ATM Card Tips:  உயிரிழந்தவரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுத்தால், கைது நடவடிக்கை பாயும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.


உயிரிழந்தவரின் வங்கிக் கணக்கை அணுகுவது எப்படி?


குடும்ப உறுப்பினரின் இறப்பு என்பது துக்கத்தையும் அதிர்ச்சியையும் தரவல்லது. அந்த துயரோடு இறந்தவர்களின் வங்கிக் கணக்குகள், முதலீடுகள், கடன்கள் போன்ற நிதி விவகாரங்களைக் கண்டறிவது, அவற்றை ஒன்று சேர்ப்பது மற்றும் அவற்றை நிர்வகிப்பது ஆகியவையும் குடும்ப உறுப்பினர்களுக்கு மிகவும் சிரமமான் காரியமாக மாறுகிறது. வங்கி ஏடிஎம் கார்ட் இருக்கும், ஆனால் அதன் பின் நம்பர் தெரிய வாய்ப்பில்லை. ஃபிக்ஸட் டெபாசிட், பங்குச் சந்தை மற்றும் ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் முதலீடுகள் உள்ளதா என்பதை அறிந்து கொள்வதும் கடினமாகிறது. ஒருபுறம் மனிதனைக் காணவில்லை என்ற வேதனையும் மறுபுறம் நிதிப் பரிவர்த்தனைகளைப் பற்றிய கவலையும் மனதை ரணமாக்கலாம். 


உயிரிழந்தவரின் ஏடிஎம் கார்ட் மூலம் பணம் எடுக்கலாமா? 


இறந்தவரின் ஏடிஎம் கார்டு இருந்தால், அந்த கார்டில் இருந்து பணம் எடுக்க முடியுமா, முடியாதா என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது. மற்றவர்களுக்கு இது தேவையில்லாத வேலையாக இருந்தாலும் , பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த விஷயத்தில் தெளிவு அவசியமாகிறது. இறந்த நபரின் ஏடிஎம் கார்டில் இருந்து பணம் எடுப்பது சட்டவிரோதமானது, குற்றம். நீங்கள் ஒரு குடும்ப உறுப்பினராக இருந்தாலும் அல்லது நாமினியாக இருந்தாலும், இறந்தவரின் கணக்கில் பணத்தை அணுக சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். தவறினால் உங்கள் மீது கைது நடவடிக்கை பாயலாம்.


உயிரிழந்தவரின் பணத்தை எடுப்பதற்கான சட்ட நடைமுறை:


வங்கியில் தகவல் தெரிவிப்பது: முதல் நடவடிக்கையாக கணக்கு வைத்திருப்பவரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைக்கு தெரிவிக்கவும். நாமினி அல்லது நாமினி இல்லாவிட்டாலும், அத்தகைய தகவலை வழங்கலாம்.


நாமினி இருந்தால்: இறந்தவரின் கணக்கு விவரங்களில் நாமினியின் பெயர் இருந்தால், கணக்கு வைத்திருப்பவரின் இறப்பு குறித்தும் வங்கிக்கு நாமினி தெரிவிக்க வேண்டும். தகுந்த அடையாள ஆவணங்களுடன் அவர் தான் நாமினி என்பதை நிரூபிக்க வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட நாமினிகள் இருந்தால், அவர்கள் அனைவரும் உரிய ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.


வங்கிக் கணக்கை அணுக தேவையான ஆவணங்கள்:    



  •    கணக்கு வைத்திருப்பவரின் இறப்புச் சான்றிதழ்        

  • பாஸ்புக், செக்புக், டிடிஆர் போன்ற பிற ஆவணங்கள்  

  • பரிந்துரைக்கப்பட்ட ஆதார் அட்டை, பான் கார்டு


இந்த ஆவணங்களை வங்கி கிளையில் சமர்ப்பித்த பிறகு, வங்கி அதிகாரிகள் அவற்றை ஆய்வு செய்வார்கள். அந்த நடைமுறை முடிந்த பிறகு, உயிரிழந்தவரின் கணக்கில் இருந்து நாமினி பணம் எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது.


சொத்து பரிமாற்றம்:


வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கு முன், அந்த நபருக்குச் சொந்தமான சொத்துக்கள் சட்டப்பூர்வ வாரிசு அல்லது நாமினிக்கு மாற்றப்பட வேண்டும்.


சட்ட நடவடிக்கைகள்:    


விதிகளைப் பின்பற்றாமல் உயிரிழந்தவரின் கணக்கிலிருந்து பணம் எடுப்பது சட்டவிரோதமாகக் கருதப்படுகிறது. அத்தகைய செயல்களில் ஈடுபட்டால் கடும் அபராதம் விதிக்கப்படலாம் அல்லது சிறைக்கு அனுப்பப்படலாம்.