நாட்டில் போலி ரூ.500 நோட்டுகளின் புழக்கம் அதிகரித்துவிட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


ரிசர்வ் வங்கி சமீபத்தில் 2021- 2022 ஆம் ஆண்டிற்கான நிதியறிக்கையை வெளியிட்டது. அதில் 2021-2022 நிதி ஆண்டிற்கான கள்ள 500 ரூபாய் நோட்டு புழக்கம் அதிகரித்துள்ளதாக  தெரிவித்துள்ளது. 


நிதி அறிக்கையில், மார்ச் மாதம் வரை  நாட்டில், கரன்சி நோட்டுகளின் புழக்கம், 13ஆயிரத்து 53 கோடியாக உயர்ந்துள்ளதாகவும், இது, கடந்த 2020 - 2021- ஆம் நிதி ஆண்டை விட அதிகம் என்றும் குறிப்பிட்டுள்ளது. கடந்த நிதியாண்டில், நாட்டில் கரன்சி நோட்டு புழக்கம் 12 ஆயிரத்து 437 கோடியாக இருந்தது.


போலி 500 ரூபாய் நோட்டுகளைக் கண்டறிவது எப்படி?


உங்கள் கையில் இருப்பது கள்ள நோட்டா இல்லை உண்மையான பணமா என்று தெரிந்துகொள்வதற்காக ரிசர்வ வங்கி சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளது, அதன் விவரம் கீழே.


உண்மையான நோட்டு எனில் கீழே குறிப்பிடப்பட்டுள்ளவைகளை அதில் இடம்பெற்றிருக்கும். போலியான ரூபாய் நோட்டு எனில் இருக்காது. 



  • ரூ.500 பணத்தில் ’500’ என்பது தேவநாகரி எழுத்தில் எழுதப்பட்டிருக்கும்.

  • காந்தியின் உருவம், ரிசர்வ் வங்கியின் பெயர், சின்னம், ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையொப்பம் ஆகியவைகளை தடவிப் பார்த்தால் உணரும் வகையில் இருக்கும். 

  • பணத்தில் உள்ள காந்தியின் உருவம் வலது பக்க மையத்தில்  இருக்கும். (கள்ள நோட்டில் காந்தியின் உருவம் சரியாக இருக்காது. கார்ட்டூன் போன்ற உருவத்திலோ அல்லது உண்மையா நோட்டில் இருக்கும் வலது பக்கத்தில் இருந்து சற்று தள்ளி இருக்கும். )

  • 500 ரூபாய் நோட்டை மடிக்கும்போது, அது பச்சை நிறத்தில் இருந்து இன்டிகோ நிறத்திற்கு மாறும்.


 



  • பணத்தில் 500 என்று எழுத்தால் எழுதப்பட்டிருப்பது பச்சை நிறத்தில் இருந்து நீல நிறமாக மாறும்.

  • ரூபாய் நோட்டின் வலது பக்கத்தில் அசோகத் தூண் இருக்கும். 

  • வலது பக்கத்தில் அரை வட்டமான இடத்தில் ரூ.500 என்று எழுதப்பட்டிருக்கும்.

  • ரூபாய் நோட்டின் சீரியல் நமப்ர், அச்சிடப்பட்ட ஆண்டு ஆகியவைகள் சரியாக குறிப்பிடப்பட்டிருக்கும். இவற்றை நீங்கள் சரிபார்த்து கொள்வதன் மூலம் உண்மையானதா இல்லை போலியான நோட்டா என்று எளிதாக கண்டறிய முடியும்.

  • புதிய ரூபாய் நோட்டில் 'தூய்மை இந்தியா' திட்டத்தின் குறியீடு மற்றும் பிரசார வாக்கியம் குறிப்பிடப்பட்டிருக்கும்.

  • ரூபாய் நோட்டின் மையப்பகுதியில் 500 என்று இருப்பதை வெளிச்சத்தில் காணலாம். இது ஒளி உட்புகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 




புதிதாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட ரூ.500 நோட்டின் சிறப்புகள் சில ..



  • ரூபாய் நோட்டின் எண் வலது கீழ் பகுதியில் உள்ளது. எண்கள் சிறிதிலிருந்து பெரிதாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

  • மையப்பகுதியில் உள்ள காந்தி புகைப்படத்தின் அருகில் மிகச் சிறிய எழுத்துக்களில் "RBI" மற்றும் "2000" “500” ஆகிய எழுத்துகள் உள்ளன.

  •  மகாத்மா காந்தி புகைப்படம் மற்றும் பணத்தின் மதிப்பான ரூபாய்500 -க்கான வாட்டர் மார்க்கும் அச்சிடப்பட்டுள்ளது.

  • அச்சடிக்கப்பட்ட ஆண்டு நோட்டின் பின்பகுதியில் இடது பக்கம் இருக்கும்.

  • பணத்தின் மதிப்பு  நியூமரிக்கல் எண் நோட்டின் வலது கீழ் பகுதியில் அமைந்துள்ளது.

  • கண் பார்வை திறன் குறைந்தவர்களுக்கு  வசதியாக நோட்டின் இடது மற்றும் வலது ஓரத்தில் ஏழு கோடுகளும், வலதுபுறத்தில் கிடைமட்ட செவ்வகமாக ரூபாய் 500 எனவும் குறிப்பிடப்பட்டிருக்கும்.

  • மகாத்மா காந்தியின் புகைப்படம் நோட்டின் வலதுபுறத்தில் இருந்து மையப்பகுதிக்கு மாற்றப்பட்டது.

  • ரூபாய் நோட்டில் அச்சடிக்கப்படும் பாதுகாப்பு இழை பச்சை கலரில் இருந்து நீல நிறமாக மாற்றப்பட்டுள்ளது.


 


போலி நோட்டை அடையாளம் காண ரிசர்வ் வங்கியின் வழிமுறைகளின் விளக்கப்படத்திற்கான லிங்க்.


https://www.rbi.org.in/financialeducation/currencynote.aspx#


ரூ. 2000 நோட்டு புழக்கம் குறைந்தது:


கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் நிலவரப்படி, 2,000 ரூபாய்  கரன்சி நோட்டுகளின் புழக்கம், 274 கோடியாக இருந்தது. இது, 2021 மார்ச்சில், 245 கோடியாகவும், 2022 மார்ச்சில், 214 கோடியாகவும் குறைந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  கடந்த நான்கு ஆண்டுகளாக  2000 ரூபாய் நோட்டுகளை புதிதாக ரிசர்வ் வங்கி அச்சடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஊழல், கருப்புப்பண புழக்கத்தை குறைக்கும் நோக்கத்தில் உயர் மதிப்புமிக்க ரூ.2000 நோட்டுக்களை புதிதாக அச்சடிப்பதை நிறுத்துவதாக கடந்த 2019 ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கி அறிவித்தது. 




கடந்த, 2021 மார்ச்-ஐ விட நடப்பு நிதியாண்டில் 500 ரூபாய் நோட்டுகளின் புழக்கம்  4,554 கோடியாக உயர்ந்திருக்கிறது. 
மொத்தம் புழக்கத்தில் உள்ள கரன்சிகளின் மதிப்பு, 28.27 லட்சம் கோடியில் இருந்து, 31.05 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. நாட்டின் மொத்த கரன்சி மதிப்பில், 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளின் பங்கு, 87 சதவீதமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.