புள்ளதாக துறைமுக அதிகாரிகள் கூறுகின்றனர்.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் துவக்கத்தில் இரண்டு தளமாக இருந்தது தற்போது சரக்குப்பெட்டகம் கையாளுவதற்காகவே தனியார் வசம் இரண்டு தளங்களும், ஸ்பிக், அனல்மின் நிலையம் உள்ளிட்ட ஆலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் கையாளப்படும் வகையிலும் அரசு மற்றும் தனியார் ஆலைகளுக்கு தேவையான நிலக்கரியினை கையாள்வதற்காகவும் மொத்தம் 13 தளங்கள் உள்ளன. வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ஆண்டிற்கு சுமார் 36 மில்லியன் டன் சரக்குகள் கையாளப்படுகிறது. இதேபோல் 8 லட்சம் சரக்கு பெட்டகங்களை கப்பல் துறை அமைச்சகம் நிர்ணயித்ததை விட கூடுதலாக கையாண்டுள்ளது.
தூத்துக்குடி துறைமுகம் வரும் கப்பல்களை தளத்தில் நிறுத்துவதற்காக ஒப்பந்த அடிப்படையிலான இழுவை கப்பல்கள் மூலம் கப்பல்கள் தளத்திற்கு கொண்டு வரப்படுகிறது. துறைமுகம் வரும் கப்பல்களில் பழுது ஏற்பட்டால் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்படுவதால் அன்னிய செலவாணி பாதிக்கப்படுகிறது,
ஆண்டுதோறும் கப்பல்களின் போக்குவரத்து அதிகரித்து வரும் சூழ்நிலையில் கப்பல் கட்டும் தளம் அமைந்தால் கப்பல் பழுது பார்க்கும் தளமும் ஏற்படும் என்பதால் விரைவில் கப்பல் கட்டும் தளத்தை அமைக்க வேண்டும் என்பதே துறைமுக உபயோகிப்பாளர்களின் கோரிக்கையாக உள்ளது. தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்கப்பட்டால் தொழில்வளம் பெருகுவதோடு மட்டுமல்லாமல் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். இது தூத்துக்குடி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு மட்டும் வித்திடாமல் ஒட்டுமொத்த தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு வித்திடும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே கடந்த பல ஆண்டுகளாக தென் மாவட்டங்களில் புதிய ஆலைகள் ஏதும் அமைக்கப்படாத நிலையில் கப்பல் கட்டும் தளம் அமைந்தால் அதை சார்ந்த சிறுகுறு தொழிற்சாலைகள் வரும் என்கின்றனர். அதே நேரத்தில் தூத்துக்குடியில் புதிய தொழிற்சாலைகள் அமைப்பதற்கான வாய்ப்பை உருவாக்க அரசை திரும்பத் திரும்ப வலியுறுத்த வேண்டும் என்கின்றனர்.