Home Loan Hidden Charges: ரீஃபைனான்சிங் திட்டத்தை செயல்படுத்த, வங்கிகள் சில கூடுதல் கட்டணங்களை வசூலிக்கின்றன.


வீட்டுக் கடன் மீதான கட்டணங்கள்:


வங்கிகள் கடன் வழங்கும் போது பல மறைமுகக் கட்டணங்களை விதிக்கின்றன, இதனை பலரும் அறிவதில்லை. அந்த வகையில், பொதுமக்கள் அதிகம் பெறும் நீண்ட காலம் செலுத்தக்கூடிய வீட்டுக் கடனின் மீதும் பல வகையான கட்டணங்களை விதிக்கப்படுகின்றன. இந்தியாவில், குறிப்பாக வட்டி விகிதங்கள் குறைவாக இருக்கும்போது,  வீட்டுக் கடனுக்கான ரீஃபைனான்சிங் அல்லது கடன் டிரான்ஸ்ஃபர் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இது உங்கள் கடனின் வட்டி விகிதத்தைக் குறைத்து உங்கள் EMIஐக் குறைக்கலாம்.


ரீஃபைனான்சிங் என்றால் என்ன?


ரீஃபைனான்சிங் என்பது வெவ்வேறு விதிமுறைகள் மற்றும் வட்டி விகிதங்களைக் கொண்ட புதிய கடனுடன், ஏற்கனவே உள்ள கடனை மாற்றும் செயல்முறையாகும். ஏற்கனவே கடன் வழங்கியவரிடமோ அல்லது புதியதாக கடன் வழங்கும் நபரிடமோ இந்த திட்டத்தை செயல்படுத்தலாம். இதன் மூலம் கடந்த காலத்தில் அதிக வட்டி விகிதத்தில் வாங்கிய கடனை, குறைந்த வட்டி விகிதத்தில் கிடைக்கும் புதிய கடனுடன் சேர்த்து செலவை குறைத்து சேமிப்பை அதிகரிக்கலாம். ஆனால் நீங்கள் ரீஃபைனான்சிங் செய்ய முடிவு செய்வதற்கு முன், இந்த செயல்முறையுடன் தொடர்புடைய மறைக்கப்பட்ட செலவுகளைப் புரிந்துகொள்வது அவசியம். இந்த செலவுகள் உங்கள் சேமிப்பைக் குறைக்கலாம்.


செயலாக்க கட்டணங்கள்:


ரீஃபைனான்சிங் செய்யும் போது புதிய கடனைப் பெறுவது மொத்தக் கடன் தொகையில் 0.5% முதல் 2% வரை செயலாக்கக் கட்டணத்தைச் செலுத்தும். உதாரணமாக, நீங்கள் ரூ.20 லட்சம் கடன் வாங்கியிருந்தால், ரூ.10,000 முதல் ரூ.40,000 வரை செயலாக்கக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இருப்பினும், சில வங்கிகள் விளம்பர சலுகைகளின் கீழ் தள்ளுபடிகளையும் வழங்கலாம், ஆனால் இந்த தள்ளுபடிகள் அரிதாகவே கிடைக்கின்றன.


தொழில்நுட்ப மற்றும் சட்ட கட்டணங்கள்:


புதிய வங்கி அல்லது கடன் வழங்குபவர் சொத்து மற்றும் சட்ட ஆவணங்களின் நிலையை சரிபார்ப்பர். இதற்கு இரண்டு முக்கிய வகையான கட்டணங்கள் உள்ளன:


சட்டக் கட்டணம்: சொத்தின் விவரங்களைச் சரிபார்க்கும் வழக்கறிஞர் அல்லது சட்டக் குழுவுக்கு இந்தக் கட்டணம் செலுத்தப்படுகிறது. இந்த கட்டணம் ரூ.5,000 முதல் ரூ.15,000 வரை இருக்கலாம்.


தொழில்நுட்ப கட்டணம்: இந்த கட்டணம் சொத்தின் மதிப்பீட்டிற்கானது. இந்த கட்டணம் ரூ.3,000 முதல் ரூ.5,000 வரை இருக்கலாம்.


பதிவு கட்டணம் மற்றும் முத்திரை கட்டணம்


சில மாநிலங்களில், தற்போதுள்ள கடன் ஒப்பந்தம் முத்திரையிடப்பட்டு ரீஃபைனான்சிங் செய்யும் போது மீண்டும் பதிவு செய்யப்பட வேண்டும். முத்திரை வரி சொத்தின் மதிப்பைப் பொறுத்தது மற்றும் 3% முதல் 7% வரை இருக்கலாம். இது தவிர, பதிவு கட்டணம் ரூ.50,000 முதல் 1% வரை இருக்கலாம். சில மாநிலங்களில், இந்த கட்டணம் அதிகமாக இருக்கலாம். உதாரணமாக இமாச்சல பிரதேசத்தில் இது 8% வரை அடையலாம்.


முன்கூட்டியே செலுத்தும் அபராதம்:


உங்களுடைய தற்போதைய வீட்டுக் கடன் நிலையான வட்டி விகிதத்தில் இருந்தால், நீங்கள் அதை நேரத்திற்கு முன்பே திருப்பிச் செலுத்த விரும்பினால், அதற்கும் நீங்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த அபராதம் நிலுவையில் உள்ள கடன் தொகையில் 2% முதல் 4% வரை இருக்கலாம். இருப்பினும், ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளதால், மிதக்கும் வட்டி விகிதங்களுடன் கூடிய கடன்களை முன்கூட்டியே செலுத்தும்போது அபராதம் விதிக்கப்படாது.


நிர்வாக செலவுகள்:


ரீஃபைனன்சிங் செயல்முறைக்கு அடையாளச் சான்று, வருமானச் சான்று, சொத்து ஆவணங்கள் மற்றும் ஏற்கனவே உள்ள கடன் அறிக்கைகள் போன்ற பல ஆவணங்கள் தேவைப்படுகின்றன. இந்த ஆவணங்களைச் சமர்ப்பித்து, செயல்முறையை முடிப்பதற்கு நேரமும் பணமும் செலவாகும். இதற்காக சில வங்கிகள் நிர்வாகக் கட்டணத்தையும் வசூலிக்கின்றன.