எல்.ஐ.சி என்றழைக்கப்படும் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் சார்பில் நாடு முழுவதும் உள்ள பெண்களுக்குப் பிரத்யேகமாக `தன் ரேகா’ என்ற புதிய திட்டமும், அதனுடன் உறுதிசெய்யப்பட்ட நன்மைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் கீழ், முதலீடு செய்யப்படும் அசல் தொகை குறிப்பிட்ட கால அவகாசத்துடன் திரும்ப அளிக்கப்படுவதோடு, சில காலத்திற்குப் பிறகு முழு தொகையும் மொத்தமாக வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் திருநங்கைகள், திருநம்பிகள் ஆகியோருக்கும் பொருந்தும் என ஆயுள் காப்பீட்டு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



இந்தத் திட்டம் என்பது தொடர்ந்து பங்குபெறாமல், தனிநபர்கள் யாரையும் இணைக்காமல் மேற்கொள்ளப்படும் சேமிப்புத் திட்டமாக இருக்கும் என்பதால், நிச்சயமாக பல்வேறு நன்மைகள் உறுதி செய்யப்படும் என ஆயுள் காப்பீட்டு நிறுமனமான எல்.ஐ.சி தரப்பில் கூறப்பட்டுள்ளது. தொகை முதலீடு செய்யப்படுவதன் ஆறாவது ஆண்டில் தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும் உறுதியாக தொகை அதிகரித்து சேர்க்கப்படும் என்றும், இந்தக் கால அவகாசம் முடிவடையும் வரை அது சேர்த்துக் கொண்டே இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. தனிநபருக்கான ப்ரீமியம் திட்டங்களில் முதலீடு செய்யப்படும் தொகையை விட சுமார் 125 சதவிகிதம் வரை ஆயுள் காப்பீடு இருப்பதாகக் கூறப்பட்டிருக்கையில், குறிப்பிட்ட கால அவகாசத்தில் மேற்கொள்ளப்படும் முதலீட்டில்  உறுதியளிக்கப்பட்ட தொகையில் சுமார் 125 சதவிகிதம் ஆயுள் காப்பீடு வழங்கப்படும் அல்லது ஆண்டுதோறும் செலுத்தப்படும் முதலீட்டுத் தொகை 7 மடங்கு அல்லது இவை இரண்டில் எது அதிகமான தொகையோ அது வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 


ஒரு ப்ரீமியம் முதலீடு மேற்கொண்டவர் உயிரிழந்தால், அவருடைய முதலீட்டில் சுமார் 125 சதவிகிதம் சேர்க்கப்பட்டு, சில கூடுதல் தொகைகளும் சேர்க்கப்படும் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட ப்ரீமியம் தொகை கட்டியவர்கள் உயிரிழந்தால், அவருடைய முதலீட்டில் சுமார் 125 சதவிகிதம் சேர்க்கப்பட்டு வழங்கப்படும் அல்லது அவர் ஓராண்டில் செலுத்திய ப்ரீமியம் தொகையில் 7 மடங்கு வழங்கப்படும் அல்லது இரண்டு எது அதிகமான தொகையோ, அது வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



மேலும் ஒருவர் இறந்த பின், மொத்தமாக முழு தொகையையும் பெறாமல், அடுத்த 5 ஆண்டுகளில் காப்பீட்டுத் தொகையையும், பிற தொகைகளையும் தவணை முறையில் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளும் வழிவகை செய்யப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சமாக சுமார் 2 லட்சம் ரூபாய் உறுதி செய்யப்பட்டுள்ளது; மேலும் அதிகபட்ச தொகை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. மேலும் இதற்கான வயது அனுமதி குறைந்தபட்சமாக 90 நாள் முதல் 8 ஆண்டுகள் வரை என அந்தந்த காப்பீட்டுத் திட்டங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறது. அதிக பட்ச வயது அனுமதி 35 வயது முதல் 55 வயது வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.