தனியார் நிறுவனமான நயாரா பெட்ரோல் பங்குகளில், பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. 


ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிட்டெட் மற்றும் இங்கிலாந்தில் உள்ள அதன் பங்குதாரரான பிபி, பிஎல்சிக்கு பிறகு நாட்டின் மிகப்பெரிய தனியார் எரிபொருள் சில்லறை விற்பனையாளரான நயாரா எனர்ஜி அரசுக்கு சொந்தமான சில்லறை விற்பனையாளர்கள் விற்கும் எரிபொருளை விட ஒரு ரூபாய் குறைவாக பெட்ரோல், டீசல் விற்பனை செய்ய தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 


ஐஓசி, பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவற்றை  விட ஒரு ரூபாய் குறைத்து பெட்ரோல் டீசல் விற்பனை செய்யப்படுகிறது. ஜூன் மாத இறுதி வரை லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைத்து பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படும் என்று நயாரா நிறுவனம் அறிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் 60 டாலருக்கு இந்தியா வாங்கும் நிலையில் பெட்ரோல், டீசல் விலையை தனியார் நிறுவனம் குறைத்துள்ளது. 


இந்தியாவின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்வதில் தங்கள் நிறுவனம் ஒரு வலிமையான பங்களிப்பை அளிக்கும் என்று தாங்கள் நம்புவதாக நயாரா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். மேலும் நாட்டின் எரிபொருள் சேவையை பூர்ட்த்தி செய்ய தொடர்ந்து சேவை செய்வோம் என்றும் அவர் தெரிவித்தார். 


முன்னதாக, கடந்த 2018-ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிவித்த தேசிய உயிரி எரிபொருள் கொள்கை 2030-ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனாலைக் கலந்து விற்க இலக்கு நிர்ணயித்திருந்தது. அந்த இலக்கு தற்போது  2025 -ஆம் ஆண்டு என மாற்றியமைக்கப்பட்டது.


இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ”இருபது சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் டிசம்பர் அல்லது ஜனவரி முதல் நாட்டில் கிடைக்கும்” என தெரிவித்தார்.  இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "எத்தனால் உற்பத்தியை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். ஏப்ரல் 2023-க்கு முன்னதாக டிசம்பர் அல்லது ஜனவரியில் 20 சதவீதம் கலப்பு எரிபொருள் சந்தைக்கு வரும் என்று நம்புவதாக கூறினார். 


நெகிழ்வான எரிபொருள் வாகனங்கள் (கலப்பு எரிபொருளில் இயங்கும் வாகனங்கள்) கிடைக்கும் பிரேசிலை உதாரணமாக மேற்கோள் காட்டி பேசிய அமைச்சர் "நுகர்வோர் விருப்பப்படி எத்தனால் அல்லது பெட்ரோலை எடுத்துக் கொள்ளலாம் என்றும் இது அரசாங்கத்தின் இறுதி இலக்காக இருக்கும் என்றும் தெரிவித்தார். 


இருப்பினும், அந்த நிலையை அடைய, சில தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. அதற்கான, பணிகள் நடந்து வருகின்றன. எத்தனால் கலப்படம் தொடர்பாக ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்த உள்ளோம். பெட்ரோலில் 20 சதவிகிதம் எத்தனால் கலப்பதை அடைவதற்கான இலக்கு தேதியை 2025-ஆம் ஆண்டுக்கு ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா முன்னெடுத்துள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.