குழந்தைகளுக்கான எதிர்கால சேமிப்பு என்பது நம் வாழ்வில் தவிர்க்கக் கூடாதது. அதையும் நம் குழந்தைகளையே செய்ய ஊக்குவிப்பது என்பது குழந்தைகளுக்கு சேமிப்புப் பழக்கத்தையும் கற்றுத் தருகிறது. வருங்காலத்தில் உங்கள் குழந்தைகளுக்கு அவர்கள் சேமிக்கும் பணம் மொத்தமாக கிடைப்பதோடு, பணம் சம்பாதிக்கும் போது பணத்தைச் சேமிக்கும் நல்ல பழக்கத்தையும் குழந்தைகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க முஇட்யும். 


அஞ்சல் அலுவலகங்களில் பெண் குழந்தைகளுக்கான சேமிப்பை ஊக்குவிக்க செல்வ மகள் திட்டம் செயல்பட்டு வருவதைப் போல, ஆண் குழந்தைகளுக்காக `பொன்மகன் சேமிப்புத் திட்டம்’ உருவாக்கப்பட்டுள்ளது. 


வருமானம் குறைவாகப் பெறும் குடும்பங்களிலும், நடுத்தரக் குடும்பங்களிலும் வாழும் ஆண் குழந்தைகளைச் சேமிப்பு நோக்கி ஊக்கப்படுத்த இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. `பொன்மகன் சேமிப்புத் திட்டம்’.. இதன் விவரங்கள் என்ன? இதோ...



அஞ்சல் அலுவலகங்களின் மூலம் ஆண் குழந்தைக்களுக்காக கொண்டுவரப்பட்டது `பொன்மகன் சேமிப்பு திட்டம்’. சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தைப் போல, இந்த திட்டத்திலும் ஆண்டுக்கு 12 முறை எனக் குறைந்தபட்சமாக 500 ரூபாய் முதல் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.


பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்பு திட்டத்தைப் போல செயல்படும் `பொன்மகன் சேமிப்புத் திட்டம்’ 15 ஆண்டுக் காலங்களுக்காக திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தை இந்தியா முழுவதும் உள்ள எந்த அஞ்சல் நிலையத்திலும் தொடங்கலாம். மேலும் இந்தியா முழுவதும் இந்த சேமிப்புக் கணக்கை எந்தப் பகுதிக்கும் இடமாற்றமும் செய்து கொள்ளலாம்.


தங்கள் மகன்களுக்காக இந்தச் சேமிப்புத் திட்டத்தில் இணைய விரும்பும் பெற்றோர், இதுதொடர்பாக தங்கள் அருகில் இருக்கும் அஞ்சல் அலுவலகத்தைத் தொடர்புகொள்ளலாம். எனினும், குழந்தையின் வயது 10 அல்லது அதற்கு மேல் என்றால் குழந்தையின் பெயரில் தனிக் கணக்கு தொடங்கலாம். 10 வயதுக்கும் குறைவான குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் சேர்ந்த கூட்டுக் கணக்கைத் தொடங்கி, அதில் சேமிக்கத் தொடங்கலாம். 


மற்ற சேமிப்புத் திட்டங்களைப் போலவே, `பொன்மகள் சேமிப்புத் திட்டத்திலும்’ அதே ஆவணங்களே இதிலும் கேட்கப்படுகிறது. குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், பெற்றோரின் முகவரிக்கான சான்றாக ஆதார் எண், வருமான வரி விவரங்களுக்காக பான் அட்டை, குழந்தையின் புகைப்படம் முதலானவை இதில் அளிக்கக்கப்பட வேண்டிய ஆவணங்கள்.



பிற அஞ்சல் துறையின் சேமிப்புத் திட்டங்களைப் போலவே, `பொன்மகன் சேமிப்புத் திட்டத்திலும்’ வட்டி விகிதம் சந்தையின் நிலைமைக்கு ஏற்ப மாற்றம் பெறுகிறது..மற்ற திட்டங்களோடு ஒப்பிடுகையில் சற்றே அதிகமான 7.6 சதவிகித வட்டி விகிதம் இந்தத் திட்டத்திற்கு அளிக்கப்படுகிறது. 


மேலும், இந்தத் திட்டத்திற்கு நீங்கள் முதலீடு செய்யும் தொகைக்கும், மொத்தமாக பெறும் சேமிப்புக்கும் வரி விலக்கு உண்டு. மேலும் இந்த கணக்கு தொடங்கப்பட்டதில் இருந்து 7வது ஆண்டு முதல் கணிசமான தொகையைப் பெற்றும் கொள்ளும் வசதியும் இதில் உண்டு. இந்தத் திட்டத்தின் முதிர்வுக் காலம் 15 ஆண்டுகள் என்று கூறப்பட்டிருந்தாலும், அடுத்து 5 ஆண்டுகளுக்குத் தவணைகளை அதிகரித்துக் கொள்ளலாம். 


இந்தத் திட்டத்தைப் பயன்படுத்த தொடங்கிய மூன்றாவது நிதியாண்டு முதல் இதில் அவசர காலங்களில் போது பணம் பெற்றுக் கொள்ளும் சிறப்பம்சமும் உண்டு. 


மாதம் 1,000 ரூபாய் என்ற அளவில், ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் இதில் முதலீடு செய்தால், தற்போதைய வட்டி விகிதமான 7.6 சதவிகிதத்தின்படி. 15 ஆண்டுகள் முதலீடு செய்யப்பட்ட பிறகு 1,80,000 ரூபாய் முதலீடு செய்யப்பட்ட தொகையாகவும், வட்டியாக 3,47,441 ரூபாய் தொகையும் சேர்க்கப்பட்டு.மொத்தமாக முதிர்வு தொகை 5,27,446 ரூபாய் கிடைக்கும்.