National Savings Certificate: தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டத்திற்கு, 7.7 சதவிகித வட்டி வழங்கப்படுகிறது.
தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டம்:
தேசிய சேமிப்புச் சான்றிதழ் என்பது மத்திய அரசின் ஆதரவு பெற்ற சிறு சேமிப்புத் திட்டமாகும். இது பயனாளர்களுக்கு நிலையான வருமானத்தை வழங்குவதோடு, அவர்களை பணத்தை சீராக வளர்க்கவும், ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம் வரையிலான வருமான வரிச் சலுகைகளை பெறவும் உதவுகிறது. அஞ்சல் அலுவலகங்களில் உள்ள உத்தரவாதமான சிறு சேமிப்பு திட்டங்களில் ஒன்றான, தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டத்திற்கு வரும் ஜூன் 30ம் தேதியுடன் முடிவடையும் 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டிற்கு, 7.7 சதவிகிதம் வட்டி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வட்டி ஆண்டுதோறும் கூட்டப்பட்டு, ஐந்து வருட முதிர்வு காலத்தில் பணம் பயனாளருக்கு வழங்கப்படும்.
வருமான விவரம்:
தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யப்பட்டு, ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட வட்டி விகிதத்துடன் வைப்பாளருக்கான தொகை குறிப்பிட்ட காலத்திற்குப் பின் திருப்பித் தரப்படும். இந்த உத்தரவாதத்தில் ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் உங்கள் முதலீடு ரூ.1,100, ரூ.11,000, ரூ.21,000 மற்றும் ரூ.51,000 வரை உயரலாம். உதாரணமாக இந்த திட்டத்தில் ரூ.15 லட்சம் முதலீடு செய்யப்பட்டால், 5 ஆண்டுகள் முடிவில் நீங்கள் 21 லட்சத்து 73 ஆயிரத்து 551 ரூபாயை முதிர்ச்சித் தொகையாக பெறலாம். இதில் வட்டி மட்டுமே 6 லட்சத்து 73 ஆயிரத்து 551 ரூபாய் ஆகும். கூடுதல் உதாரணங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன.
காலம் | ரூ.1,100 முதலீடு செய்தால் | ரூ.11,000 முதலீடு செய்தால் | ரூ.21,000 முதலீடு செய்தால் | ரூ.51,000 முதலீடு செய்தால் |
முதலாமாண்டு முடிவில் | ரூ.1,185 | ரூ.11,847 | ரூ.22,617 | ரூ.54,927 |
இரண்டாமாண்டு முடிவில் | ரூ.1,276 | ரூ.12,759 | ரூ.24,358.5 | ரூ.59,156 |
மூன்றாமாண்டு முடிவில் | ரூ.1,374 | ரூ.13,742 | ரூ.26,234 | ரூ.63,711 |
நான்காமாண்டு முடிவில் | ரூ.1,480 | ரூ.14,800 | ரூ.28,254 | ரூ.68,617 |
ஐந்தாமாண்டு முடிவில் | ரூ.1,594 | ரூ.15,939 | ரூ.30,430 | ரூ.73,901 |
முதலீட்டாளருக்கான வரம்பு:
தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் முதலீடு செய்ய எந்த உச்ச வரம்பும் இல்லை என்றாலும், குறைந்தபட்ச முதலீட்டு தொகையாக ரூ. 1,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான கணக்கை உங்களுக்கு அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் தொடங்கலாம். 10 வயதுக்குட்பட்ட மைனர் சார்பாக அவரது கார்டியன் அல்லது 10 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ (மூன்று பெரியவர்கள் வரை) முதலீடு செய்யலாம்.
முன்பே முதலீட்டை திரும்பப் பெறமுடியுமா?
தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டத்தில் சில நிபந்தனைகளின் கீழ் ஒருவர், திட்டம் முடிவதற்கு முன்பே (5 வருடங்களுக்கு முன்பே) நிதியை திரும்பப் பெறலாம். இந்த நிபந்தனைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
- தனிநபராக கணக்கை வைத்திருப்பவர் இறந்தால்
- கூட்டு முறையில் கணக்கு வைத்திருப்பவர்களில் எவரேனும் இறந்தால்
- அரசிதழ் அதிகாரியாக இருப்பதன் மூலம் உறுதிமொழி எடுக்கப்பட்டால்
- நீதிமன்ற உத்தரவு வழக்கில்
வரிவிலக்கு:
வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வருமான வரிச் சலுகைகளைப் பெறும்போது, கூடுதல் வரிகளை தவிர்க்க முதலீட்டாளர்களுக்கு சேமிப்புச் சான்றிதழ்கள் பொருத்தமானவை என்று பல நிதித் ஆலோசகர்கள் வலியுறுத்துகின்றனர். தேசிய சேமிப்புச் சான்றிதழ் வைப்புத்தொகைகள் ஒரு நிதியாண்டின் வரிச் சட்டங்களின்படி, ரூ. 1.50 லட்சம் வரையில் வரி விலக்கு பெற தகுதியுடையவை ஆகும்.