எல்ஐசி என்றழைக்கப்படும் லைஃப் இன்சுரன்ஸ் கார்ப்பரேஷன் என்னும் பொது நிறுவனத்தின் தனியார் முதலீடுகளை மேற்கொள்வதற்கான விளம்பரப் பணிகளை மத்திய அரசு அடுத்த நிதியாண்டிற்குத் தள்ளி வைக்கவுள்ளதாகவும், ரஷ்யா - உக்ரைன் போர் விவகாரம் காரணமாக சந்தை நிலையற்ற தன்மையில் இருப்பதன் விளைவால் இவ்வாறு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இது குறித்த விவரங்கள் அறிந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


நாட்டின் மிகப் பெரிய ஆயுள் காப்பீட்டுப் பொது நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளில் 5 சதவிகிதத்தைத் தனியாருக்கு விற்பனை செய்வதற்கான வரைவு ஆவணங்களைக் கடந்த பிப்ரவரி 13 அன்று மத்திய அரசு வெளியிட்டிருந்தது. இந்தியாவில் இதுவரை பார்த்ததிலேயே மிகப்பெரிய அளவிலான ஐபிஓக்களை எல்ஐசி நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது இந்த மாதம் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டிருந்தது.



`இந்தத் திட்டத்திற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கியிருந்தது. நாங்கள் அதனை முன்னெடுக்க முயன்றிருந்தோம். ஆனால் இப்படியான பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய போர் நிகழ்ந்து கொண்டிருக்கும் சூழலில் இதுகுறித்த மீள்பரிசீலனை அவசியம் என்பதால் இந்தத் திட்டம் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது’ எனக் கூறியுள்ள மூத்த அதிகாரி ஒருவர், உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பைச் சுட்டிக் காட்டியுள்ளதோடு, அந்த விவகாரம் உலகம் முழுவதும் இருக்கும் பொருளாதாரச் சந்தைகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைப் பற்றியும் கூறியுள்ளார். எல்ஐசி நிறுவனத்தின் ஐபிஓ பங்குகளின் மொத்த விலை இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்னும் நிலையில், அது சுமார் 63 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும், அத்தகைய பெரிய மதிப்பு கொண்ட பங்குகளைத் தற்போது நிலையற்ற தன்மையில் இருக்கும் சந்தையில் அறிமுகப்படுத்துவது சிக்கலாக மாறக் கூடியது. ஒரு பீப்பாய், கச்சா எண்ணெய் விலை சுமார் 110 அமெரிக்க டாலர்களை நேற்று கடந்துள்ள நிலையில், சென்செக்ஸ் சுமார் 1.38 சதவிகிதம் குறைந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் சரிந்துள்ளது. 


ஜனவரி மாதத்தின் மத்தியில் சுமார் 61 ஆயிரம் புள்ளிகளுடன் இருந்த சென்செக்ஸ் மதிப்பு தற்போது சுமார் 10 சதவிகிதம் என்ற அளவில் குறைந்துள்ளது. பல்வேறு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்று வெளியேறியதால் சென்செக்ஸ் வீழ்ச்சியடைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 



உக்ரைன் - ரஷ்யா போர் விவகாரம் காரணமாக அரசு ஐபிஓ விற்பனையை ஒத்தி வைத்தாலும், முதலீட்டாளர்களைத் தொடர்புகொள்வது தொடரும் எனக் கூறப்பட்டுள்ளது. அபுதாபி முதலீட்டு ஆணையம், சிங்கப்பூர் அரசு முதலீட்டு கார்ப்பரேஷன் முதலான நிறுவனங்களிடம் இருந்து அதிகளவில் நிதியை முதலீடாகப் பெற மத்திய அர்சு விரும்புபதாகவும் கூறப்பட்டுள்ளது. 


மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர், `எல்ஐசி நிறுவனத்தின் ஐபிஓ பங்குகள் விற்பனைக்கான விளம்பரங்களின் பணி சில பெரியளவிலான நிதியுடன் அடுத்த வாரத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு அனைத்து பங்குதாரர்களிடம் தொடந்து உரையாடி வருகிறது’ எனத் தெரிவித்துள்ளார். 


எல்ஐசி நிறுவனத்தின் சுமார் 5 சதவிகிதம் பங்குகள் மொத்தமாக 316.2 மில்லியன் பங்குகளாக விற்கப்படும் என வரைவு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 30 அன்று, சுமார் 5 சதவிகிதம் பங்குகளுடன்  நிறுவனத்தின் மதிப்பு சுமார் 5.39 லட்சம் கோடி ரூபாய் எனக் கூறப்பட்டிருந்தது.