இந்தியாவில் ஆண்கள் 82 சதவீத ஊதியத்தைப் பெறும் சூழலில், பெண் தொழிலாளர்களின் ஊதிய விகிதம் 18 சதவீதமாக மட்டுமே உள்ளதாக, உலக அசமத்துவ ஆய்வறிக்கை (world inequality report) அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. 


2022-ம் ஆண்டுக்கான உலக அசமத்துவ ஆய்வறிக்கை கடந்த வாரம் வெளியிடப்பட்டது. அதில், ''ஒரு நாட்டில் ஆண்களும் பெண்களும் சமத்துவத்துடன் நடத்தப்படும்போது, அவர்களின் ஊதியமும் 50 - 50 என்று சம அளவில் இருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் அப்படியில்லை. உலகம் முழுவதுமே பெண் தொழிலாளர்களுக்கான ஊதிய விகிதம் 50-க்கும் குறைவாகத்தான் உள்ளது. 


மால்டோவா முதலிடம்


உலகம் முழுவதும் 180 நாடுகளில் 1990 முதல் 2020 வரை 30 ஆண்டு புள்ளிவிவரங்களுடன் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதன்படி, உலகத்திலேயே அதிகபட்சமாக 45% பெண் தொழிலாளர்கள் ஊதிய விகிதத்துடன் கிழக்கு ஐரோப்பிய நாடான மால்டோவா முதலிடத்தில் உள்ளது. பெண் தொழிலாளர்கள் ஊதிய விகிதம் மத்தியக் கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளில் 10 சதவீதமாக உள்ளது. 




இதில் இந்தியப் பெண் தொழிலாளர் ஊதியம் 18.3 சதவீதமாக உள்ளது. இது ஆசியாவின் சராசரி பெண் தொழிலாளர் ஊதியமான 27%-ஐ விடக் குறைவாகும்'' என்று கூறப்பட்டிருந்தது. 


பாலின அசமத்துவம் இந்தியாவில் மிகவும் அதிகமாக இருந்து வருகிறது. ஆசிய நாடுகளில் சீனா மட்டுமே ஓரளவு பெண் தொழிலாளர் ஊதியத்துடன் 33 சதவீதத்தில் உள்ளது. உலக அளவில் இந்தியப் பங்களிப்பு சதவீதம் மிக மிகக் குறைவு.


வீட்டு வேலை - எழுதப்படாத சட்டம்


இதற்கான காரணங்கள் குறித்து சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் செயலாளரும் மகப்பேறு மருத்துவருமான சாந்தி ’ஏபிபி’ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, ''ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிகமாக வேலை செய்கின்றனர். ஆனால் அவர்கள் முறைசாராத் தொழில்களில்தான் கூடுதலாகப் பணிபுரிகின்றனர். நம்முடைய குடும்ப அமைப்பு பெண்கள்தான் சமைக்க வேண்டும். தண்ணீர் பிடிக்க வேண்டும், துவைக்க வேண்டும், குழந்தைகளை, பெரியவர்களை கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற சூழலில் இருக்கிறது. இது எழுதப்படாத சட்டமாகவே இருப்பதால், பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு பாதிக்கப்படுகிறது. 


வீட்டு வேலைகள் ஒரு பொருட்டாகவே கருதப்படாததாலும், அதிகப் பெண்கள் முறைசாராத் தொழில்களில் இருப்பதாலும் அவர்களுக்கான ஊதியம் கணக்கிலேயே கொள்ளப்படுவதில்லை. 




இவற்றையெல்லாம் தாண்டி பெண்கள் பணியில் இணைந்தாலும், அவர்களுக்கு ’சம வேலைக்கு சம ஊதியம்’ அளிக்கப்படுவதில்லை. அமைப்புசார்ந்த, சாராப் பணிகள் எல்லாவற்றிலும் இதே சிக்கல்தான் நிலவுகிறது. அதேபோல ஆட்குறைப்பு என்றால் முதலில் பெண்களே பாதிக்கப்படுகின்றனர். மேலும் பெண்களுக்குக் கூடுதல் பணிநேரம், தூரம், பணியிடத்தில் தங்க வேண்டியிருப்பது பெரும்பாலும் ஒத்துவராது என்பதாலும் அவர்களின் வேலைவாய்ப்பு கட்டுப்படுத்தப்படுகிறது என்று மருத்துவர் சாந்தி தெரிவித்தார். 


உலக அசமத்துவ அறிக்கைப்படி, பெண் தொழிலாளர்களின் ஊதிய விகிதம் இரண்டு கோணங்களில் அமைகிறது. ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களின் வேலைத் திறன் பங்கு மற்றும் பாலின வருவாய் விகிதம் ஆகியவையே அவை. 


முன்னதாக இந்தியாவில் 2005-ல் பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு 26 சதவீதமாக இருந்தது 2019-ல் 20.3 சதவீதமாகக் குறைந்தது. இதற்குப் பிறகு கொரோனா பெருந்தொற்று, பொதுமுடக்கம் உள்ளிட்ட காரணிகளால் 2020 ஜூலை - செப்டம்பர் மாதத்தில், இது 16.1 சதவீதமாகக் குறைந்தது. 


ஏமனில் 1 சதவீதம்!


பெண் தொழிலாளர்களின் ஊதிய விகிதம் பாகிஸ்தானில் 7.4% ஆக உள்ளது. ஆப்கனில் மிகவும் குறைந்து 100 சதவீதத்துக்கு 4.2 சதவீதமாக மட்டுமே உள்ளது. நேபாளத்தில் இந்தியாவை விட 23.3% ஆகவும் இலங்கையில் 23.3% ஆகவும் சீனாவில் 33.4% ஆகவும் உள்ளது. பெண் தொழிலாளர்களின் ஊதிய விகிதம் ஏமனில் வெறும் 1 சதவீதமாக உள்ளது. ஒட்டுமொத்தமாக உலக அளவில் இந்த விகிதம் 1990வாக்கில் 30 சதவீதமாகவும் தற்போது 2020-ல் 34 சதவீதமாகவும் உள்ளது. 




என்ன செய்ய வேண்டும்?


இதுகுறித்து மருத்துவர் சாந்தி பேசும்போது, ''அரசுகள் முதலில் பெண்களுக்காக பள்ளி, கல்லூரிகளில் இலவசக் கல்வியை உறுதிப்படுத்த வேண்டும். தாலிக்குத் தங்கம், சுமங்கலித் திட்டம் உள்ளிட்ட தங்கம் சார் திட்டங்களை விடுத்து, பெண் கல்வி, சுயசார்பை உறுதிசெய்யும் திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும். 


நாடாளுமன்றத்தில் ஆண்டாண்டு காலமாக அனைத்துக் கட்சிகளும் வாக்குறுதி மட்டுமே தந்து கொண்டிருக்கும் 33% இட ஒதுக்கீட்டை முதலில் அமல்படுத்த வேண்டும். முதலில் இதற்கு அங்கே பெண்களின் பிரதிநிதித்துவம் வேண்டும். கட்சிகள் தங்களின் தேர்தல் உறுப்பினர்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை அளிக்க வேண்டும். 


தமிழகத்தில் தற்போதுதான் பெண் கொள்கை அமல்படுத்தப்பட உள்ளது. அதில் பெண்களின் உடல், மன நலம், கல்வி, வேலைவாய்ப்பு, சுயசார்பு, திறன், ஆளுமை வளர்ப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதற்கு முதலில் சமூகத்தில் பெண்கள் குறித்த பார்வை மாற வேண்டும்'' என்று தெரிவித்தார்.