விநியோகஸ்தர்களிடம் இருந்து வந்த தொடர் மிரட்டல்களால் பூரிஜெகன்நாத் போலீஸ் பாதுகாப்பு கேட்டு உள்ளார். 


நடிகர் விஜய்தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரது நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியான "லைகர்" திரைப்படம் மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. இப்படத்திற்கான விளம்பரமும்  பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், காலையில் முதல் காட்சி சென்ற ரசிகர்கள் கடும் அதிருப்தியடைந்தனர். காரணம், பிரபல தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் எழுதி இயக்கிய படமா இது?  என நொந்து கொள்ளும் அளவுக்கு இதன் திரைக்கதை இருந்தது.


 











இதனால் முதல் காட்சி முடிந்து வெளியே வந்த ரசிகர்கள், படக்குழுவினரை கடுமையாக சாடியிருந்தனர். இதனால் படம் வெளியான அன்றைய தினமே, படம் படுதோல்வியை சந்திக்கும் என்பது தெளிவாக தெரிந்தது. அதன்படியே அடுத்தடுத்த நாட்களில் வசூல் குறைந்து, படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் படத்தை வாங்கிய சில விநியோகஸ்தர்கள் பூரிஜெகன்நாத்திடம் நஷ்ட ஈடு கேட்டு அவர் வீட்டின் முன்னர் போராட்டம் நடத்தப்போவதாக மிரட்டல் விடுத்த செய்திகள் வெளியானது. இது தொடர்பான வாட்ஸ்அப் ஸ்கிரீன் ஷாட்டையும் பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். இதனையடுத்து விநியோகஸ்தர்களை பூரிஜெகன்நாத் எச்சரிக்கும் விதமாக அவர் பேசிய ஆடியோ ஒன்றும் வெளியாகி இருந்தது. 


 







இந்த நிலையில் இயக்குநர் பூரிஜெகன்நாத் தனக்கு  பாதுகாப்பு வேண்டும் என்று கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அந்த புகாரில்,  விநியோகஸ்தர்கள் என்னை மிரட்டி எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை. புகார்கள் ஏதேனும் இருந்தால், அதை சட்டமுறைப்படி அணுகுங்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் போட்டுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் படி விநியோகஸ்தர் வாரங்கல் ஸ்ரீனுவுக்கு செலுத்தப்பட வேண்டிய நிலுவைத்தொகை, அனைத்தும் செலுத்தப்பட்டு விட்டது என்றும், துணை விநியோகஸ்தர்களுக்கு அவர் பணத்தை கொடுக்காமல் இருக்கிறார் என்றும் கூறியிருக்கிறார். மேலும் இந்த மிரட்டல்கள் மூலம் தனது குடும்பத்திற்கு அச்சுறுத்தல் நிலவுவது, தனக்கு கவலை அளிக்கும் விதமாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கும் அவர் போலீஸ் பாதுகாப்பை கேட்டு இருக்கிறார்.