Gratuity Rules: கிராட்சுவிட்டி பண விவகாரத்தில் ஊழியர்களுக்கு என்னென்ன உரிமைகள் உள்ளன என்பது கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


கிராட்சுவிட்டி என்றால் என்ன?


ஒரு தனியார் அல்லது அரசு நிறுவனத்தில் 10 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் பணிபுரிந்தால், அந்த நிறுவனம் அனைத்து ஊழியர்களுக்கும் கிராட்சுவிட்டி எனப்படும் பணிக்கொடையின் பலனை வழங்க வேண்டும். அதேநேரம், ஒரு ஊழியர் நிறுவனத்தில் 4 ஆண்டுகள் மற்றும் 8 மாதங்கள் பணிபுரிந்திருந்தால், அவரது பணிக்காலம் முழு 5 ஆண்டுகளாக கருதப்படும் மற்றும் 5 ஆண்டுகள் கணக்கீட்டின்படி அவருக்கு பணிக்கொடைத் தொகை வழங்கப்படும். அதேநேரம், ஊழியர் 4 ஆண்டுகள் மற்றும் 8 மாதங்களுக்கு குறைவாக பணிபுரிந்திருந்தால், அவரது பணிக்காலம் 4 ஆண்டுகளாக கணக்கிடப்படும். அத்தகைய சூழலில் அவருக்கு பணிக்கொடை கிடைக்காது.


பணிக்கொடை விதிகள்:


பணிக்கொடை என்பது எந்தவொரு ஊழியருக்கும் அவரது சிறந்த சேவைகளுக்கான வெகுமதியாக வழங்கப்படும் தொகையாகும். இருப்பினும், ஒரு ஊழியர் 5 ஆண்டுகள் பணிபுரிந்த பின்னரே பணிக்கொடையைப் பெற தகுதிபெறுவர். பணிக்கொடையின் அளவு ஊழியர் பணியை விட்டு வெளியேறும் நேரத்திலோ அல்லது ஓய்வு பெறும் நேரத்திலோ அவரது பணிக் காலத்தின் அடிப்படையிலோ வழங்கப்படும். ஆனால் சில சூழ்நிலைகளில், நிறுவனம் விரும்பினால், அது ஊழியரின் பணிக்கொடையையும் வழங்காமல் நிறுத்தலாம். 


எப்போது கிராட்சுவிட்டி நிறுத்தப்படலாம்?


ஊழியரின் பணிக்கொடைத் தொகையை காரணமின்றி நிறுவனத்தால் நிறுத்த முடியாது. அதேநேரம், ஒரு ஊழியர் நெறிமுறையற்ற நடத்தையில் குற்றம் சாட்டப்பட்டால், அவரது அலட்சியத்தால் நிறுவனம் பெரிய இழப்பை சந்தித்தால், அவரது பணிக்கொடைத் தொகையை வழங்காமல் இருக்க நிறுவனத்திற்கு உரிமை உண்டு.


ஆதாரங்கள் அவசியம்:


நிறுவனம் ஊழியரின் பணிக்கொடையை நிறுத்தினால், முதலில் அதற்கான ஆதாரத்தையும் அதற்கான காரணத்தையும் முன்வைக்க வேண்டும். நிறுவனம் கூறும் காரணங்கள், ஊழியருக்கு ஒரு ஷோ காஸ் நோட்டீஸ் ஆக அனுப்ப வேண்டும். இதையடுத்து இரு தரப்பு வாதமும் கேட்கப்பட்டு, ஊழியர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் மட்டுமே பணிக்கொடைத் தொகை நிறுத்தப்பட வேண்டும். ஆனால் அப்படிப்பட்ட சூழலிலும், நிறுவனம் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை மட்டுமே கழித்துக் கொள்ளும்.


ஊழியர்களின் உரிமை என்ன?


5 வருடங்கள் நன்றாக வேலை செய்த பிறகும், நிறுவனம் எந்த காரணமும் இல்லாமல் கிராட்சுவிட்டியை நிறுத்தினால், நிறுவனம் அவருக்கு பணிக்கொடைத் தொகையை வழங்கவில்லை என்றால், ஊழியர் இது தொடர்பாக நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பலாம். இதற்குப் பிறகும் அவரது பிரச்னை தீர்க்கப்படாமல், அவருக்குத் தொகை வழங்கப்படாவிட்டால், அந்த ஊழியர் நிறுவனம் மீது மாவட்ட தொழிலாளர் ஆணையரிடம் புகார் செய்யலாம். வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், நிறுவனம் அபராதம் மற்றும் வட்டியுடன் பணிக்கொடைத் தொகையை செலுத்த வேண்டும்.


நிறுவனத்திற்கான பிரத்யேக உரிமை:


இதனிடையே, நிறுவனம் அல்லது அமைப்பு பணிக்கொடைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படாதபோது, ​அங்கு ​பணிபுரியும் ஊழியர்கள் பணிக்கொடைச் சட்டத்தின் கீழ் வரமாட்டார்கள். அத்தகைய சூழ்நிலையில், கிராட்சுவிட்டி கொடுப்பதும் கொடுக்காததும் நிறுவனத்தின் விருப்பமாகும்.