Benefits of filing ITR: வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதன் மூலம், தனிநபர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதன் நன்மைகள்:


2023-24 நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கை (ஐடிஆர்) தாக்கல் செய்வதற்கான நேரம் வந்துவிட்டது. வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு வழங்கும் பல்வேறு விலக்குகள் காரணமாக,  இந்தியாவில் வருமான வரி வரம்புக்குள் வருபவர்கள் எண்ணிக்கை குறைவு தான். அதேநேரம்,  வருமான வரி வரம்பிற்குள் வராத நபர்களும், வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யலாம். இதனால் கிடைக்கும் நன்மைகளைக் கருத்தில் கொண்டே, வருமான வரி வரம்பிற்குள் வராத வருமானம் உள்ளவர்களும் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய நிதி ஆலோசகர்கள் அறிவுறுத்துகின்றனர். எதிர்காலத்தில் இதன் மூலம் பல நன்மைகளைப் பெறலாம். கடன் வாங்கும் போதும், தொழில் தொடங்கும் போதும், எந்த நாட்டிற்கு விசா வாங்கும் போதும், குழந்தைகளை வெளிநாடுகளுக்கு படிக்க அனுப்பும் போதும் தனிநபர்களுக்கு ITR மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


தனிநபர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?



  • வருமான வரி அறிக்கை  என்பது எந்தவொரு நபரின் வருமானத்திற்கும் உறுதியான ஆதாரமாகும். இதனை அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் வருமானச் சான்றாக ஏற்றுக்கொள்கின்றன. இதனை அடிப்படையாக கொண்டு வாகனக் கடன் அல்லது வீட்டுக் கடன் உட்பட எந்த வகையான கடனையும் விரைவாகப் பெறலாம்.

  • நீங்கள் வேறொரு நாட்டிற்குச் செல்கிறீர்கள் என்றால், நீங்கள் விசாவிற்கு விண்ணப்பிக்கும்போது உங்கள் வருமானத்திற்கான ஆதாரத்தை வழங்குமாறு கேட்கப்படலாம். ITR வருமானத்திற்கான உறுதியான ஆதாரம் என்பதால், அதைச் சமர்ப்பிப்பதன் மூலம் நீங்கள் எளிதாக விசாவைப் பெறலாம். உங்கள் பயணச் செலவுகளை உங்களால் ஏற்க முடியும் என்று மற்ற நாட்டு அதிகாரிகளுக்கு ITR உறுதியளிக்கிறது.

  • இப்போது காப்பீட்டு நிறுவனங்கள் கூட பெரிய டேர்ம் பிளான்களை எடுப்பவர்களிடம் ஐடிஆர் ரசீதுகளைக் கேட்கத் தொடங்கியுள்ளன. உண்மையில், அவர்கள் காப்பீட்டாளரின் வருமான ஆதாரத்தை அறியவும் அதன் ஒழுங்கை சரிபார்க்கவும் வருமான வரிக்கணக்கு விவரங்களை நம்பியுள்ளனர்.

  • பங்குகள் அல்லது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்களுக்கும் ஐடிஆர் மிகவும் உதவியாக இருக்கும். இவற்றில் நஷ்டம் ஏற்பட்டால், அந்த இழப்பை அடுத்த ஆண்டுக்கு எடுத்துச் சென்று வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வது அவசியம். அடுத்த ஆண்டு, மூலதன ஆதாயம் இருந்தால், நஷ்டம் லாபத்திற்கு எதிராக சரிசெய்யப்படும், இது உங்களுக்கு வரி விலக்கின் பலனைத் தரும்.

  • உங்கள் வருமானம் வருமான வரி வரம்பிற்குள் வரவில்லையென்றாலும், சில காரணங்களால் TDS கழிக்கப்படும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் RTR ஐ தாக்கல் செய்யும் போது மட்டுமே பணத்தைத் திரும்பப் பெறுவீர்கள். ஐடிஆர் தாக்கல் செய்யப்பட்ட பிறகுதான், உங்களுக்கு வரிப் பொறுப்பு இருக்கிறதா இல்லையா என்பதை வருமான வரித்துறை மதிப்பிடும்.