Financial Tasks: ஐடிஆர் தொடங்கி ஃபாஸ்டேக் வரையிலான 5 முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ள, மார்ச் 31ம் தேதி இறுதிநாளாக நியமிக்கப்பட்டுள்ளது. 


மார்ச் 31ம் தேதியே கடைசி...


2023-24 எனும் நடப்பு நிதியாண்டானது வரும் மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இதன் காரணமாக வரும் 31ம் தேதியானது, தனிப்பட்ட நிதி தொடர்பான பல பணிகளுக்கான காலக்கெடுவாகவும் உள்ளது. அதன்படி,  முதலீடுகள், வரி தாக்கல் மற்றும் வரிச்சேமிப்பு உள்ளிட்ட 5 முக்கிய நிதிப்பணிகளை வரும் 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டி உள்ளது.  அந்த வகையில் வரும் 31ம் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டிய 5 முக்கிய பணிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


புதுப்பிக்கப்பட்ட ITR ஐ தாக்கல் செய்தல்:


2021-22 நிதியாண்டிற்கான புதுப்பிக்கப்பட்ட வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வரும் மார்ச் 31ம் தேதி கடைசி நாளாகும். இந்த வாய்ப்பை முந்தைய நிதியாண்டிற்கான வருமானத்தை தாக்கல் செய்யத் தவறிய, வருமானத்தில் ஒரு பகுதியைப் புகாரளிக்கத் தவறிய அல்லது ஏற்கனவே தாக்கல் செய்தபோது தவறான வருமான விவரங்களை வழங்கிய நபர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.


வரி சேமிப்பிற்கான முதலீடுகள்:


நீங்கள் பழைய வரி முறையைத் தேர்ந்தெடுத்து, 2023-24 நிதியாண்டுக்கான வரிச் சேமிப்பு அம்சங்களில் முதலீடு செய்ய விரும்பினால், மார்ச் 31ம் தேதியே அதற்கு கடைசி நாளாகும். பிரிவு 80C இன் கீழ் ஏராளமான வரிச் சேமிப்பு அம்சங்கள் உள்ளன. வருங்கால வைப்பு நிதி (PPF), ஈக்விட்டி-இணைக்கப்பட்ட சேமிப்பு திட்டங்கள் (ELSS), மற்றும் வரி சேமிப்பு இலக்குகளை அடைய உதவும் வைப்புத்தொகை ஆகியவற்றின் மூலம் வரிசேமிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். உடல்நலக் காப்பீட்டு பிரீமியங்கள், கல்விக் கடன்கள் மற்றும் வீட்டுக் கடன்கள் போன்ற செலவுகள் வரி விலக்கு மற்றும் உங்கள் வரிப் பொறுப்பைக் குறைக்கும் வேறு சில வழிகளாகும். 80D, 80G, மற்றும் 80CCD(1B) போன்ற பிற பிரிவுகளும்,  பழைய வரி முறையின் கீழ் வரி விலக்குகளை பெற உதவுகின்றன.


வரி விலக்குக்கான TDS சான்றிதழ்கள்:


வரி செலுத்துவோர் ஜனவரி 2024 க்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் செய்யப்பட்ட வரி விலக்குகளுக்கு, டிடிஎஸ் சான்றிதழ்களை வழங்க வேண்டும். வெவ்வேறு பிரிவுகளுக்கு ஏற்ப இந்த காலக்கெடு வழங்கப்படுகிறது.



  • மார்ச் 17-ம் தேதிக்குள் பிரிவு 194-IA, பிரிவு 194-IB மற்றும் பிரிவு 194 M ஆகியவற்றின் கீழ் வரி விலக்கு பெறுவதற்கான TDS சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்

  • மார்ச் 30ம் தேதிக்குள் பிப்ரவரி 2024-க்கான பிரிவு 194-IA, பிரிவு 194-IB மற்றும் பிரிவு 194M ஆகியவற்றின் கீழ் கழிக்கப்பட்ட வரிக்கான சான்றிதழ்களை தாக்கல் செய்ய வேண்டும்.


குறைந்தபட்ச முதலீட்டு காலக்கெடு:


PPF அல்லது சுகன்யா சம்ரித்தி திட்டம் (SSY) போன்ற அரசாங்க ஆதரவு சேமிப்பு திட்டங்களுக்கு,  ஒரு ஆண்டிற்கான குறைந்தபட்ச முதலீடு முறையே ரூ.500 மற்றும் ரூ.250 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது . நிதியாண்டிற்கான குறைந்தபட்ச வைப்புத்தொகையை செய்யத் தவறினால், உங்கள் கணக்கு டீபால்ட் என குறிக்கப்பட்டு அதற்காக அபராதம் விதிக்கப்படலாம். எனவே, இந்த திட்டங்களில் ஏதேனும் ஒன்றில் நீங்கள் முதலீடு செய்திருந்து, நடப்பு நிதியாண்டில் அவற்றில் டெபாசிட் செய்யவில்லை என்றால், அபராதத்தைத் தவிர்க்க மார்ச் 31ம் தேதிக்குள் முதலீட்டை செய்து முடிக்கவும்.


 FASTag KYC


இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், (NHAI) பயனர்கள் தங்கள் FASTag KYC விவரங்களைப் புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை மார்ச் 31 வரை நீட்டித்துள்ளது. உங்களுக்கு FASTag சேவை வழங்குபவரைப் பொறுத்து, நீங்கள் இந்திய நெடுஞ்சாலைகள் மேனேஜ்மென்ட் கம்பெனி லிமிடெட் (IHMCL) போர்டல் அல்லது நேஷனல் எலக்ட்ரானிக் டோல் கலெக்ஷன் (NETC) இணையதளம் மூலம் உங்களது FASTag KYC விவரங்களைப் புதுப்பிக்கலாம். வரும் 31ம் தேதிக்குள் இதை செய்யத் தவறினால், உங்கள் FASTag கணக்குகள் செல்லாததாகிவிடும்.