Aadhar Money Withdrawal: ஆதார் அட்டையை பயன்படுத்தி வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கு என, தனி வரம்பு உள்ளது.


ஆதார் மூலம் பணம் பெறும் முறை:


இந்தியாவில் பெரும்பாலான கொடுத்தல், வாங்கல் தற்போது ஆன்லைன் பேமெண்ட் மூலம் செய்யப்படுகின்றன. எனவே, மக்கள் அதிக பணத்தை கையில் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. ஆனால் இன்னும் சில வேலைகளுக்கு கையில் பணம் தேவைப்படுகிறது. இந்தியாவில், யாருக்காவது பணம் தேவைப்பட்டால், அவர்கள் வங்கிகளை அணுக வேண்டி உள்ளது. அல்லது பணம் எடுக்க ஏடிஎம்முக்கு செல்ல வேண்டும். ஆனால் இது தவிர உங்களுக்கு மற்றொரு எளிய முறை உள்ளது. உங்கள் ஆதார் அட்டை மூலமாகவும் பணத்தை எடுக்கலாம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்? ஆதார் அட்டை மூலம் பணம் எடுப்பது எப்படி. அதற்கான செயல்முறை மற்றும் வரம்பு என்ன என்பதை இந்த தொகுப்பில் விளக்கப்பட்டுள்ளது.  


ஆதார் அட்டை மூலம் பணம் எடுப்பது எப்படி?


பணம் எடுக்க விரும்பினால், நீங்கள் வங்கி அல்லது ஏடிஎம் இயந்திரத்தை நாட வேண்டியதில்லை. உங்கள் ஆதார் அட்டையைப் பயன்படுத்தியும் பணத்தை எடுக்கலாம். ஆனால் இதற்கு உங்கள் ஆதார் அட்டை உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருப்பது அவசியம், அப்போதுதான் இந்த வசதியைப் பயன்படுத்த முடியும். நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) ஆதார் அட்டையில் இருந்து பணத்தை எடுக்க ஆதார் செயல்படுத்தப்பட்ட கட்டண முறையை (ஏஇபிஎஸ்) அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் உங்கள் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி கைரேகையை வைத்து எந்த மைக்ரோ ஏடிஎம்மிலும் பணம் எடுக்கலாம். 


வழிமுறை என்ன?


முதலில் மைக்ரோ ஏடிஎம்மில் உங்களின் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிட வேண்டும். இதற்குப் பிறகு, சரிபார்ப்புக்காக கைரேகை ஸ்கேனரில் உங்கள் கட்டைவிரல் அச்சைக் கொடுக்க வேண்டும். அதனை தொடர்ந்து பல பரிவர்த்தனை விருப்பங்கள் காண்பிக்கப்படும். இதில் பணப் பரிமாற்றம் மற்றும் பணத்தை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். இதில் பணம் எடுக்க வேண்டும் என்றால், நீங்கள் பணம் எடுப்பதற்கான விருப்பத்தை கிளிக் செய்து தொகையை உள்ளிட வேண்டும். இதற்குப் பிறகு, மைக்ரோ ஏடிஎம்மை நடத்தும் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட நபர் உங்களுக்கான பணத்தைத் தருவார். உங்கள் கணக்கில் இருந்து பணம் கழிக்கப்படும் மற்றும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் செய்தி மூலம் தகவல் பெறப்படும். 


வரம்பு என்ன?


ஆதார் அட்டையில் இருந்து பணம் எடுப்பதற்கு வெவ்வேறு வங்கிகள் வெவ்வேறு வரம்புகளை நிர்ணயித்துள்ளன. சில வங்கிகளில் இந்த வரம்பு ரூ.10 ஆயிரமாக உள்ளது. சில வங்கிகளில் இந்த வரம்பு ரூ.50 ஆயிரமாக உள்ளது. சில வங்கிகள் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆதார் செயல்படுத்தப்பட்ட கட்டண முறையை முடக்கியுள்ளன.