கடந்த ஜூன் 7-ம் தேதி இந்த தளம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அப்போது முதல் இந்த தளத்தின் சிக்கல்கள் முழுமையாக தீர்க்கப்படவில்லை. இதனால் ஆகஸ்ட் 23-ம் தேதி நிதி அமைச்சரை சந்தித்து இன்ஃபோசிஸ் தலைமைச் செயல் அதிகாரி சலீல் பரேக் விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது. பராமரிப்பு பணிகள் காரணமாக தளத்தை பயன்படுத்த முடியவில்லை. விரைவில் பயன்பாட்டுக்கு வரும். அசௌகர்யத்துக்கு வருந்துகிறோம் என இன்போசிஸ் தெரிவித்திருக்கிறது.


ஜூன் 7-ம் தேதி இந்த தளம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அடுத்த நாளே சிக்கல் ஏற்பட்டதை அடுத்து இன்ஃபோசிஸ் அதிகாரிகள் ஜூன் 22-ம் தேதி அன்று நிதி அமைச்சரை சந்தித்து விளக்கம் அளித்தனர். இந்த நிலையில் இரண்டாம் முறையாக இன்ஃபோசிஸ் குழு நிதி அமைச்சரை சந்திக்க இருக்கிறது.




ஆகஸ்ட் 16-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்ஃபோசிஸ் நிறுவனத்துடன் தொடர்ந்து உரையாடி வருகிறோம். தலைவர் நந்தன் நீலகேணியுடன் தொடர்ந்து பேசிவருகிறோம். இன்னும் சில தினங்களில் இந்த சிக்கல் தீர்க்கப்படும் என குறிப்பிட்டார். ஆனால் அடுத்த சில நாட்களில் (ஆகஸ்ட் 21) மீண்டும் சிக்கல் ஏற்பட்டதை அடுத்து தலைமைச் செயல் அதிகாரிக்கே சம்மன் அனுப்பபட்டிருக்கிறது.






ரூ.4,242 கோடி ஒப்பந்தம்


கடந்த 2019-ம் ஆண்டு இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.4,242 கோடி. எதிர்காலத்துக்கு தேவையான தளமாக இருக்க வேண்டும். மேலும் எளிதாக இருப்பது, ரீபண்ட் விரைவாக கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த தளம் உருவாக்கப்பட்டது. ரீபண்ட் காலத்தை 63 நாட்களில் இருந்து ஒரு நாளாக குறைப்பதும் இதன் முக்கிய நோக்கமாகும்.


புதிய தளத்தில் சில லட்சம் நபர்கள் வருமான வரி தாக்கல் செய்திருக்கிறார்கள் என்றும் விரைவில் இந்த தளத்தின் பிரச்சினைகள் சரி செய்யப்படும் என்றும் இன்ஃபோசிஸ் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி யு.பி. பிரவீண் ராவ் காலாண்டு முடிவுகளின்போது தெரிவித்தார்.


செப்டம்பர் 30 கெடு


வருமான வரியை தாக்கல் செய்வதற்கு செப்டம்பர் 30-ம் தேதி இறுதிநாள். ஆனால் இதுவரை மிக குறைந்த எண்ணிக்கையிலே தாக்கல் நடந்திருக்கிறது. இந்த சூழலில் தொழில் நுட்ப கோளாறும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை 25லட்சத்துக்கும் மேற்பட்ட வருமான வரி தாக்கல்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இதில் 22 லட்சத்துக்கு மேல் ரீபண்ட் நடைமுறை இருப்பதாக சில நாட்களுக்கு முன்பு  வருமான வரித்துறை தெரிவித்திருக்கிறது.


பல ஆடிட்டர்கள் புதிய தளம் தொடர்பாக நெகட்டிவ் கமெண்ட்களை பொதுவெளியில் எழுதி வருகிறார்கள். ``ஒரு வருமான வரி தாக்கலுக்கு ஒரு லட்ச ரூபாய் வசூல் செய்தால்தான் நான் முதலீடு செய்த நேரத்துக்கு மதிப்பு’’ என ஒரு ஆடிட்டர் பதிவிட்டிருக்கிறார்.




மற்றொருவர், ``முன்பு ஆடிட்டர் இல்லாமல் நீங்களே தாக்கல் செய்யலாம் என கூறினார்கள். ஆனால் தற்போது ஆடிட்டர்களே தாக்க செய்ய முடியவில்லை’’ என பதிவிட்டிருக்கிறார்கள். இதுபோல பலர் இந்த தளத்தை குறித்து எழுதுவருகின்றனர்.


இந்த திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்த தொகை பெரியதாக இருந்தாலும் 2019-ம் ஆண்டு ஜனவரி முதல் 2021-ம் ஆண்டு ஜூன் வரை ரூ.164.5 கோடி மட்டுமே வழங்கப்பட்டிருப்பதாக நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்திரி நாடாளுமன்றத்தில் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருக்கிறார்.


வருமான வரி தாக்கல் செய்வதற்கான கெடு நெருங்கி வருவதால் இந்த பிரச்சினையை போர்க்கால அடிப்படையில் தீர்க்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது இன்ஃபோசிஸ்.