பாதுகாப்பான எதிர்காலத்தைப் பெறுவதற்கும், தங்கள் கடும் உழைப்பால் ஈட்டிய பணத்தை இழக்கும் பயமின்றி இருப்பதற்கும் இந்தியர்களால் பெரிதும் நம்பப்படுவது எல்.ஐ.சி. வங்கி, அஞ்சலகம் ஆகியவற்றின் சேமிப்புத் திட்டங்களைப் போலவே, எல்.ஐ.சி காப்பீட்டில் முதலீடு செய்வது பணம் திரும்ப வருவதை உறுதி செய்வதுடன், பாதுகாப்பையும் அளிக்கிறது. இதனால், எல்.ஐ.சி குறிப்பிட்ட வகை நபர்களுக்காக பிரத்யேக திட்டங்களை வகுத்துள்ளது. அரசுக் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி பெரும்பாலும் அனைத்து வயது, பிரிவு ஆகியவற்றைச் சேர்ந்தவர்களுக்கான பல்வேறு காப்பீட்டுத் திட்டங்களை வழங்குகிறது. பெண்களுக்கான பிரத்யேக காப்பீட்டுத் திட்டங்களையும் எல்.ஐ.சி வழங்குகிறது. எல்.ஐ.சி ஆதார் ஷீலா என்பது அப்படியான காப்பீட்டுத் திட்டம்.
எல்.ஐ.சி ஆதார் ஷீலா காப்பீட்டுத் திட்டம். என்றால் என்ன?
பெண்களுக்காகவும், பெண் குழந்தைகளுக்காகவும் தனிநபர் பயன்பாட்டு ரீதியில் ஆயுள் காப்பீட்டு உத்தரவாதத்தை அளிக்கும் திட்டம் எல்.ஐ.சி ஆதார் ஷீலா. இது பல்வேறு பாதுகாப்பு அம்சங்களையும், சேமிப்புத் திட்டங்களையும் கொண்டிருப்பதோடு, திட்டத்தின் காலம் முடிவடைவதற்கு முன், பாலிசிதாரர் எதிர்பாராத விதமாக உயிரிழந்தால் அவரது குடும்பத்திற்கு நிதி ஆதரவைத் தருகிறது. மேலும், அதன் காலம் முடிவடைந்த பிறகு, பாலிசிதாரர் உயிரோடு இருக்கும்பட்சத்தில் மொத்த பணமும் அவருக்கு வழங்கப்படுகிறது.
நாள் ஒன்றுக்கு சுமார் 29 ரூபாய் முதலீடு செய்தால், மொத்தமாக 4 லட்சம் ரூபாயை இந்தத் திட்டத்தில் இணைவது மூலமாகப் பெற முடியும்.
உதாரணமாக, நாள்தோறும் 30 ரூபாய் சேமித்து வந்தால், ஆண்டின் இறுதியில் மொத்தமாக உங்களிடம் 10,950 ரூபாய் கைவசம் இருக்கும். இதே சேமிப்புத் திட்டத்தைத் தொடர்ந்து 20 ஆண்டுகள் சேமித்து வந்தால், உங்கள் 30 வயதில் இதில் இணையும் போது, 20 ஆண்டுகளில் மொத்தமாக உங்கள் சேமிப்புத் தொகை 2.19 லட்சம் ரூபாயாக இருக்கும். இந்தத் திட்டத்தின் கால முடிவடையும் போது, உங்களுக்கு 3.97 லட்சம் ரூபாய் பணம் வழங்கப்படும்.
எல்.ஐ.சி ஆதார் ஷீலா காப்பீட்டுத் திட்டத்தில் இணைவதற்கான குறைந்தபட்சத் தொகை 75 ஆயிரம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் திட்டத்திற்கான அதிகபட்சத் தொகை 3 லட்சம் ரூபாய். எல்.ஐ.சி ஆதார் ஷீலா காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 3 லட்சம் ரூபாய்க்கு மேல் முதலீடு செய்ய முடியாது. இந்தத் திட்டத்திற்கான கனியும் காலம் 10 முதல் 20 ஆண்டுகள் வரை ஆகும். இந்த சேமிப்புக்கான தொகையை மாதாந்திர முறையிலும், காலாண்டு, அரையாண்டு, ஆண்டுக்கு ஒருமுறை ஆகிய கால இடைவேளைகளிலும் முதலீடு செய்யலாம்.
பெண்களுக்காகவே பிரத்யேகமாக வழங்கப்படும் காப்பீட்டுத் திட்டமாக இது இருப்பதால், 8 வயது முதல் 55 வயது வரையிலான பெண்கள் இதில் முதலீடு செய்யலாம். எல்.ஐ.சி இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் எந்த மருத்துவப் பிரச்னைகளும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும் நபர்களுக்கு மட்டுமே இந்தக் காப்பீட்டுத் திட்டம் பொருந்தும்.