பிளஸ் 2 பொதுத்‌ தேர்வு விடைத்தாள் நகலினை இன்று முதல் இணைய தளத்தில்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம் என்று அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ தெரிவித்துள்ளது. 


கடந்த மார்ச்‌/ ஏப்ரல்‌ மாதத்தில் மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு பொதுத்‌ தேர்வு எழுதிய மாணவர்களில் சிலர் விடைத்தாள்‌ நகல்‌ கோரி விண்ணப்பித்தனர். அந்த  மாணவர்கள், தங்களின்‌ விடைத்தாள்‌ நகலினை இன்று 30.05.2023 ( செவ்வாய்க்கிழமை) பிற்பகல்‌ முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 


எப்படி?


தேர்வர்கள் https://dge.tn.gov.in/ என்ற இணையதளத்திற்குச்‌ செல்ல வேண்டும். அதில், Notification-ஐ க்ளிக் செய்தவுடன்‌ HSE Second Year Exam, March/ April 2023 - Scripts Download என்ற வாசகம் தோன்றும். அதை "Click" செய்தால்‌ தோன்றும்‌ பக்கத்தில் தங்களது பதிவெண்‌ மற்றும்‌ பிறந்த தேதியினைப்‌ பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் மாணவர்கள், தாங்கள்‌ விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத் தாள்களின்‌ நகலினைப்‌ பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.


மறுகூட்டல்


விடைத்தாள்களின்‌ நகலினை பதிவிறக்கம்‌ செய்த பிறகு மறுகூட்டல்‌ -॥ அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால்‌, இதே இணையதள முகவரியில்‌  (https://dge.tn.gov.in/) "Application for Retotalling/ Revaluation" என்ற முகவரியை க்ளிக் செய்ய வேண்டும். தொடர்ந்து, வெற்று விண்ணப்பத்தினைப்‌ பதிவிறக்கம்‌ செய்துகொள்ள வேண்டும்‌.


தேர்வர்கள்‌ இந்த விண்ணப்பப்‌ படிவத்தினை பூர்த்தி செய்து, இரு நகல்கள்‌ எடுத்து நாளை (31.05.2023 - புதன்கிழமை) பிற்பகல்‌ முதல்‌ 03.06.2023 (சனிக்கிழமை) மாலை 5.00 மணிவரை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத்‌ தேர்வுகள்‌ உதவி இயக்குநர்‌ அலுவலகத்தில்‌ ஒப்படைக்க வேண்டும்‌. மறு கூட்டல்‌ மற்றும்‌ மறு மதிப்பீட்டிற்கான கட்டணத்தினை மாவட்ட அரசுத்‌ தேர்வுகள்‌ உதவி இயக்குநர்‌ அலுவலகத்தில்‌ பணமாகச்‌ செலுத்த வேண்டும்‌.


புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி, இராணிப்பேட்டை, திருப்பத்தூர்‌, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும்‌ மயிலாடுதுறை மாவட்டங்களில்‌ மறுகூட்டல்‌ -॥ அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும்‌ தேர்வர்கள்‌ சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்‌ அலுவலகத்தில்‌ விண்ணப்பப்‌ படிவங்களை ஒப்படைத்து, அதற்குரிய கட்டணத்‌ தொகையை பணமாகச் செலுத்த வேண்டும்‌.


மறுமதிப்பீடு


பாடம்‌ (ஒவ்வொன்றிற்கும்‌) - ரூ. 505/-


மறுகூட்டல்‌-॥


உயிரியல்‌ பாடம்‌ மட்டும்‌ - ரூ.305/-
ஏனைய‌ பாடங்கள்‌ (ஒவ்வொன்றிற்கும்‌) - ரூ.205/-’’


இவ்வாறு அரசுத்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ தெரிவித்துள்ளது. 


முன்னதாக மே 8ஆம் தேதி மாநிலம் முழுவதும் 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.