IPL கோப்பையை 5வது முறையாக வென்றிருக்கும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் பிரம்மாண்ட பாராட்டு விழா நடத்த திட்டமிட்டிருக்கிறார். ஜூன் 2 அல்லது வேறு ஒரு நாளில் இந்த பாராட்டு விழாவை நடத்தி தோனியையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையும் அவர் கவுரவிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.



ஸ்டாலின் - தோனி


இந்த ஐபிஎஸ் சீசனோடு தான் ஓய்வு பெறவிருப்பதாக தோனி அறிவித்த நிலையில், சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘தமிழ்நாட்டின் தத்து பிள்ளையான தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாட வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார்.


இந்நிலையில், IPL கோப்பையை 5வது முறையாக தோனி தலைமையிலான அணி வென்ற நிலையில் அவர்களை அங்கீகரித்து பாராட்டும் வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்திலோ அல்லது நேரு உள்விளையாட்டு அரங்கத்திலோ ஒரு பிரம்மாண்ட விழாவை ஏற்பாடு செய்யச் சொல்லி ஜப்பானில் இருந்தபடியே தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.



’சென்னையின் பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா’


அதனடிப்படையில், நாளை (31 - 05 - 2023) காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் நாட்டில் இருந்து திரும்பிய பிறகு ஜூன் 2ஆம் தேதி அல்லது அதே மாதத்தில் ஒருநாள், தோனியையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையும் பாராட்டும் விதமாக விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஜூன் 3ஆம் தேதி முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவதால் அதற்கு முந்தைய நாள் தோனிக்கான பாராட்டு விழாவை நடத்தலாம் என்று ஆலோசிக்கப்பட்டிருக்கிறது.


இருந்தாலும், ஜூன் 3 அன்று கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை தமிழ்நாடு முழுவதும் பெரிய அளவில் கொண்டாட முடிவு எடுத்திருக்கும் நிலையில், அதற்கு முந்தைய நாளில் அவசர அவசரமாக தோனிக்கு பாராட்டு விழாவை நடத்தாமல், ஜூன் மாதத்திலேயே அனைவருக்கும் ஏதுவான ஒரு நாளை தேர்வு செய்து அன்றைய நாளில் சென்னையில் பாராட்டு விழாவை நடத்தலாம் என்று அதிகாரிகள் தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.


சேப்பாக்கமா ? நேரு விளையாட்டரங்கமா? - உதயநிதி ஆலோசனை


சேப்பாக்கம் மைதானத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களை வாகனத்தில் ஏற்றி அணிவகுப்பு நடத்தவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இருப்பினும், தமிழ்நாடு அரசு நேரு உள்விளையாட்டு அரங்கில் பாராட்டு நிகழ்ச்சியை வைத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்தால், அந்த முடிவில் சிறு மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.






ஜூன் 7ஆம் தேதி இங்கிலாந்து உள்ள லண்டன் ஓவல் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா -  ஆஸ்திரேலியா அணிகள் மோதுவதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள ஜடேஜா மற்றும் ரஹானே ஆகிய இரண்டு வீரர்களும் இந்த போட்டியில் பங்கேற்கவுள்ளனர். அதனால், ஒருவேளை ஜூன் 2ஆம் தேதி பாராட்டு விழாவை நடத்த முடியாவிட்டால், டெஸ்ட் கிரிக்கெட் போட்டி முடிந்த பிறகு சென்னையில் பாராட்டுவிழா நடத்தப்படும் என கூறப்படுகிறது.


கடந்த ஆண்டு 4வது முறையாக கோப்பையை வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு கலைவாணர் அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடந்தது குறிப்பிடத்தக்கது