ITR Filing: வருமான வரி கணக்கை சமர்பிப்பதற்கான அவகாசம் முடிந்தபிறகும், தாக்கல் செய்பவர்களில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அபராதத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
வருமான வரி கணக்கு தாக்கல்:
இந்தியாவில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்தற்கான சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 2023-24 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் வரும் ஜுலை 31ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. வருமான வரித்துறையின் இணையதளத்தின்படி, ஜூன் 29 ம் தேதி வரையில் ஒரு கோடியே 3 லட்சத்து 92 ஆயிரத்து 552 பேர் 2023-24 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், குறிப்பிட்ட தேதிக்குள் வரி செலுத்த தகுதியானவர்கள், வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் செலுத்த நேரிடும் என்பது விதி.
அபராதங்களும், இழப்பீடுகளும்:
குறிப்பிட்ட அவகாசத்திற்குள் நீங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாவிட்டாலும், ஆண்டு இறுதி வரை தாக்கல் செய்யலாம். ஆனால் அதற்காக நீங்கள் அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். ஆனால், தாமதத்தின் காலத்தைப் பொறுத்து ரூ. 1,000 முதல் ரூ. 10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும், ஐடிஆர் தாக்கல் செய்வதை எவ்வளவு தாமதப்படுத்துகிறீர்களோ, அதற்கு ஏற்ப வரியை குறைப்பதற்கான சில சில விலக்குகளையும் இழக்க நேரிடும். அதிகபட்சமாக வருமான வரித் துறையின் கூடுதல் ஆய்வுக்கும் நீங்கள் உட்படுத்தப்படலாம். அதேநேரம், தாமதமாக வருமான வரி கணக்கு செலுத்தினாலும், சிலருக்கு மட்டும் அபராதங்களில் விலக்கு அளிக்கப்படுகிறது.
யாருக்கு அபராதங்களில் இருந்து விலக்கு கிடைக்கும்?
- வரி செலுத்த வேண்டிய அளவிற்கு வருவாயை ஈட்டாத ஒருவர், காலக்கெடுவுக்குப் பிறகும் ரிட்டன் தாக்கல் செய்வதற்கு எந்த அபராதமும் செலுத்த வேண்டியதில்லை.
- பழைய வரி விதிப்பின்படி, ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சமாக இருந்தால் அபராதம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.
- ஆண்டு வருமானம் ரூ.3 லட்சமாக இருந்து வயது 60 ஆக இருப்பவர்களும், அவகாசத்தை கடந்து ஐடிஆர் தாக்கல் செய்தாலும் அபராதம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை.
- 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான விலக்கு வரம்பு ரூ.5 லட்சமாக உள்ளது.
- புதிய வரி விதிப்பின்படி, 3 லட்சம் ரூபாய் வருமானம் பெறுவோருக்கு வரி விலக்கு பலன் கிடைக்கும்.