Bank Loan: ஃப்ளெக்ஸி கடன், ஓவர் டிராஃப்ட் மற்றும் தனிநபர் கடன் ஆகியவற்றின், சாதக பாதகங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
வங்கிக் கடன் திட்டங்கள்:
வங்கிகள் பயனாளர்களின் தனிப்பட்ட தேவைகளுக்கான தனிநபர் கடன் திட்டங்களை வழங்குகின்றன. மேலும், மற்ற நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஓவர் டிராஃப்ட் வசதி மற்றும் ஃப்ளெக்ஸி கடன் போன்ற நிதித் தயாரிப்புகளையும் முன்னெடுக்கின்றன. அவற்றுக்கிடையேயான வேறுபாடுகளை நீங்கள் புரிந்து கொண்டால் மட்டுமே, அவற்றில் உங்கள் தேவைகளுக்கு எது சிறந்தது என்பதை சுயமாக தீர்மானிக்க முடியும்
ஓவர் டிராஃப்ட் வசதி:
உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் கூட, இருப்புத் தொகையை விட அதிகமாக எடுக்க வங்கி வழங்கும் வசதியே ஓவர் டிராஃப்ட் ஆகும். நீங்கள் ஒரு குறிப்பிட்ட வரம்பு வரை பணம் எடுப்பதற்கு வங்கி ஓவர் டிராஃப்ட் வரம்பை நிர்ணயிக்கிறது. ஓவர் டிராஃப்ட் கணக்கின் தொகைக்கு வங்கி வட்டி விதிக்கிறது. ஓவர் டிராஃப்டில், நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பணம் எடுக்கும் வசதி வழங்கப்படுகிறது. மேலும், உங்கள் வசதிக்கேற்ப திருப்பிச் செலுத்தலாம். வங்கி நிர்ணயித்த முன்-அங்கீகரிக்கப்பட்ட ஓவர் டிராஃப்ட் வரம்பிற்குள் இருக்கும் போது, வங்கியிலிருந்து பணத்தை எடுக்கலாம். இது உங்கள் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்ட கடன் வசதி ஆகும்.
டிராப்லைன் ஓவர் டிராஃப்ட் வசதி:
இதில் தொடக்கத்தில் தீர்மானிக்கப்பட்ட மொத்த கடன் வரம்பு ஒவ்வொரு மாதமும் படிப்படியாகக் குறைக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு இந்த கடன் வரம்பு பூஜ்ஜியமாக மாறும். நீங்கள் டிராப்லைன் ஓவர் டிராஃப்ட் வசதியைப் பெற்ற வங்கி அல்லது NBFC இன் கொள்கையின்படி, கடன் வரம்பு மாதாந்திர, காலாண்டு, ஆறு மாதங்கள் அல்லது ஆண்டு அடிப்படையில் குறைக்கப்படும். உதாரணமாக, நீங்கள் வருடாந்திர டிராப்லைன் திட்டத்தின் கீழ் 3 வருட கால அவகாசத்துடன் ரூ.6 லட்சம் ஆரம்ப ஓவர் டிராஃப்ட் வசதியை எடுத்துள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த ரூ.6 லட்சத்தை ஓரிரு முறை அல்லது பல்வேறு தவணைகளில் ஆண்டு இறுதிக்குள் எடுக்கலாம். டிராப்லைன் ஓவர் டிராஃப்ட் திட்டத்தில், கடன் வரம்பு முதல் ஆண்டுக்கு பிறகு ரூ.4 லட்சமாகவும், 2 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.2 லட்சமாகவும் குறைகிறது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு பூஜ்ஜியமாக இருக்கும். இது காலக்கடன்+ஓவர் டிராஃப்ட் வசதியின் ஒருங்கிணைந்த திட்டமாக பார்க்கப்படலாம்.
தனிநபர் கடன்:
தனிநபர் கடன் என்பது ஒரு வகை காலக்கெடுவுடன் கூடிய கடன் ஆகும். அதை மாதந்திர தவணை வடிவில் திருப்பிச் செலுத்த வேண்டும். வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் உங்களுக்கு ஒரு மொத்த தொகையை வழங்குகின்றன. கடன் வாங்கியவர் பணத்தை முன்பணமாகப் பெற்று அடுத்த மாதம் முதல் சமமான தவணைகளில் திருப்பிச் செலுத்துவர்.
ஃப்ளெக்ஸி கடனை:
இதனை ஒரு வகையான தனிநபர் கடன் மற்றும் ஓவர் டிராஃப்ட் வசதியாக பார்க்கலாம். இதில், NBFC அல்லது வங்கி தனது வாடிக்கையாளருக்கு அவரது வங்கிக் கணக்கில் முன்கூட்டியே ஒப்புதல் அளிக்கப்பட்ட கடனை டெபாசிட் செய்கிறது. தேவைப்பட்டால் வாடிக்கையாளர் அதைப் பயன்படுத்தலாம். வாடிக்கையாளர் தனது வசதிக்கேற்ப இந்தக் கடனை முன்கூட்டியே செலுத்தலாம். ஃப்ளெக்ஸி லோன் கணக்கில் இருந்து எடுக்கப்படும் தொகைக்கு மட்டுமே வட்டி வழங்கப்படும் என்பது இதன் சிறப்பு அம்சம். மீதமுள்ள தொகைக்கு வட்டி வராது.
ஃப்ளெக்ஸி கடன் Vs ஓவர் டிராஃப்ட் Vs தனிநபர் கடன்:
ஃப்ளெக்ஸி கடன் குறைந்த வட்டி விகிதத்துடன் வருகிறது மற்றும் எளிதில் அணுகக்கூடியது. எனவே, குறைந்த நேரத்தில் அதிக பணம் எடுக்க விரும்புவோருக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும். இது நிலையான முன்பணம் செலுத்தும் விருப்பத்துடன் வருவதால், எதிர்காலத்தில் திருப்பிச் செலுத்த பணம் இல்லாதவர்கள் இதைத் தேர்வு செய்யலாம். இடைப்பட்ட பணவரவு உள்ளவர்களுக்கு ஓவர் டிராஃப்ட் வசதி நல்லது. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் கடன் வசதியைப் பெறலாம். மருத்துவச் செலவுகள் மற்றும் பயணம் போன்ற குறிப்பிட்ட தேவைகளுக்கு மட்டுமே தனிநபர் கடன் எடுக்கப்பட வேண்டும். இது கடைசி விருப்பமாக வைக்கப்பட வேண்டும். ஏனென்றால், மற்றவற்றை விட தனிநபர் கடன் அதிக வட்டி விகிதங்களைக் கொண்டுள்ளது.