ஒவ்வொரு ஆண்டும் கல்லூரி முடித்து பல மாணவர்கள் தங்களுடைய வேலை பயணத்தை தொடங்குகின்றனர். அவ்வாறு பணியை தொடங்கும் பல மாணவர்களுக்கு நிதி மேலாண்மை மற்றும் சேமிப்பு தொடர்பான போதிய அறிவுரைகள் கிடைப்பதில்லை. கொரோனா பெருந்தொற்று காலத்தில் சேமிப்பு மற்றும் நிதி மேலாண்மை எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அறிந்து கொண்டோம். அந்தவகையில் தற்போது கல்லூரி முடித்து வேலைக்கு சேரப்போகும் மாணவ மாணவியர் தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கியமான நிதி மேலாண்மை தொடர்பாக விஷயங்கள் என்னென்ன?


பண இருப்பை மதிப்பிடல்:


முதலில் கல்லூரி முடித்து வெளியே வரும் மாணவர்கள் தங்களிடம் மற்றும் தங்கள் குடும்பத்திடம் இருக்கும் கையிருப்பு பணம் தொடர்பாக தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் தங்களுடைய குடும்ப சூழல் மற்றும் உள்ள கடன்கள் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும். மேலும் கல்விக் கடன் வாங்கி படித்திருந்தால் அதை எப்படி திருப்பிச் செலுத்துவது என்பது தொடர்பாக ஒரு திட்டத்தை வகுக்க வேண்டும். 


பணம் பட்ஜெட்:


இதுவரை மாணவர்களாக இருந்தவர்கள் தற்போது முதல் முறையாக சம்பளம் பெறும் நபர்களாக மாறியுள்ளதால் பணத்தை செலவு செய்வதில் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். அதாவது உங்களிடம்  பணம்  எவ்வளவு வருகிறது. அது எப்படி செலவு செய்யப்படுகிறது என்பது தொடர்பாக ஒரு சிறிய பட்ஜெட்டை போட்டு சரி பார்த்து கொள்ள வேண்டும். மேலும் தேவை உள்ள செலவு மற்றும் தேவையற்ற செலவு ஆகியவற்றிற்கு எவ்வளவு பணம் செலவாகிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். இதை வைத்து உங்களுடைய செலவுகளை 50/30/20 என்ற கணக்கில் வகைப்படுத்தி செலவு செய்யவேண்டும். முக்கியமான தேவைகளுக்கு 50 சதவிகிதம், மற்ற சிறிய தேவைகளுக்கு 30 சதவிகிதத்தையும், 20 சதவிகிதத்தை பழைய கடனை திருப்பி செலுத்தவும் பயன்படுத்த வேண்டும். 




அவசர கால நிதி:


ஒவ்வொரு மாதம் வாங்கும் சம்பளத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவை அவசர கால நிதியாக ஒதுக்க வேண்டும். இந்த பணத்தை மிகவும் அவசரமான சூழலில் மட்டும் பயன்படுத்த வேண்டும். இதை வங்கியிலோ அல்லது வீட்டிலேயோ சேமித்து வைக்கலாம். 


ஓய்வூதிய திட்டம்:


சம்பாதிக்க தொடங்கும் போது ஓய்வூதியம் தொடர்பான புரிதலை ஏற்படுத்தி கொள்ளவேண்டும். ஏனென்றால், அது தான் நமது வாழ்வில் மிகவும் முக்கியமான கடைசி காலத்தில் உதவும் முக்கிய பொருள். எனவே ஓய்வூதியம் குறித்து சரியான திட்டத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். 


கிரெடிட் கார்டு பயன்பாடு:


பெரும்பாலனவர்கள் கிரெடிட் கார்டு கிடைத்தவுடன் தேவையில்லாமல் அதிக பொருளை வாங்கி குவித்துவிடுவார்கள். அதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் சம்பளத்தில் பெரியளவு தொகை கிரேடிட் கார்டு பில் கட்டுவதற்கே சென்றுவிடும். இந்தச் சூழலை தவிர்க்க கிரேடிட் கார்டு பயன்பாட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.