எவ்வளவு சம்பாதிச்சாலும் பத்தல என்பது மாத சம்பளம் வாங்கும் எவரும் கூறும் வசனம் தான். செலவுகளைக் கண்காணிப்பது, நம் வாழ்வின் முக்கியமான பணியாக மாறியுள்ளது. உங்கள் பணம் எங்கு செல்கிறது, எதற்கு எவ்வளவு செலவு செய்கிறீர்கள் என்பதை அறிந்துகொள்வது சிறந்த நிதி நிர்வாகத்திற்கான அடித்தளமாகும்.


நமக்கு முன் இருந்த தலைமுறைகள் கணக்கு நோட்டில் எல்லாவற்றையும் எழுதி வைப்பது வழக்கம். ஆனால் இதனை எளிதாக மாற்றுவதற்காகவே நமக்கு கிடைத்துள்ளன இந்த ஆப்கள். இதில் சிறந்த அனுபவத்தை வழங்கும் ஆப்களை பட்டியலிட்டுள்ளோம், உங்களுக்கு தகுந்த ஆப்பை பயன்படுத்திக் கொள்ளவும்.


எக்ஸ்பென்சிஃபை (Expensify)


Expensify என்பது வணிகம் மற்றும் பயணச் செலவுகளை மையமாகக் கொண்ட ஒரு சிறந்த ஆப் ஆகும். வேலை தொடர்பான செலவுகளைக் கண்காணிக்க இது பெரும்பாலும் தொழில் வல்லுநர்களால் பயன்படுத்தப்பட்டாலும், தனிப்பட்ட பயன்பாட்டிற்கும் இது பயனுள்ளதாக இருக்கும். Expensify நாம் செய்யும் செலவுகளை அறிக்கையாக ஒழுங்குபடுத்தி காண்பிக்கிறது. பயணங்களின் போது உதவக்கூடிய வகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப் பட்டுள்ளது. இது மைலேஜ் முதல் பில்கள் வரை ஸ்கேன் செய்து ஒழுங்குமுறை படுத்துகிறது. 



வாலட் (Wallet: Budget & Money Manager)


வாலட் ஆப், உங்கள் வரவு செலவுத் திட்டத்தைத் திட்டமிடவும், செலவுகளைக் கண்காணிக்கவும் உதவுகிறது. செலவுகளை கட்டுப்படுத்தி, எதிர்கால இலக்குகளை நோக்கிச் செயல்படவும் உதவி செய்கிறது. நீங்கள் செய்யும் செலவுகளை பட்டியலிட,  பிரிவுகள் உருவாக்கி, அதில் உட்பிரிவுகளையும் உருவாக்கலாம். அதுபோக நம் எல்லா டிவைஸ்களில் இருந்தும் தரவுகளை இணைக்கலாம். கூடுதலாக செலவு மற்றும் பணத்தை எவ்வாறு சேமிப்பது என்பது பற்றிய பயனுள்ள வலைப்பதிவுகள் மற்றும் கட்டுரைகளையும் இது அடிக்கடி பகிர்ந்து கொள்கிறது.


தொடர்புடைய செய்திகள்: Chandrayaan 3 EXCLUSIVE: சந்திரயான் சரித்திர வெற்றி; என்ன நன்மைகள் எல்லாம் கிடைக்கும்?- விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் சிறப்புப் பேட்டி!


ஸ்பெண்டிங் ட்ராக்கர் (Spending Tracker)


ஸ்பெண்டிங் டிராக்கர் என்பது எல்லோராலும் மிகவும் எளிதாக பயன்படுத்தக் கூடிய ஆப் ஆகும். இந்த ஆப்பில், உங்கள் செலவுகளை வரிசைப்படுத்த உதவும் பிரிவுகள் உள்ளன. தனித்தனியாக உட்பிரிவுகள் உருவாக்க வேண்டியதில்லை. ஸ்பெண்டிங் டிராக்கர் மூலம், உங்கள் செலவுப் பழக்கத்தைப் பற்றி நீங்களே அறிந்துகொள்ளலாம், அதோடு பணத்தைச் சேமிப்பதற்கான வழிகளையும் கண்டறியலாம்.



மணி மேனேஜர் (Money Manager Expense & Budget)


மணி மேனேஜர் ஆப் என்பது உங்கள் செலவினங்களைக் கண்காணிப்பதற்கான இலவச ஆப் ஆகும். இதில் நாள், வாரம், மாதம், ஆண்டு என வெவ்வேறு அடிப்படையில் செலவுகளை வரிசைப்படுத்தலாம். இது உங்கள் வருமானம், செலவுகள் மற்றும் எவ்வளவு சேமித்துள்ளீர்கள் என்பதைக் கண்காணிக்க உதவுகிறது. இந்தப் ஆப் உங்கள் செலவு முறைகள் பற்றிய விவரங்களை வழங்குவதோடு, செலவுககான வரம்பை அமைக்கவும் உதவுகிறது. உங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை கண்காணிப்பதற்கு இதில் ஒரு தனி பிரிவும் இருப்பது தான் ஹெலைட்.


மின்ட் (Mint Budget & Track Bills)


மின்ட் நம் அனைத்து வரவு, செலவு அம்சங்களையும் உங்களுக்கு பார்க்க எளிதாக மாற்றி வரிசை படுத்துகிறது. நிலுவைகள் மற்றும் வரவு செலவுத் திட்டங்கள் முதல் கிரெடிட் ஸ்கோர் மற்றும் சேமிப்பு இலக்குகள் வரை அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது இந்த மின்ட். வெவ்வேறு வகையான பட்ஜெட் மற்றும் சேமிப்பு இலக்குகளை இதில் உருவாக்கலாம். பெண்டிங் பில்களை எப்போது செலுத்த வேண்டும் என்பது குறித்த நோடிஃபிகேஷன்களையும் சரியான நேரத்தில் இந்த ஆப் உங்களுக்கு வழங்கும்.