இன்றைய சூழலில் தொழில் தொடங்க ஆர்வமுள்ள நபர்கள் ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 2 லட்சம் வரை சென்னை மாநகராட்சி மூலம் கடனுதவி பெற்றுக்கொள்ளலாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


கொரோனா தொற்றின் பாதிப்பு மக்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கியதோடு, பலருக்கு வேலையின்மையும் ஏற்பட்டது. வேலையில்லாத காரணத்தில் ஏதாவது  தொழில் தொடங்கி வாழ்வில் முன்னேறலாம் என்று நினைத்தால் கூட எங்கு சென்று கடனுதவி பெறமுடியும்? அதற்கு யாரை சூரிட்டியாகப்போட முடியும் என்பது போன்ற பல்வேறு எண்ணங்கள் நம் மனதில் ஓடும். மேலும் வங்கிகளில் கடன் உதவி தருவார்களா? எப்படி அணுகுவது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாகவும், பொருளாதாரத்தில் நலிவடைந்தவருக்கு சிறு தொழில் தொடங்குவதற்கான கடனுதவி வழங்குவதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துள்ளது. இதன்படி, கடனுதவி பெற தகுதிபெற்றவர்கள் யார்? எப்படி அனைத்து விபரங்களையும் தெரிந்துக்கொள்வது என நாமும் இங்கு அறிந்துக்கொள்வோம். 



சென்னையில் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் (TNULM) கீழ் ரூ.5,000 முதல் ரூ.2 லட்சம் வரை கடனுக்காக நிதியுதவி வழங்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் செய்திக்குறிப்பின் வாயிலாகத் தெரிவித்துள்ளது. இதில் தெருவோர வியாபாரிகள், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் பின் தங்கிய வகுப்பினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது.


இதோடு மட்டுமின்றி சுய உதவிக்குழுக்கள் மற்றும் அதன் உறுப்பினர்கள், நகர்ப்புறத்தில் உள்ள ஏழைகள் தொழில் தொடங்க ரூ. 2 லட்சம் முதல் ரூ. 10 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சுய உதவிக்குழுக்கள் தங்களுடைய வங்கி இருப்பை விட நான்கு மடங்கு வரை எந்தவித அடமானமும் இல்லாமல் கடனைப் பெறலாம் எனவும் இதன் மூலம் ரூ. 1 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை கடன் பெறத் தகுதியுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களை தொடங்குவதற்குப் பெறப்படும் கடனுக்கான வட்டிக்கு அரசு மானியம் வழங்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துள்ளது.


மேலும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ள கடனுதவி திட்டம் குறித்து முழுமையாகத் தெரிந்துக்கொள்ளவும், கடன் பெற விரும்பும் பொதுமக்கள் 9444094247, 9444094248 அல்லது 9444094249 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்துக்கொள்ளலாம்.  மேலும் திட்ட மேலாளர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்,  100, அண்ணாசாலை,  கிண்டி, சென்னை- 600 03 என்ற அலுவலக முகவரிக்கு நேரடியாகச் சென்று கேட்டறிந்துக்கொள்ளலாம் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது