க்ரிப்டோகரன்சியைக் கொண்டுவர அரசுக்கு திட்டமில்லை என மாநிலங்களவையில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.


2009ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகமான க்ரிப்டோகரன்சியாக `பிட்காயின்’ தோன்றியது. அதற்குப் பிறகு, பிட்காயின் கேஷ், ரிப்பிள், லைட்காயின் முதலான பல்வேறு க்ரிப்டோகரன்சிகள் அறிமுகப்படுத்துப்பட்டுள்ளன. தற்போதைய  2022 ஆம் ஆண்டில், சுமார் 8 ஆயிரத்திற்கும் அதிகமான க்ரிப்டோகரன்சிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 
கடந்த சில ஆண்டுகளில், இந்தியாவில் க்ரிப்டோகரன்சிக்கான சந்தை பெருமளவில் வளர்ந்துள்ளது. மேலும் 2030ஆம் ஆண்டுக்குள் க்ரிப்டோகரன்சியில் இந்தியர்களின் முதலீடு சுமார் 241 மில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் க்ரிப்டோகரன்சியை நிர்வகிக்கவோ, கட்டுப்படுத்தவோ, தடைசெய்யவோ எந்தச் சட்டமும் இல்லை. எனவே இந்தியாவில் க்ரிப்டோகரன்சியை வாங்கவோ, வியாபாரம் செய்யவோ, க்ரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் மையம் நடத்தவோ சட்ட விதிமீறல் எதுவும் இல்லை. 


இந்நிலையில் மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக பதிலளித்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, "இப்போதைக்கு இந்தியாவில் க்ரிப்டோகரன்சிகளை ஒழுங்குபடுத்த எந்த சட்டபூர்வ அமைப்பும் இல்லை. ரிசர்வ்வங்கியும் க்ரிப்டோகரன்சியை வெளியிடவில்லை. ஆகையால் நாம் காலம் காலமாக பயன்படுத்தும் ரூபாய் நோட்டுக்குத்தான் மதிப்பு உள்ளது. மற்றபடி ரிசர்வ் வங்கி டிஜட்டல் கரன்சி எனப்படும் சிபிடிசி, அதாவது சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்ஸி பற்றி ஆலோசித்து வருகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.




ரிசர்வ் வங்கி சிபிடிசி, அதாவது சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சியைக் கொண்டு வந்தால் அதன் மூலம் ரூபாய் நோட்டுகள் மீதான அழுத்தம் தேவை குறையும் என்று கணிகப்படுகிறது.


இன்னொரு கேள்விக்கு, "கடந்த 2019-20 ஆம் நிதியாண்டில் 4,378 கோடி ரூபாய் மதிப்பில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்ட நிலையில் 2020-21 காலக்கட்டத்தில் அது 4012 கோடி ரூபாயாக குறைந்துள்ளது" என்று கூறியுள்ளார்.


நாட்டின் பொருளாதார நிலவரம் குறித்த இன்னொரு கேள்விக்கு பதிலளித்த அவர், "நிலையான பங்குச்சந்தையும், சீராக இயங்கும் சந்தை கட்டமைப்புமே ஒரு நாட்டுப் பொருளாதார வளத்தின் குறியீடு. அது நம் நாட்டைப் பொறுத்தவரை இப்போது சீராகவே இருக்கிறது" என்று கூறியுள்ளார்.


இருப்பினும் பங்குச்சந்தைகளில் ஏற்றத்தாழ்வும் வரலாம். ஏனெனில் பங்குச்சந்தையின் போக்கு சர்வதேச அரசியல் சூழலையும் சார்ந்தது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.


`க்ரிப்டோ வர்த்தம் ஒழுங்குமுறைக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்று பல தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். எனினும் தொழில்துறை நிறுவனங்கள், பங்குதாரர்கள் தரப்பில் யார் ஒழுங்குமுறைப்படுத்துவது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், க்ரிப்டோகரன்சியைக் கொண்டுவர அரசுக்கு திட்டமில்லை என மாநிலங்களவையில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.