ITR 2024: வருமான வரிக்கணக்கைத் தாக்கல் செய்வதற்கு முன், வருடாந்திர தகவல் அறிக்கையை கவனத்தில் கொண்டால், படிவத்தில் தவறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருக்கும்.


வருமான வரி கணக்கு தாக்கல் 2024:


2023-24 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்யும் சீசன் தொடங்கிய பிறகு, இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்களது ரிட்டர்ன் கணக்குகளை தாக்கல் செய்துள்ளனர். இதற்கான அவகாசம் ஜுலை 31ம் தேதி வரை உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதனிடையே, நடப்பாண்டில் வரி செலுத்துவோருக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்குவதற்காக, AIS தொடர்பாக வருமான வரித்துறை ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.


AIS என்றால் என்ன?


AIS என்பது வருடாந்திர தகவல் அறிக்கையைக் குறிக்கிறது. வரி செலுத்துவோரின் பெரும்பாலான பிரச்சனைள் மற்றும் சந்தேகங்களை தீர்க்கக்கூடிய ஆவணம் இதுவாகும். இந்த ஆவணத்தில் ஒரு நபர் ஒரு நிதியாண்டில் சம்பாதித்த மொத்த வருமானத்தின் விவரங்கள் உள்ளன. சில சமயங்களில், வரி செலுத்துபவருக்குத் தெரியாமல் பிற மூலங்களிலிருந்து வருமானம் வருகிறது. உதாரணமாக சேமிப்புக் கணக்கில் வட்டி வருமானம் ஆகியவை இதில் அடங்கும்.


வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கு முன், AIS-ஐ கவனத்தில் கொண்டால் ரிட்டனில் தவறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு.வரிவிதிப்பு வருமானம் பற்றிய அனைத்து தகவல்களும் AIS இல் கிடைக்கும். சம்பளம் தவிர மற்ற எல்லா வருமான ஆதாரங்களின் விவரங்களும் இதில் அடங்கும். 


AIS இல் வந்த மாற்றம் என்ன?


மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) வரி செலுத்தும் முறையை வெளிப்படையானதாக மாற்றுவதற்காக வருடாந்திர தகவல் அறிக்கையில் ஒரு புதிய செயல்பாட்டைச் சேர்த்துள்ளது.


இதன் மூலம், வரி செலுத்துவோர் கருத்து தெரிவிக்கலாம், AIS இல் தோன்றும் ஒவ்வொரு பரிவர்த்தனையின் நிலையை சரிபார்க்கலாம். இதுவரை வரி செலுத்துவோர் கருத்து தெரிவிக்கும் வசதி மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.


AIS மாற்றத்தால் கிடைக்கும் பலன் என்ன?


AIS இல் ஏதேனும் ஒரு பரிவர்த்தனையில் வரி செலுத்துவோர் பிழையைக் கண்டால் மட்டுமே அவர் கருத்து தெரிவிக்க முடியும். அதே மாதிரியான பிரச்னையை எதிர்கொண்டவர்கள், என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பது வரி மற்றொருவருக்கு புரியாது. இந்நிலையில் முன்னெடுக்கப்பட்டுள்ள புதிய மாற்றத்தால், ​​வரி செலுத்துவோர் மற்ற தரப்பினர் என்ன நடவடிக்கை எடுத்தனர் என்பதைப் பார்க்க ஒரு வாய்ப்பைப் பெறுவார். இதன் விளைவாக, AIS இல் ஏதேனும் தவறு நடந்தால், அதை சரிசெய்ய முடியும்.


செயல்முறை குறித்த நிகழ்நேர அப்டேட்டையும்  நீங்கள் பெறுவீர்கள். இதன் மூலம் வருமான வரித்துறைக்கும் வரி செலுத்துவோருக்கும் இடையே வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும். 


AIS-ஐ எவ்வாறு பார்ப்பது/பதிவிறக்கம் செய்வது?


www.incometax.gov.in வருமான வரி தாக்கல் போர்ட்டலுக்குச் செல்லவும். பயனர் ஐடி (PAN), கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழையவும். மேல் மெனுவில் உள்ள சேவைகள் டேபை கிளிக் செய்யவும். கீழ்தோன்றும் மெனு திறக்கும். அதில், 'ஆண்டுத் தகவல் அறிக்கை' (AIS) என்பதைத் தேர்ந்தெடுக்கவும். தொடருங்கள் என்பதைக் கிளிக் செய்தவுடன் மற்றொரு சாளரம் திறக்கும். புதிய சாளர பக்கத்தில் AIS விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். இங்கே, AIS ஐப் பதிவிறக்குவதற்கான ஆப்ஷன் தோன்றும். AIS ஐ PDF அல்லது JSON வடிவத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.