க்ரிப்டோ வர்த்தகம் சார்ந்த பிரதிநிதிகள், ப்ளாக்செயின் அண்ட் க்ரிப்டோ அசெட்ஸ் கவுன்சில் என்ற க்ரிப்டோ வர்த்தகக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் முதலானோர் க்ரிப்டோ வர்த்தகம் தொடர்பாக பாஜக தலைவர் ஜெய்ந்த் சின்ஹா தலைமையிலான நாடாளுமன்றக் குழுவின் முன் தங்கள் அறிக்கைகளைச் சமர்பித்துள்ளனர். 


நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தொழிற்துறையினரிடம், க்ரிப்டோ நிதி குறித்த நிபுணர்களுடனும் கடந்த நவம்பர் 15 அன்று பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் க்ரிப்டோ பணப் பரிவர்த்தனையைத் தடை செய்யாமல், அதனை ஒழுங்குபடுத்துவது குறித்து பேசப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.






`க்ரிப்டோ வர்த்தம் ஒழுங்குமுறைக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்று பல தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். எனினும் தொழில்துறை நிறுவனங்கள், பங்குதாரர்கள் தரப்பில் யார் ஒழுங்குமுறைப்படுத்துவது என்ற கேள்வி எழுந்துள்ளது’ எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 



நாடாளுமன்ற உறுப்பினர்கள் தரப்பில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற கருத்து வெளிப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தேசிய நாளிதழ்களில் க்ரிப்டோ வர்த்தகம் பற்றி முழுபக்க விளம்பரங்கள் கொடுக்கப்பட்டது குறித்து பேசியுள்ளார். மேலும், நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் தற்போது அரசு அதிகாரிகளைக் க்ரிப்டோ வர்த்தகம் குறித்து ஆய்வு மேற்கொள்ளவும், அதில் உருவாகும் பிரச்னைகளைக் கண்காணிக்கவும் அடுத்து உத்தரவிடப்படும் எனவும் கூறப்படுகிறது. 


நிதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் முதல் சந்திப்பு இதுதான் என்பதால், க்ரிப்டோ வர்த்தகம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. க்ரிப்டோ வர்த்தகம் மீது அதிக ஆர்வம் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது என்ற போதும், அதில் முதலீடு செய்வதால் ஆபத்து விளையும் என்ற எண்ணமும் மக்களிடையே பரவலாகப் பரவியுள்ளது. 


கடந்த சில நாள்களுக்கு முன், பிரதமர் நரேந்திர மோடி வெவ்வேறு அமைச்சகங்களைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள், ரிசர்வ் வங்கியின் முதன்மை அதிகாரிகள் முதலானோருடன் க்ரிப்டோ கரன்சி குறித்து சந்திப்பு நடத்தியது குறிப்பிடத்தக்கது. 



ஜெயந்த் சின்ஹா


 


இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு முன்பு, இதுகுறித்து பேசிய நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவர் ஜெயந்த் சின்ஹா, க்ரிப்டோ வர்த்தகம் குறித்த பேச்சுவார்த்தையின் மூலம், அரசு, தனியார் ஆகியோருக்கு வளர்ந்து வரும் இந்தப் புதிய தொழில்துறையால் உருவாகும் வாய்ப்புகள், சவால்கள் முதலானவை விவாதிக்கப்படும் எனக் கூறப்பட்டது. 


முன்னணி தொழில்துறை சார்ந்த பிரதிநிதிகள், இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பின் உறுப்பினர்கள், ஐஐஎம் அஹமதாபாத்தைச் சேர்ந்த மூத்த கல்வியாளர்கள் முதலானோர் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வார்கள் எனவும் ஜெயந்த் சின்ஹா கூறினார். இத்தகைய வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து, க்ரிப்டோ வர்த்தகத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்குத் தேவையான ஒழுங்குமுறையை உருவாக்கி, அது வளர்வதற்கு ஏதுவான அமைப்பு உருவாக ஆலோசனைகள் பெறப்படும் என்றும் நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவர் ஜெயந்த் சின்ஹா கூறியிருந்தார்.