ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர்களுக்கு எலான் மஸ்க் கையகப்படுத்திய பிறகு ட்விட்டரின் முன்னாள் தலைமை நிர்வாக அலுவலர் பராக் அக்ரவால், தலைமை நிதி அதிகாரி நெட் சீகல் மற்றும் பிற உயர்மட்ட அலுவர்களை எலான் மஸ்க் நீக்கினார். இருப்பினும், அறிக்கைகளின்படி, உயர்மட்ட நிர்வாகி வெறும் கையுடன் நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்படவில்லை எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது.


பராக் அகர்வாலுக்கு 42 மில்லியன் டாலர்கள் அதாவது 346 கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும், பராக் அகர்வாலின் ஓராண்டுக்கான பராக்கின் அடிப்படைச் சம்பளம் மற்றும் அனைத்து ஈக்விட்டி பங்குகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தத் தொகை வழங்கப்படும் என்றும் ராய்ட்டர் செய்தி நிறுவனம் முன்னதாக செய்தி வெளியிட்டுள்ளது.


 






சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ட்விட்டரில் பணிபுரிந்து வந்த பராக் அக்ராவல், கடந்த ஆண்டு நவம்பரில் அந்நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக அறிவிக்கப்பட்டார். கடந்த 2015ஆம் ஆண்டு முதல் சி.இ.ஓ.வாக இருந்த ஜாக் டோர்ஸே விலகியதை அடுத்து இந்தியரான பராக் அக்ரவால் நியமனம் செய்யப்பட்டார்.


2018ஆம் ஆண்டு முதல் ட்விட்டரின் தலைமை தொழில்நுட்ப அலுவலராக பொறுப்பேற்ற பராக் அக்ராவலுக்கு, கடந்த ஆண்டு தான் சி.இ.ஓ. பொறுப்பு தேடிவந்தது. ஆனால், சில மாதங்களுக்குள்ளாக ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியதால் பராக் அக்ராவல் அந்த பொறுப்பில் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.


அதோடு, ட்விட்டரின் நிர்வாகம் மீது அதிருப்தி தெரிவித்திருந்த மஸ்க், தான் ட்விட்டரை வாங்கியவுடன் பலருக்கு வேலை போகும் என்பதையும் முன்பே தெரிவித்திருந்தார். அதோடு சமீபத்தில் கூட ட்விட்டரின் 75 விழுக்காடு பணியாளர்களை நீக்க இருப்பதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.


இந்த நிலையில், ட்விட்டரை எலான் மஸ்க் கையகப்படுத்தும் பணி முடிவடைந்த நிலையில் பராக் அக்ரவால் உள்ளிட்ட நிர்வாகிகளை மஸ்க் பணி நீக்கம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ட்விட்டரின் தலைமையகத்திலிருந்து பராக் அக்ரவால் வெளியேறியுள்ளார்.