SIP Calculator: SIP  எனப்படும் முறையான முதலீட்டு திட்டம் மூலம் வெறும் ஆயிரம் ரூபாயுடன் முதலீட்டை தொடங்கி, 14 லட்சம் ரூபாய் வரை சேமிக்க முடியும்.


முறையான முதலீட்டு திட்டம் (SIP):


பெற்றோர் ஆக பதவி உயர்வு பெற்ற தம்பதிக்கான பொறுப்புகள் அதிகரிக்கின்றன. அதன்படி,  நீங்கள் ஒரு குழந்தைக்கு தந்தையாக இருந்தால், கல்வி முதல் திருமணம் வரையிலான பல்வேறு செலவின விஷயங்கள் உங்கள் மனதை சலனமடையச் செய்யும். பொறுப்புகளை பார்த்துக் கொள்ளலாம் என விட்டுவிடாமல், குழந்தை பிறந்தவுடன் நிதித் திட்டமிடலைத் தொடங்குவதே நல்லது.  இதனால் எதிர்கால இலக்குகளை எளிதாக அடைய முடியும். அதேநேரம், நீங்கள் எப்போதும் பெரிய தொகையுடன் முதலீடு செய்யத் தொடங்க வேண்டும் என்று அவசியமில்லை. மிகச் சிறிய தொகையில் உங்கள் குழந்தைக்காக முதலீடு செய்யத் தொடங்கி, காலப்போக்கில் முதலீட்டை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கலாம். இந்த வழியில், குழந்தைக்கு 18 வயது வரை பெரிய தொகையை டெபாசிட் செய்யலாம். 


குழந்தை பிறந்ததும் SIP சேமிப்பை தொடங்குங்கள்:


உங்கள் குழந்தைக்கு ஒரு பெரிய தொகையைச் சேமிக்க விரும்பினால், பிறக்கும்போதே SIP ஐத் தொடங்குவது நல்லது.  சந்தையுடனான நேரடி பிணைப்பு இருப்பதால்,  SIP இல் உங்களுக்கு சில ஆபத்துகள் இருக்கும்.  ஆனால் நீண்ட கால SIP உங்களுக்கு வேறு எந்த திட்டத்திலும் சாத்தியமில்லாத வருமானத்தை அளிக்கும். மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபியின் சராசரி நீண்ட கால வருமானம் 12% என்று நிபுணர்கள் நம்புகின்றனர். சில சமயங்களில் இதைவிட அதிகமாகவும் இருக்கலாம்.


வெறும் 1000 ரூபாயில் தொடங்குங்கள்


குழந்தை பிறந்ததும் 1000 ரூபாய்க்கு SIP ஐத் தொடங்கினால், 18 வயதிற்குள் நீங்கள் 14 லட்ச ரூபாய்க்கு மேல் சேமிக்கலாம். இதற்கு நீங்கள் ஒவ்வொரு வருடமும் 10 சதவ்கிகித கூடுதல் தொகையை SIP-யில் முதலீடு செய்ய வேண்டும்.  டாப்-அப் எஸ்ஐபி என்பது உங்கள் வழக்கமான எஸ்ஐபி தவணைத் தொகையில் கூடுதல் தொகையை  சேர்ப்பதாகும். 


ரூ.14,41,466 வருவாய் எப்படி சாத்தியம்?


குழந்தை பிறந்து ஒரு மாதத்திற்குப் பிறகு நீங்கள் 1000 ரூபாய்க்கு SIP ஐ ஆரம்பித்தீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஒரு வருடத்திற்கு 1000 ரூபாய் மட்டுமே டெபாசிட் செய்யுங்கள். அடுத்த ஆண்டு நீங்கள் அதை ரூ.1000-ல் 10% அதிகரிக்க வேண்டும், அதாவது ரூ.100. இந்த வழியில் உங்கள் SIP அடுத்த ஆண்டு ரூ.1100 ஆகிவிடும். அடுத்த வருடம் ரூ.1100-ல் 10%, அதாவது ரூ.110 ஆக அதிகரிக்க வேண்டும், அதாவது உங்கள் எஸ்ஐபி ரூ.1210 ஆகிவிடும். அதேபோல், ஒவ்வொரு ஆண்டும் தற்போதைய தொகையில் 10% சேர்க்க வேண்டும்.


இந்த முறையில் SIP-யில் நீங்கள் 18 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். இந்த வழியில், 18 ஆண்டுகளில் நீங்கள் மொத்தம் ரூ.5,47,190 முதலீடு செய்வீர்கள். ஆனால் இதற்கான வட்டியான 12 சதவிகிதம் மூலம் ரூ.8,94,276 வருவாயாக கிடைக்கும். இந்த வழியில், 18 ஆண்டுகளுக்குப் பிறகு, SIP இலிருந்து ரூ. 14,41,466 ஐப் பெறுவீர்கள், அதை உங்களது குழந்தையின் தேவையான செலவுகளுக்கு பயன்படுத்தலாம். மறுபுறம், வருமானம் அதிகமாக இருந்தால், அதாவது வட்டி 15 சதவீதம் வரை இருந்தால் 18 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுக்கு ரூ.19,44,527 வரை கிடைக்கும்.