New Rule From 1st Nov: இந்தியாவில் நவம்பர் 1ம் தேதி முதல் கிரெடிட் கார்ட் தொடங்கி, ஐஆர்சிடிசி ட்க்கெட் முன்பதிவு வரை பல்வேற்று மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன.
நவ.1 முதல் அமலுக்கு வரவுள்ள மாற்றங்கள்:
அக்டோபர் மாதம் முடிந்து நவம்பர் மாதம் துவங்க உள்ளது. ஒவ்வொரு மாதமும் போலவே, நவம்பர் முதல் நாளிலும் பல பெரிய மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. இதில் சில மாற்றங்கள் ஒவ்வொரு தனிநபரின் அன்றாட செலவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். இவற்றில் எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் மாற்றங்களைக் காணக்கூடிய நிலையில், கிரெடிட் கார்டு விதிகளும் மாறப் போகிறது. அந்த வகையில் புதிய மாற்றங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
சிலிண்டர் விலை:
ஒவ்வொரு மாதமும் முதல் தேதி, பெட்ரோலிய நிறுவனங்கள் எல்பிஜி சிலிண்டர்களின் விலையை மாற்றி புதிய விலையை வெளியிடுகின்றன. இம்முறையும் நவம்பர் 1ம் தேதி அதன் விலையில் திருத்தத்தை காணலாம்.நீண்ட காலமாக நிலையாக இருந்த 14 கிலோ எல்பிஜி சிலிண்டர்களின் விலை இம்முறை குறையும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். மறுபுறம், வணிக எரிவாயு சிலிண்டர்களின் விலை மூன்று மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், இந்த முறையாவது குறையுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ATF மற்றும் CNG-PNG விகிதங்கள்:
எண்ணெய் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும், சிஎன்ஜி-பிஎன்ஜி தவிர, ஏர் டர்பைன் எரிபொருளின் (ஏடிஎஃப்) விலைகளும் திருத்தப்படுகின்றன. கடந்த சில மாதங்களாகவே விமான எரிபொருளின் விலை குறைக்கப்பட்டு வந்த நிலையில், இம்முறையும் பண்டிகைக்கால பரிசாக விலை குறைப்பு எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி விலைகளிலும் பெரிய மாற்றத்தைக் காணலாம்.
எஸ்பிஐ கிரெடிட் கார்ட் விதி:
எஸ்பிஐ வங்கி அதன் கிரெடிட் கார்டு மூலம் பயன்பாட்டு பில் செலுத்துதல் மற்றும் நிதிக் கட்டணங்கள் தொடர்பான பெரிய மாற்றத்தை நவம்பர் 1 முதல் செயல்படுத்த உள்ளது. அன் - செக்யூர்ட் எஸ்பிஐ கிரெடிட் கார்டில் ஒவ்வொரு மாதமும் 3.75 நிதிக் கட்டணம் செலுத்த வேண்டும். இது தவிர மின்சாரம், தண்ணீர், எல்பிஜி எரிவாயு உள்ளிட்ட பயன்பாட்டு சேவைகளில் ரூ.50,000க்கு மேல் செலுத்தினால் 1% கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.
மியூட்சுவல் ஃபண்ட் விதிகள்
மியூட்சுவல் ஃபண்ட் இன்சைடர் டிரேடிங் விதிகளை கடுமையாக்க சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி முடிவு செய்துள்ளது. அதன்படி, நவம்பர் 1 முதல் மியூட்சுவல் ஃபண்ட் யூனிட்டுகளுக்கு நடைமுறைப்படுத்தப்படும் புதிய உள்விதிகளின்படி, சொத்து மேலாண்மை நிறுவனங்களின் (ஏஎம்சி) ஃபண்டுகளில் நாமினிகள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்கள் செய்த ரூ.15 லட்சத்துக்கும் மேலான பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களை இப்போது இணக்க அதிகாரியிடம் சமர்பிக்க வேண்டும்.
TRAI இன் புதிய விதிகள்:
அடுத்த மாற்றம் தொலைத்தொடர்பு துறையுடன் தொடர்புடையது. ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட அனைத்து டெலிகாம் நிறுவனங்களுக்கும் மெசேஜ் டிரேசபிலிட்டியை செயல்படுத்துமாறு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. இதன் கீழ், ஸ்பேம் எண்களை தடுக்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தகைய சூழ்நிலையில், நிறுவனங்கள் தங்கள் சிம் பயனர்களை அந்த செய்தி அடையும் முன்பே, அதனை ஆய்வு செய்து ஸ்பேம் பட்டியலில் வைத்து அந்த எண்ணைத் தடுக்கலாம்.
ஐஆர்சிடிசி டிக்கெட் புக்கிங்:
இந்திய ரயில்வே (IRCTC) ரயில் டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு காலத்தை (ARP), 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக மாற்றுகிறது. புதிய விதி நவம்பர் 1, 2024 முதல் அமலுக்கு வருகிறது.