முன்னாள் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் ஸ்மார்ட் சிட்டி வந்துட்டா, மதுரை லண்டன் நகராகும், பாரீஸ் நகராகும், ரோம் நகராகும், சிட்னி நகராகும் என ஓவர் காண்பிடென்ஷாக   நம்பிக்கை தெரிவித்தார். ஆனால் சிட்னியாக மாறாமல் தற்போது கோழி கிளறிவிட்டது போல்  தான் மதுரை நிலை  இருக்கிறது. கடந்த 2018 ஜூலை 17ம் தேதி மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் நடைபெற்ற செயல்வீரர் கூட்டத்தில்  செல்லூர் ராஜு பேசும்போது " வைகை ஆற்றில் இனி கழிவு நீர் கலக்காது. தனி பைப் லைன் மூலம் கழிவு நீரை தூய்மைப் படுத்துவோம். பல்வேறு ஹைடெக்கான வசதிகள் மூலம் செயல்படுத்துவோம். அதனால் வைகை நதி சிட்னி நதிக்கரை போல மாறும் என்றார்.



 

தொடர்ந்து 2019 ஜனவரியில் ஸ்மார்ட் சிட்டி துவக்க விழாவின் போது  "இன்னும் 18 மாதம் மட்டும் பொறுங்கள் எப்படி வைகை நதி சிட்னி போல மாறுது என்று பாருங்கள்" என்றார். தற்போது அவர் சொன்ன காலக்கெடு முடிந்து பல மாதங்கள் ஆகியும் வேலை முடிந்தபாடில்லை. தொடர்ந்து செல்லூர் ராஜு தனது பேட்டியில் மதுரை அப்படி மாறும்., இப்படி மாறும், என்று சொன்னாரே தவிர நிஜத்தில் அப்படியெல்லாம் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. அதற்காக ஸ்மார்ட் சிட்டி திட்டம் எதற்கும் லாயக்கில்லாத திட்டம் என்று போற போக்கில் சொல்லி விடமுடியாது. ஸ்மார்ட் சிட்டி திட்டம் தேவையான ஒன்று தான்., ஆனால் அந்த வேலைகள் ஆமை  வேகத்தில் நடப்பது தான் சோகம்.

 



 

குண்டும் குழியுமான சாலைகளால் வண்டி போகும் போது தட, தடக்கிறது. தூசிகள் கிளம்பி காற்றில் படர்கிறது. போக்குவரத்து நெரிசலை அதிகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட் சிட்டி வேலைகள் விரைவாக முடிந்தால் மதுரை ஓரளவு பொலிவு பெறும். சீர்மிகு திட்டமான,  ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்பது நாட்டில் 100 நகரங்களை தேர்ந்தெடுத்து, அந்த நகரங்களை அனைத்து தேவையான வசதிகளுடன் இருக்கும் நகரமாக மாற்றம் அடையச் செய்வதே. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை  பிரதமர் மோடி கடந்த 2016-ம் ஆண்டு துவங்கி வைத்தார். வளர்ந்த நாடுகளில் உள்ள ஸ்மார்ட் சிட்டி நகரங்களைப் போல, இந்தியாவில் உள்ள நகரங்களையும் மாற்ற வேண்டும் என்பது தான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். இந்த திட்டம் பிரதமர் நரேந்திர மோடியின் பெட் திட்டமாகும்.

 



 

இந்த திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நகரங்களுக்கு உலகத் தரம் வாய்ந்த, உள்கட்டமைப்பு வசதிகள் கிடைக்கும். சுத்தமான குடிநீர், மின்சார வினியோகம், தரமான சாலைகள், அதிவேக,  தானியங்கி திடக்கழிவு மேலாண்மை, சிறப்பான பொது போக்குவரத்து, கணினி மயமாக்கப்படல் என்று பல்வேறு திட்டங்கள் இதில் அடக்கம். இந்நிலையில் மதுரையில் சுமார் 920 கோடி மதிப்பில் கிட்டதட்ட 13 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த திட்டங்கள் முடியும் தருவாயில் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். ஸ்மார்ட் சிட்டி தொடர்பாக மூன்று மாதத்திற்கு ஒரு முறை நடக்கும் தேசிய அளவில் ரிவூ மீட்டிங்கில் 1%, 2% என்ற அளவில் வேலைப்பாடுகள் முடிந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

 



 

சிம்மக்கல் பகுதியில் அதிகளவு ஒலி மாசு இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், ஸ்மார்ட் சிட்டி பணியால் மதுரை முழுதும் காற்று மாசடைந்துள்ளது. ஸ்மார்ட் சிட்டி அலங்கோலமான நிலையில் தான் இருக்கிறது. பல்வேறு இடங்களில் பாதாளச் சாக்கடை போடப்படுவதாக நல்ல சாலைகளும் கூட சீரழிக்கப்படுகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக சித்திரை திருவிழா பெரிய அளவில் நடைபெறாததால் சிக்கல்கள் ஏற்படவில்லை. இல்லை என்றால் வெள்ளமாகக் கூடும் மக்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் பரிதவித்து போயிருப்பார்கள். செல்லூர் ராஜு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை 2 ஆண்டுகளில் கட்டி முடித்தபின் எப்படி இருக்கும் என்று பாருங்கள் என்று தெரிவித்திருந்தார். ஆனால் சுற்றுச் சுவரைத் தவிர செங்கல் கூட இல்லை என்பது தான் நிதர்சனம். மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சுமார் 920 கோடி செலவில் பெரியார் பேருந்து நிலையம் மேம்பாடு, மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் சீரமைப்பு , வணிகவளாகம், வைகை ஆற்றங்கரையில் பூங்கா, அடுக்குமாடி வாகன காப்பகம் உள்பட 13 பணிகள் நடந்து வருகிறது.



 

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஒரு பகுதியாய் தெருவிளக்கின் விலை ரூ.21,666 என்று மதுரை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பேசுபொருளாக மாறியது. தெருவிளக்கு திட்டத்திற்கு மட்டும் 30.25 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளார்கள். சுமார் 30,377 தெருவிளக்குகள் பொருத்தப்பட்டிருப்பதாக ஆர்.டி.ஐ தகவலில் வெளியானது. தெருவிளக்கு திட்டத்தில் மட்டும் பலகோடி மோசடி நடந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். மதுரையில் நடந்துவரும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துவருவதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தற்போதைய மாநில நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர். திட்டம் தொடங்கியதிலிருந்து குற்றம்சாட்டி வருகிறார்கள்.

 



 

தேர்தல் சமயத்தில் மதுரையில் பிரச்சாரத்தின் போது மு.க.ஸ்டாலின் ஸ்மார்ட் சிட்டி குறித்த குற்றச்சாட்டுகளையும் முன் வைத்தார். தொடர்ந்து சமூக ஆர்வலர் அரவிந்த் பாலாஜி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மணல் கொள்ளை நடந்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையருக்குப் புகார் மனு அனுப்பினார். இப்படி தொடர்ந்து ஸ்மார்ட் சிட்டி குறித்து புகார் அளிக்கப் பட்டுவருகிறது. கொரோனாவை காரணம் காட்டி வேலை மெதுவாக நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. இதனால் தற்போது 10% செலவினம் அதிகரித்துள்ளது. எனவே தற்போது உள்ள தமிழ்நாடு அரசு ஸ்மார்ட் சிட்டி பணிகளை விரைவாக முடிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மதுரை சிட்னியாக மாறவேண்டாம் சுகாதாரமிக்க நகரமாகவும், பாரம்பரியம் மாறாமல், இயற்கை இணைந்த, முன்மாதிரியான நகரமாக மாறினால் போதும் என்று நிம்மது பெருமூச்சு அடைகின்றனர்.

 



இது குறித்து மதுரையை சேர்ந்த ஹக்கிம்...," தென் மாவட்டங்களில் முக்கிய நகரான மதுரை பொலிவுறு நகராக மாறும் என ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆற்றின் இரு கரையிலும் நடைபாதை உடன் பூங்கா அமைக்கப்படும் எனவும், பெரியார் பேருந்துநிலையம் பிரம்மாண்டமாக மாறும் எனவும், பாதாள சாக்கடை, தண்ணீர் வசதி உள்ளிட்டவைகள் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதில் சில வேலைகள் மட்டுமே நிறைவடைந்துள்ளது. பொதுமக்களுக்கு எரிச்சலூட்டும் வகையில் தான் ஸ்மார்ட் சிட்டி பணி அரைகுறையாக முடிந்துள்ளது. அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை ஆஹோ, ஓஹோ என்று மாறும் என தெரிவித்தார். ஆனால் அவர் வசிக்கும் ஏரியாவில் உள்ள செல்லூர் கண்மாய் கூட முறையாக தூர்வாரப் படவில்லை.  தேர் பவனி வரும் வீதிகள் அலங்கோலமாக கிடக்குகிறது.  நகராட்சி தேர்தல் நடத்தாதது கூடுதல் சிரமம். ஸ்மார்ட் திட்டத்தால் மதுரையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மதுரையே தம்பித்துள்ளது. எனவே கொரோனாவை காரணம் காட்டி வேலைகளில் தொய்வு ஏற்படுத்தாமல் விரைவாக இந்த திட்டப்பணிகளை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்" என்றார்.

 



 

மேலும் வைகை மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் வைகை ராஜனிடம் பேசினோம்...," ஸ்மார்ட் சிட்டி திட்டத்தால் வைகையும் மக்களுக்குமான  இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை சரி செய்யாமல் ஆற்றை சுருக்கிவிட்டனர். ஆற்று ஓரமாக போடப்பட்டுள்ள சாலைகள் ஒரு சர்வீஸ் ரோடுபோல தான் உள்ளது. ஆற்றின் ஓரமாக காம்பவுண்ட் சுவர் கட்டியது பொதுமக்களுக்கு வசதியாக மாறிவிடும். இறங்கி ஏறும் படித்துறை முழுமையாக மூடப்பட்டுவிட்டது. கழிவுநீரை கட்டுப்படுத்த முடியவில்லை. 80 இடங்களில் கழிவு நீர் பாய்ந்த இடத்தில் 68 இடங்களில் கழிவுநீர் பாய்கிறது. அவ்வளவு தான் மாற்றம்.  கரை ஓரம் பூங்கா அமையும் என்றார்கள் ஆனால் அதற்கான அறிகுறியே இல்லை. வைகை ஆறு வெறும் நீர் ஓடும் பாதை மட்டுமல்ல ஆன்மீகம் சங்கமிக்கும் இடமாகும். எனவே நதியை காப்பாற்ற தொலைநோக்கு பார்வையோடு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் செயல்பட வேண்டும்" என்றார்.

 



 

இது குறித்து ஸ்மார்ட் சிட்டி பணி மேற்கொண்டுவரும் அதிகாரிகள் சிலர்...," மதுரையில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் அனைத்தும் நல்ல படியாக முடிந்துள்ளது. தேர்போகும் வீதிகளில் வேலைகள் முடிந்துவிட்டது. துரதிஸ்டவசமாக திருவிழா நடைபெறவில்லை. மீனாட்சியம்மன் கோயிலை சுற்றிப்பேவர் பிளாக் ஒட்டும் பணி முழுமையாக முடிந்துவிட்டது. விளக்குத் தூண், கட்ட பொம்மன் சிலை அருகே உள்ள சுற்றுலா தகவல் மைய பணிகள் முடிந்துவிட்டது. அதே போல் திருமலை நாயக்கர் மஹால் பணிகளும் முடிவுற்றுள்ளது. இப்படி 90% வேலைகள் முடிந்துவிட்டது. மற்ற பணிகளும் இந்தாண்டு இறுதிக்குள் முடிந்துவிடும். ஆனால் பாதாளச் சாக்கடை பணி அடுத்த ஆண்டு தான் செயல்படுத்த முடியும் அதன் ஒர்கிங் ஆர்டர்லேயே அப்படித் தான் இருக்கிறது" என்றனர்.

 

 



 

 

இது குறித்து கடைசியாக இருந்த மதுரை மாநகராட்சி ஆணையர் விஷாகனிடம் கேட்டபோது ..." மதுரை ஸ்மார்ட் சிட்டி பணி முடியும் தருவாயில் உள்ளது. கொரோனா காலகட்டம் என்பதால் தொய்வு ஏற்பட்டது. தற்போது தொடர்ந்து பணிகள் நடைபெறுகிறது. விரைவாக முடிந்துவிடும்" என்று தெரிவித்திருந்தார்.