அதானி பங்குகள் வீழ்ச்சி காரணமாக எல்ஐசி நிறுவனத்திற்கு பல கோடிகள் இழப்பு ஏற்பட்டதை அடுத்து பொதுமக்கள் எல்ஐசி-யில் போட்டு வைத்திருக்கும் பணத்திற்கு எதுவும் ஆபத்தா என்பது குறித்த அச்சம் மக்கள் மத்தியில் இருந்து வரும் நிலையில் ஒவ்வொரு ஊடகங்களும் வெவ்வேறு விதமாக செய்திகள் வெளியிட்டு வரும் நிலையில் சரியான கணக்கை வெளியிட்டு பதில் அறிக்கை வெளியிட்டுள்ளது எல்ஐசி.


அதானி - எல்ஐசி


அதானி குழுமம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் கடந்த புதன்கிழமை அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு சரியத் தொடங்கியது. இரண்டே நாட்களில் அதானி நிறுவனங்களின் மதிப்பு ரூ.4.20 லட்சம் கோடி சரிந்தது பெரும் பரபரப்பை கிளப்பியது. அதானி என்டர்பிரைசஸ், அதானி டோட்டல் கேஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி டிரான்ஸ்மிஷன் ஆகிய நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் இரு தினம் முன்பு 20% அளவில் சரிந்தன. இதனால் எல்ஐசி மிகப் பெரிய இழப்பை சந்தித்தது. அதானி குழுமத்தின் ஐந்து நிறுவனங்களில் எல்ஐசி மிகப் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதானி குழும நிறுவனங்களில் எல்ஐசி-இன் முதலீடு ஜனவரி 24, 2023-ல் ரூ.81,628 கோடியாக இருந்த நிலையில், ஜனவரி 27-ல் அது ரூ.62,621 கோடியாக சரிந்தது. அதாவது, அதானி குழும பங்குகள் சரிவால் எல்ஐசிக்கு ரூ.18,647 கோடி சரிவு ஏற்பட்டது. இதனால் எல்ஐசி-யில் உள்ள பல வகையான திட்டங்களில் பணம் சேர்த்து வைத்துள்ள பலருக்கு மனதில் சிறு ஐயம் தொற்றிக்கொண்டது. அந்த ஐயத்திற்கு பதில் கூறியுள்ளது எல்ஐசி.



அந்த பதிலில் கூறிய விபரங்கள் பின் வருமாறு:


"வழக்கமாக, LIC நிறுவனம், தொழில்துறை குழு முதலீடுகளின் விவரங்களைப் பகிர்ந்து கொள்ளாது. ஆனால், அதானி குழும பங்குகள் சரிவால் எல்ஐசி குறித்து ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்களில் பல்வேறு கட்டுரைகளில் பல தகவல்கள் பரப்பப்பட்டு வருவதால், பங்கு மற்றும் கடனில் அதானி குழும நிறுவனங்களில் எங்களின் வெளிப்பாடு குறித்த உண்மை நிலையைப் பகிர்ந்து கொள்ள இந்தத் தகவலை வெளியிடுகிறோம்", என்ற முன்னறிவிப்போடு அந்த அறிக்கை தொடங்குகிறது.


தொடர்புடைய செய்திகள்: TN Weather Update: உஷார் மக்களே... 13 கி.மீ வேகத்தில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்:தமிழ்நாட்டில் கனமழை இருக்கு...!


அதானி பங்குகள் எவ்வளவு


"31.12.2022 அன்று, அதானி குழும நிறுவனங்களின் கீழ் பங்கு மற்றும் கடனின் கீழ் எல்ஐசியின் மொத்த இருப்பு ரூ.35,917.31 கோடிகள். அனைத்து அதானி குழும நிறுவனங்களின் கீழும் கடந்த பல ஆண்டுகளாக வாங்கப்பட்ட பங்குகளின் மொத்த கொள்முதல் மதிப்பு ரூ. 30,127 கோடிகள் மற்றும் அதன் சந்தை மதிப்பு ஜனவரி 27, 2023 அன்று சந்தை நேரத்தின் முடிவில் ரூ. 56,142 கோடி. இன்றைய நிலவரப்படி அதானி குழுமத்தின் கீழ் முதலீடு செய்யப்பட்ட மொத்தத் தொகை ரூ. 36,474.78 கோடிகள். மேலும் எல்ஐசி வைத்திருக்கும் அனைத்து அதானி கடன் பத்திரங்களின் கிரெடிட் ரேட்டிங் ஏஏ மற்றும் அதற்கு மேல் அனைத்து ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் பொருந்தும் என ஐஆர்டிஏஐ முதலீட்டு விதிமுறைகளுக்கு இணங்குவது ஒரு நல்ல செய்தியாகும்"



உங்கள் பணத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை


"செப்டம்பர் 30, 2022 நிலவரப்படி, எல்ஐசியின் நிர்வாகத்தின் கீழ் உள்ள மொத்த சொத்துகள் ரூ.41.66 லட்சம் கோடி. இன்றைய தேதியில், புத்தக மதிப்பில் எல்ஐசியின் மொத்த AUM இல் 0.975% ஆகும். UC என்பது 66 வயதுடைய புகழ்பெற்ற நிறுவனமாகும், மேலும் இது பொருந்தக்கூடிய வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்க கடுமையான முதலீட்டு கட்டமைப்பைத் தொடர்ந்து பின்பற்றுகிறது. சொத்துக்களின் சந்தை மதிப்பு எந்த திசையிலும் மாறலாம், எல்ஐசி நீண்ட காலக் கண்ணோட்டத்தில் மற்றும் விரிவான கவனத்துடன் முதலீடு செய்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எல்ஐசி அதன் கடன்களை மதிப்பிடுவதற்கும், கடன்தொகை வரம்பை நிர்ணயிப்பதற்கும் ஒரு வலுவான நடைமுறையைப் பின்பற்றுகிறது. செப்டம்பர் 2022 நிலவரப்படி எல்ஐசிக்கு கிடைக்கக்கூடிய கடனளிப்பு அளவு 160% என்று, இலக்கை விட அதிகமாக இருந்தது. எல்.ஐ.சி வாரியமும் அதன் நிர்வாகமும் அனைத்து பங்குதாரர்களிடமும் அதன் பொறுப்புகளை உணர்ந்து உறுதியுடன் உள்ளது. மேலும் அவர்களின் நலன்களை எப்போதும் பாதுகாக்க ஏற்ற கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்றும்" என்று தெளிவுபடுத்தப் பட்டுள்ளது. எனவே தவறான செய்திகளை நம்பி எல்ஐசி திட்டங்களில் பணத்தை சேர்த்து வைத்திருப்பவர்கள் கவலை கொள்ள வேண்டிய தேவை இல்லை என்பது இதன்மூலம் தெளிவாகிறது.