Udyogini scheme: மத்திய அரசின் உத்யோகினி திட்டம் என்றால் என்ன? யார் இதற்கு தகுதியானவர்கள் என்பது தொடர்பான விவரங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.


உத்யோகினி திட்டம்:


நீங்கள் சொந்தமாக தொழில்  செய்ய விரும்புகிறீர்களா? ஆனால் முதலீட்டிற்கான பணம் இல்லையா? அதிக வட்டிக்கு லட்சக்கணக்கில் கடன் வாங்குவதில் சிக்கல் உள்ளதா? வட்டியே கட்ட வேண்டாம், மூன்று லட்சம் கடன் கொடுக்கிறோம்.. அதுவும் கடனில் 50 சதவிகிதம் மட்டுமே திருப்பிச் செலுத்தினால் போதும் என சொன்னால் உங்களுடைய மனநிலை எப்படி இருக்கும்? அப்படி மத்திய அரசு செயல்படுத்தும் திட்டம் தான் உத்யோகினி.  மத்திய அரசு பெண்களுக்கு நிதி சுயசார்புக்கான பல திட்டங்களை கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தான் 'உத்யோகினி' திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.


ரூ.3 லட்சம் கடன் வழங்கும் ”உத்யோகினி” திட்டம்:


மத்திய அரசின் இந்த திட்டத்தின் மூலம் பெண்களுக்கு மூன்று லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. அந்த கடனில் ஐம்பது சதவிகிதம் வரையிலான கடனும் தள்ளுபடி செய்யப்படுகிறது. பெண்கள் தங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற நோக்கத்தில், ஏழைப் பெண்கள் சுயமாக தொழில் தொடங்க நிதித்தடைகள் ஏற்படக் கூடாது என்ற நோக்கத்தில் இந்தத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் சிறிய அளவிலான குடிசைத் தொழில்கள் ஆன மளிகைக் கடைகள், பேக்கரி, அழகு நிலையங்கள், கேன்டீன், கேட்டரிங், காபி, தேயிலைத் தூள் தயாரிப்பு, பரிசோதனை மையம், டிரை கிளீனிங், பரிசுப் பொருட்கள், ஜிம், ஐஸ்கிரீம் பார்லர், தையல் கடைகள், தூபப்பொருள் தயாரித்தல், பால், நூலகம் , மண்பாண்டம் தயாரித்தல், கண்ணாடி செய்தல் மற்றும் காகித தட்டு தயாரித்தல் என 88 வகையான தொழில்களை செய்ய உத்யோகினி திட்டம் மூலம் கடன் பெறலாம். 


தகுதியானவர்கள் யார்? 



  •  உத்யோகினி திட்டம் பெண்களுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே 18 முதல் 55 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம்

  • விண்ணப்பதாரர்களின் ஆண்டு வருமானம் ஒன்றரை லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்

  • மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு உயர் வருமான வரம்பு இல்லை

  • கிரெடிட் ஸ்கோர் நன்றாக இருக்க வேண்டும். கடந்த காலத்தில் நீங்கள் கடன் வாங்கியிருக்கக்கூடாது.


என்ன ஆவணங்கள் தேவை?



  • மூன்று பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்,

  • அடையாள அட்டை (ஆதார், ரேஷன் அல்லது ஓட்டர்)

  • நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள்? எவ்வளவு செலவாகும்? வருவாய் வழிகள் போன்றவற்றைக் கொண்ட விரிவான திட்ட அறிக்கையை சமர்பிக்க வேண்டும்.

  • நீங்கள் வணிகம் செய்ய விரும்பும் துறையில் முந்தைய அனுபவத்திற்கான சான்று அல்லது பயிற்சி சான்றிதழ்கள்

  • குடும்ப வருமானச் சான்றிதழ்

  • சாதிச் சான்றிதழ்

  • வணிகத்திற்கான முதலீடு குறித்த விவரங்கள்


எப்படி விண்ணப்பிப்பது..? 



  • பயனாளர்கள், வங்கிகளின் இணையதளத்தில் இருந்து உத்யோகினி திட்டத்தின் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

  • படிவத்தை நிரப்பி, தேவையான ஆவணங்களை இணைத்து, வங்கி மேலாளரிடம் விரிவான திட்ட அறிக்கை குறித்து விளக்கவும்

  • நீங்கள் சமர்ப்பித்த அறிக்கை மூலம் உங்களால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியும் என்று வங்கி மேலாளர் நம்பினால், உங்களுக்குக் கடன் நிச்சயம் கிடைக்கும்.


யாருக்கு எப்படி பொருந்தும்?



  • பட்டியலின மற்றும் பழங்குடியின் பெண்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1 லட்சத்திலிருந்து ரூ. மூன்று லட்சம் வரை கடன் கிடைக்கும். இதில் 50 சதவிகிதம் மானியம் கிடைக்கும். வட்டி இருக்காது.

  • பிசி மற்றும் பொது பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு ரூ. மூன்று லட்சம் வரை கடன். 30 சதவீதம் மானியம் கிடைக்கும். வங்கிகளுடன் ஒப்பிடும்போது வட்டி விகிதம் 8 முதல் 12 சதவீதம் வரை இருக்கும்.