’நச்’ சினிமாக்களுக்கு பெயர் போனது கொரியன் சினிமாக்கள். சினிமாத்துறையில் சாதிக்க விரும்பும் இளசுகள் கூட கொரியன் சினிமாவை பார்த்து படிப்பார்கள் என சொல்வதுண்டு. ஏன்.. இன்னும் சில இயக்குநர்கள் கூட கொரியன் சினிமாவில் இருந்து சில காட்சிகளை உருவி பட்டி டிங்கரிங் பார்த்து அவரவர் படங்களில் வைத்துக்கொள்வதும் உண்டு. அந்த அளவுக்கு வித்தியாசமான கதைகளுடன் கூடிய  படத்தைக் கொடுக்கும் கொரிய நாட்டு படைப்பு தான் தி விட்ச்.




மூளை நரம்பியல் நிபுணரான ஒரு மருத்துவர் தன்னுடைய மருத்துவக்குழுவுடன் சட்டத்துக்கு புறம்பாக குழந்தைகளின் மூளைகளின் தன்னுடைய ஆராய்ச்சியை புகுத்துகிறார். இதனால் சராசரியான குழந்தைகளை விட அதிக சக்தி கொண்ட குழந்தைகளை உருவாக்க பார்க்கிறார். பள்ளிக்கூடம் போலவே பேட்ச் பேட்சாக குழந்தைகள் உருவாக்கப்படுகிறார்கள். குழந்தைகளுக்கு அதிக பவரை கொடுத்ததால் ஒருகட்டத்தில் பயந்து போகும் மருத்துவக்குழு, இந்த பவரான குழந்தைகள் வளர்ந்தால் எதிர்காலத்தில் நமக்கே கட்டுப்படாது எனப் பயந்து ரத்தம் தெறிக்க தெறிக்க குழந்தைகளை அடித்தே கொல்கின்றனர். 


மருத்துவக்குழுவின் உருவாக்கத்திலேயே தலைசிறந்த ஒரு சிறுமி மட்டும் அவர்களிடம் இருந்து தப்பித்து சென்றுவிடுகிறார். அந்த சிறுமியின் எதிர்காலம் என்ன? தப்பித்த சிறுமியை தேடிப்பிடிக்கிறதா மருத்துவக்குழு? அந்த சிறுமிக்குள் இருக்கும் பவர் என்ன? அந்த பவரை வைத்து அவர் என்ன செய்கிறார்? என பல கேள்விகளுக்கு விடை அளிக்கிறது தி விட்ச் திரைப்படம். இரண்டு பாகங்களாக முடிவு செய்யப்பட்டு எடுகப்பட்டுள்ள இந்த திரைப்படம் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்புடனே முடிவடைகிறது.  




ஆக்‌ஷன் படம் என சொல்லப்பட்டாலும் முதல்பாதி ஒரு ட்ராமா படமாகவே நகர்கிறது. நட்பு, குடும்ப பாசம் என ஒரு அழகான உணர்வையும் படம் கொடுக்கிறது. இரண்டாம் பாதிக்கு பிறகே ஆக்‌ஷன் தொடங்குகிறது. லேட்டாக வந்தாலும் லேட்டஸ் என்பதுபோல ஆக்‌ஷனில் தூள் பறக்கிறது. படத்தின் முதன்மை கதாபாத்திரமாக நடித்துள்ள நடிகை கிம் டாமி ஆக்‌ஷன் காட்சிகளில் அலற விடுகிறார். அமைதியாக அதே நேரத்தில் முகத்தில் மாஸ் காட்டும் காட்சிகள் இரண்டாம் பாதியில் ரகளையாக இருக்கிறது. ஒரு மாஸ் நடிகையாகவே  தூள்  கிளப்பியுள்ளார் கிம் டாமி. 




மருத்துவராக கொடூர வில்லத்தனத்தை முகத்தில் காட்டி நடித்துள்ள மின் சூ ஜோ சிறந்த தேர்வு. படம் தொடக்கத்தில் நமக்கு பல கேள்விகளும் சந்தேகமும் எழுந்தாலும் படத்தின் க்ளைமேக்ஸ் நெருங்குகையில் அனைத்து சந்தேகங்களும் தெளிவடைகிறது. ’எப்போது இரண்டாம் பாகம் வரும்?’ என்ற எதிர்பார்ப்புடனே முதல் பாகத்தை முடித்துக்கொள்கிறது தி விட்ச்.  ஆக்‌ஷன் ரசிகர்களுக்கு புல் மீல்ஸ் போடும் திரைப்படம். ஆனால் இரண்டாம் பாதி முழுவதுமே ரத்தம் தெறிப்பதால் வன்முறைக்காக 18+  கொடுக்கப்பட்டுள்ளது.


தி விட்ச் திரைப்படம் The Witch: Part 1 - The Subversion என்ற பெயரில் அமேசான் பிரைமில் கிடைக்கிறது. தமிழில் இல்லை என்றாலும் ஆங்கில சப்டைட்டிலுடன் இந்தப்படத்தை நீங்கள் பார்த்து ரசிக்கலாம்.


அம்மா கொடுக்கும் டாஸ்க்.. வெளிவரும் அதிர்ச்சிகள் - ட்விஸ்டுக்கு பெயர் போன ''இன்செண்டீஸ்'