வருமானத்தின் முதல் செலவு சேமிப்பாக இருக்க வேண்டும் என்று சொல்வதுண்டு. அப்படி, மாதந்தோறும் செலவுகள் இருப்பதை போலவே, கொஞ்சம் பணத்தை சேமிக்க வேண்டும். சேமிப்பு முக்கியம் என்ற எண்ணம் இருப்பவர்களாக இருந்தால், அவர்களுக்கு ஏற்ற சிறு சேமிப்பு திட்டங்களை தபால் துறை வழங்குகிறது. அதில் மாதாந்திர வருமான திட்டம் (Monthly Income Scheme Account (MIS)) பற்றிய விவரங்களை காணலாம்.
மாதாந்திர வருமான திட்டம்:
போஸ்ட் ஆஃபீஸ் மாதாந்திர வருவாய் திட்டம் (POMIS) என்பது நிதியமைச்சகத்தின் நேரடிப் பார்வையின் கீழ் மக்கள் பயன்பாட்டுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்று. மிகுந்த நம்பகத்தன்மை வாய்ந்த சேமிப்புத் திட்டம் என்று சொல்லப்படுகிறது.
இது அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் திட்டமாக இருப்பதால் முதிர்வு காலம் வரை உங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும்.
போஸ்ட் ஆபிஸ் எம்ஐஎஸ்-க்கான லாக்-இன் காலம் 5 ஆண்டுகள். திட்டம் முதிர்ச்சியடையும் போது முதலீடு செய்யப்பட்ட தொகையை திரும்பப் பெறலாம் அல்லது மீண்டும் முதலீடு செய்யலாம்.
முதலீடு தொகை எவ்வளவு?
தனிநபர் ஒருவர் ரூ.9 லட்சம் வரையுலும் ரூ.15 லட்சம் வரை கூட்டாகவும் அதிகபட்சமாக 5 ஆண்டுகளுக்கு சேமித்து வைக்கலாம். குறைந்தப்பட்சம் தொகை ரூ.1000.
வட்டி எவ்வளவு?
இத்திட்டத்தின் கீழான சேமிப்புகளுக்கு ஆண்டுக்கு 7.4% வட்டி என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது. உதாரணத்துக்கு நீங்கள் ரூ.4.5 லட்சம் தொகையை 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்திருந்தால் உங்களுக்கு மாதந்தோறும் ரூ.2,475 வட்டியாகக் கிடைக்கும்.
யாரெல்லாம் இந்த திட்டத்தில் பயனடைய முடியும்?
18 வயதை தாண்டியவராக இருக்க வேண்டும். உங்கள் மைனர் வாரிசின் பெயரிலும் ஆரம்பிக்கலாம். ஆனால் அவர்கள் அந்தப் பணத்தை 18 வயது பூர்த்தியான பின்னரே பெற முடியும். ஓராண்டுக்கு முன்னரே பணத்தை எடுத்தால் எந்த பலனும் இருக்காது. 1 முதல் 3 ஆண்டுகளுக்குள் எடுத்தால் செலுத்திய தொகையில் 2% அபராதமாகப் பிடிக்கப்படும். 3 முதல் 5 ஆண்டுகளில் திரும்பப் பெற்றால் மொத்த பணத்தில் 1% அபராதம் பிடிக்கப்படும்.
எப்படி திட்டத்தைத் தொடங்குவது?
- முதலில் போஸ்ட் ஆஃபீஸ் சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டும். இதில் குறைந்தபட்ச தொகையாக ரூ.500 இருக்க வேண்டும்.
- போஸ்ட் ஆஃபீஸ் மன்த்லி இன்கம் ஸ்கீம் (POMIS) அப்ளிகேஷன் வாங்க வேண்டும். இந்தியன் போஸ்ட் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் கிடைக்கும். இல்லையெனில் அருகில் உள்ள அலுவலகத்திற்கு சென்று வாங்கலாம்.
- அதில் உங்கள் புகைப்படம், அடையாள அட்டை நகல் 2, ஆகியனவற்றை இணைக்க வேண்டும். திட்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
- முதல் தவணையை பணமாகவோ அல்லது செக் மூலமாகவோ செலுத்தலாம். அவ்வளவுதான்.
- மாதம் வருமானம் வேண்டும் என்பவர்களுக்கு இந்த திட்டம் பாதுகாப்பானது என்று நிதி ஆலோசகர்கள் பரிந்துரைக்கின்றனர்.
https://www.indiapost.gov.in/Financial/pages/content/post-office-saving-schemes.aspx - என்ற இணைப்பை க்ளிக் செய்து இந்திய போஸ்ட் வழங்கும் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.