பாகிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பு வேகமாகக் குறைந்து வருவதால் மிகப்பெரிய பொருளாதார பிரச்சனையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


திவாலான இலங்கை:


இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதன் விளைவாக அந்நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்த நிலையில், பெட்ரோல் உள்ளிட்ட எதையும் இறக்குமதிசெய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. பெரும்பாலான அத்தியாவசியப் பொருள்களுக்கு இறக்குமதியை நம்பியே இருந்த இலங்கை, அந்நியச் செலாவணி குறைந்ததால் எதையும் இறக்குமதி செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் பொருள்களின் விலை தாறுமாறாக உயர, வாங்கிய கடனை அடைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட இலங்கை திவாலானதாக அந்நாட்டு அரசு அறிவித்தது. இதனால், அந்நாட்டில் பெரும் போராட்டம் வெடித்தது. இதன் காரணமாக அங்கு அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 




இலங்கையின் நிலையில் பாகிஸ்தான்:


தற்போது இதே போன்றதொரு சூழ்நிலையில் தான் இந்தியாவின் மற்றொரு அண்டை நாடான பாகிஸ்தானும் இருந்து வருகிறது. அந்நாட்டின் வெளிநாட்டுக் கடன் சேவை 10.88 பில்லியன் அமெரிக்க டாலர்களாக 2021-2022 ன் முதல் மூன்று நிதியாண்டில் உயர்ந்துள்ளது. கடந்த 2021ம் நிதியாண்டின் முழுவதிலும் 13.38 பில்லியன் டாலர்கள் இருந்த நிலையில் இந்த ஆண்டில் இந்த தொகை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




ஸ்டேட் பேங்க் ஆஃப் பாகிஸ்தானின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு ஒற்றை இலக்கத்திற்கு சரிந்துள்ளது. கடந்த மாதம் தான் சீனாவின் 2.3 பில்லியன் டாலர்கள் கிடைத்தது. இருந்தபோதும் அதன் கையிருப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. ஒவ்வொரு காலாண்டிலும் அதிகரிக்கும் வெளிநாட்டுக் கடன்கள், ஏற்கனவே வாங்கப்பட்ட வெளிநாட்டுக் கடன்களை அடைப்பதற்காக அதிக வட்டிக்கு கடன்வாங்குவதையேக் காட்டுகிறது என்று கூறியுள்ளனர்.


அதிக வட்டிக்கு சீனாவிடம் கடன்:


தற்போது பாகிஸ்தானை ஆளும் ஷெபாஸ் ஷெரிஃப் தலைமையிலான அரசு, சீனாவிடம் இருந்து 2.3 பில்லியன் டாலர் கடனை எவ்வளவு வட்டிக்கு வாங்கியுள்ளது என்ற தகவலை வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது. இந்த கடனை இம்ரான் கான் ஆட்சி கவிழ்வதற்கு முன்பே வழங்க பெய்ஜிங் ஒப்புக்கொண்டுள்ளது. எனினும், இரண்டு மாத காத்திருப்பிற்குப் பிறகே இந்த தொகையை சீனா விடுவித்துள்ளது. இந்த கடனை பாகிஸ்தான் பெற்றதற்கு பொருளாதார நிபுணர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதிக வட்டிக்கு சீனாவிடம் கடன் வாங்கியுள்ளதாக அவர்கள் சந்தேகிக்கின்றனர். 


நிதியை நிறுத்திய ஐஎம்ஏ:


சர்வதேச நாணய நிதியம் 1 பில்லியன் டாலர்களை ஒரு மாதத்தில் வழங்கும் என்று அந்நாட்டின் நிதியமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் கூறி வருகிறார். ஆனால், மூன்று மாதங்கள் ஆகிவிட்டாலும் இன்னும் சர்வதேச நாணய நிதியம் இன்னும் நிதியை விடுவிக்கவில்லை. சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு நிதி அளிப்பதை நிறுத்தியதையடுத்து உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவை திட்டங்களுக்கு நிதி அளிப்பதையும் நிறுத்திவிட்டன.




பொருளாதார நிபுணர்கள் கவலை:


பாகிஸ்தானால் கடனை திரும்ப அளிக்க முடியாது என்று சீனாவிற்குத் தெரியும். சர்வதேச நாணய நிதியமும் பாகிஸ்தானுக்கு உதவத் தயாரில்லை. இதனால் தான் பாகிஸ்தானுக்கு அதிக வட்டிக்கு சீனா கடன் அளிப்பதாக மூத்த பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். ஜூன் 30 உடன் முடிந்த நிதியாண்டில் பாகிஸ்தானால் இறக்குமதியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சுமார் 80 பில்லியன் டாலர்களுக்கு இறக்குமதி செய்திருக்கிறது. இது தற்போது இருக்கும் நிதி பற்றாக்குறையை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.