IT Return Filing 2024: வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யும்போது எந்தெந்த ஆவணங்களை கைவசம் வைதிருக்க வேண்டும் என்ற விவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.
வருமான வரி கணக்கு தாக்கல் 2024:
2023-24 நிதியாண்டு அல்லது மதிப்பீட்டு ஆண்டு 2024-25க்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யும் செயல்முறை வேகமாக நடந்து வருகிறது. ஒருவேளை, நீங்கள் இன்னும் ITR 2024 ஐ தாக்கல் செய்யவில்லை என்றால், அபராதத்தை தவிர்க்க வரும் ஜூலை 31ம் தேதிக்குள் வரிமான வரிக் கணக்கை தாக்கல் செய்துவிடுங்கள். அதை நீங்களே செய்ய விரும்பினால், அதுவும் மிகவும் கடினம் அல்ல. பெரும்பாலான விவரங்கள் உங்கள் ஐடிஆரில் முன்பே நிரப்பப்பட்டிருக்கும். வருமானத்தை தாக்கல் செய்வதற்கு முன், ஒவ்வொரு வரி செலுத்துபவரும் சில ஆவணங்களை முன்கூட்டியே தயார் செய்து வைத்திருக்க வேண்டும். இதனால், ரிட்டர்ன் தாக்கல் செய்வதில் எந்த இடையூறும் இருக்காது. அதன்படி, கைவசம் இருக்க வேண்டிய ஆவணங்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
படிவம்-16:
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு படிவம்-16 மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு பணியாளருக்கும் அவரது நிறுவனத்தால் படிவம்-16 வழங்கப்படுகிறது. இதன் மூலம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது எளிதாக இருக்கும். படிவம்-16 இல், வரி செலுத்துபவரின் மொத்த வருமானத்துடன், வருமானம், நிகர வருமானம், டிடிஎஸ் போன்றவற்றிலிருந்து விலக்குகள் பற்றிய முழுமையான தகவல்கள் உள்ளன. ITR இல் நிரப்பப்பட வேண்டிய பெரும்பாலான விவரங்கள் படிவம்-16 இல் உள்ளன.
வீட்டுக் கடன் விவரம்:
நீங்கள் ஏதேனும் ஒரு வங்கி அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனத்தில் (NBFC) வீட்டுக் கடன் பெற்றிருந்தால், அந்த வங்கியிடமிருந்து முந்தைய நிதியாண்டிற்கான கடன் அறிக்கையை பெறுவது அவசியம். அதன் மூலம் உங்கள் கடனுக்கு நீங்கள் எவ்வளவு வட்டி செலுத்தினீர்கள் என்பதை தெளிவுபடுத்துகிறது. வருமான வரிப் பிரிவு 24(B) வீட்டுக் கடனுக்கான வட்டிக்கு ஒரு நிதியாண்டில் ரூ.2 லட்சம் வரை வரி விலக்கு கோரலாம்.
முதலீட்டுச் சான்றுகள் (Proofs For Investment):
வரிச் சேமிப்பிற்கு வருமான வரியின் 80C, 80CCC, 80CCD ஆகியவற்றின் கீழ் வரும் வழிகளில் முதலீடு செய்தால், அந்த முதலீடுகள் தொடர்பான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். அந்த ஆவணங்கள் வரி விலக்கு மற்றும் தள்ளுபடிகள் கோருவதற்கு பயனுள்ளதாக இருக்கும்.
மூலதன ஆதாய ஆவணங்கள்:
பரஸ்பர நிதிகள், பங்குச் சந்தை அல்லது ரியல் எஸ்டேட் போன்ற சொத்து வகைகளில் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் லாபம் ஈட்டினால், அது மூலதன ஆதாயம் எனப்படும். ஐடிஆர் தாக்கல் செய்யும் போது, மூலதன ஆதாய வடிவில் ஈட்டிய லாபம் பற்றிய தகவல்களையும் கொடுக்க வேண்டும்.
ஆதார் அட்டை, பான் அட்டை:
வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது ஆதார் மற்றும் பான் விவரங்களை சரிபார்ப்பதும் முக்கியம். எனவே, ரிட்டன் தாக்கல் செய்வதற்கு முன் இந்த இரண்டு ஆவணங்களையும் கைவசம் வைத்திருக்க வேண்டும். உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகள் இருந்தால், அவற்றைப் பற்றிய தகவல்களை வழங்குவது அவசியம்.
சம்பள சீட்டு (PAY SLIP)
வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் போது, வரி செலுத்துபவர் தனது சம்பள சீட்டையும் வைத்திருக்க வேண்டும். சம்பள சீட்டில், அந்த நபரின் வருமானம். DA, HRA போன்றவற்றைப் பற்றிய தகவல்களைக் கொண்டுள்ளது. நீங்கள் முதன்முறையாக வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்கிறீர்கள் என்றால், மேலே குறிப்பிட்டுள்ள முக்கிய விஷயங்களை மனதில் கொள்ளுங்கள். நீங்கள் ஐடிஆர் தாக்கல் செய்வது புதிதல்ல என்றாலும், அந்த நேரத்தில் கவனமாக இருக்க வேண்டும். சிறு தவறு நடந்தாலும் வருமான வரித்துறையின் நோட்டீஸை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.