Tax Deduction: மருத்துவ காப்பீடு பிரீமியங்கள் மூலம் 75 ஆயிரம் ரூபாய் வரை, வரி விலக்கு பெறுவதற்கான வழிமுறைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
வரிவிலக்கு ஆலோசனை:
வரி விலக்கு பெற உங்களது மருத்துவ காப்பீடு திட்டங்களை இதுவரை நீங்கள் பயன்படுத்தவில்லை என்றால், அதை எப்படி செயல்படுத்துவது என்பதை தற்போது அறியலாம். மருத்துவ காப்பீட்டு பிரீமியங்களுக்கு வருமான வரிச் சட்டத்தின் 80D பிரிவின் கீழ் அரசாங்கம் வரி விலக்கு அளிக்கிறது. அதாவது, மருத்துவ காப்பீட்டிற்கு நீங்கள் செலுத்தும் தொகையின் மூலம் உங்கள் வருமானத்திற்குரிய வரியை குறைக்கலாம். இது உங்கள் வரிச் சுமையை குறைக்க உதவும்.
வரி விலக்கு எவ்வளவு கிடைக்கும்?
- தனக்கு, மனைவி மற்றும் சார்ந்திருக்கும் குழந்தைகளுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு ஆண்டிற்கு ரூ. 25,000 வரி விலக்கு கிடைக்கும்
- பெற்றோருக்கான (மூத்த குடிமக்கள் - வயது 60 அல்லது அதற்கு மேல்) மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு கூடுதலாக ஆண்டுக்கு ரூ. 25,000 முதல் ரூ. 50,000 வரை வரி விலக்கு கிடைக்கும்
- உங்களது பாலிசியில் 60 வயதுக்கு குறைவான உங்களது பெற்றோர் இருந்தால் ஆண்டுக்கு ரூ.25,000 வரிவிலக்கு பெறலாம்.
மேற்குறிப்பிடப்பட்ட வரி விலக்கானது வருமான வரம்பைப் பொருட்படுத்தாமல் அனைத்து தரப்பினருக்கும் பொருந்தும். நீங்கள் மாத சம்பளம் பெறும் நபராக இருந்தாலும், சுயதொழில் செய்பவராக இருந்தாலும் அல்லது மூத்த குடிமகனாக இருந்தாலும், இந்த நடைமுறையின் மூலம் உங்களது வரி சுமையை குறைக்கலாம்.
வரிச்சுமை குறைப்பு:
80 D பிரிவானது 80 C க்கு கூடுதலாக உள்ளது. அதாவது ஒன்றரை லட்சம் ரூபாய் வரையிலான பல்வேறு முதலீடுகளில் விலக்குகள் பெற உதவுகிறது. எந்தவொரு தனிநபரும் அல்லது பிரிக்கப்படாத இந்து குடும்பமும் சட்டத்தின்படி, 80 D இன் கீழ் பயன் பெறலாம். இதில் தனிநபர் அல்லது பிரிக்கப்படாத இந்து குடும்பம் மற்றும் மூத்த குடிமக்களுக்கு ஏற்படும் மருத்துவச் செலவுகளுக்கான மருத்துவ காப்பீட்டு பிரீமியம் திட்டமும் அடங்கும். 80 D இன் கீழ் தனிநபர்களுக்கு ரூ. 25,000 மற்றும் மூத்த குடிமக்களுக்கு ரூ.50,000 வரிவிலக்கு பெறலாம். மருத்துவ காப்பீட்டு பிரீமியங்களைச் செலுத்துவதன் மூலம் ஒருவர் சேமிக்கக்கூடிய வரியின் அளவு வயது மற்றும் செலுத்தப்பட்ட மொத்த பிரீமியத்தைப் பொறுத்து மாறுபடும்.
உதாரணமான சூழல்:
30 வயதான நபர் ஒருவர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் தனக்கு ரூ. 20,000, தனது மனைவிக்கு ரூ.10,000 மற்றும் 55 வயதாகும் தனது தந்தைக்கு ரூ.35,000 பிரீமியமாக செலுத்துகிறார் என கொள்வோம். அதன்படி, பிரிவு 80D-யின் கீழ் அந்த நபர் பெறக்கூடிய அதிகபட்ச விலக்கு என்பது,
தனக்கும், தனது மனைவிக்கும் செலுத்தப்படும் பிரீமியம் ரூ.30,000இந்த பிரிவில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வரம்பு: ரூ. 25,000 தந்தைக்கு செலுத்திய பிரீமியம் ரூ.35,000இந்த பிரிவில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வரம்பு ரூ.25,000
மேற்குறிப்பிடப்பட்ட நபர் இன்சூரன்ஸ் பிரீமியமாக ரூ.65,000 செலுத்தியிருந்தாலும், அனுமதிக்கப்பட்ட வரிச் சலுகையான ரூ.50,000 மட்டுமே கழிக்க முடியும். ஒருவேளை தந்தையின் வயது 60-க்கு மேல் இருந்தால் அவருக்கான வரி விலக்கு, 50 ஆயிரம் வரை நீளும்.