Arunachal Pradesh Polls: வடகிழக்கு மாநிலமான அருணாச்சலபிரதேச சட்டமன்ற தேர்தலில், வரும் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.


போட்டியின்றி பாஜகவினர் வெற்றி:


அருணாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலில், தற்போதைய முதலமைச்சர் பெமா காண்டு, துணை முதலமைச்சர் சௌனா மெய்ன் உள்ளிட்ட பாஜகவின் 10 எம்எல்ஏக்கள் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாகலீ தொகுதியில் இருந்து ரது டெச்சி, தாலி தொகுதியில் இருந்து ஜிக்கே டாகோ, தலிஹா தொகுதியில் இருந்து நியாடோ டுகம், ரோயிங்கி தொகுதியில் இருந்து முட்சு மிதி, ஜிரோ ஹாபோலி தொகுதியில் இருந்து ஹேகே அப்பா, இட்டாநகர் தொகுதியில் இருந்து டெச்சி கசோ, போம்டிலா தொகுதியில் இருந்து டோங்ரு சியோங்ஜு மற்றும் ஹயுலியாங்கி தொகுதியில் இருந்து தசாங்லு புல் ஆகிய பாஜக வேட்பாளர்களும் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.






அருணாச்சலபிரதேச சட்டமன்ற தேர்தல்:


அருணாச்சலபிரதேச சட்டமன்றத்தில் உள்ள 60 உறுப்பினர் பதவிகளுக்கும், வரும் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் 60 தொகுதிகளுக்கும் பாஜக வேட்பாளர்களை அறிவித்த நிலையில், காங்கிரஸ் 34 தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் கடந்த புதன்கிழமையுடன் நிறைவடைந்தது. இதையொதொடர்ந்து நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையின் முடிவில், முதலமைச்சர் பெமா காண்டு உள்ளிட்ட பாஜக வேட்பாளர்கள் 10 பேர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. குறிப்பாக, தாலி தொகுதியில் பாஜகவின் ஜிக்கே டாகோ போட்டியின்றி இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.


தொடரும் பாஜக ஆட்சி..!


கடந்த 2016ம் ஆண்டு காங்கிரசில் இருந்து விலகி, அருணாச்சல மக்கள் கட்சிக்கு சென்ற பெமா காண்டு பிறகு தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார். கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் முதலமைச்சராகவும் பொறுப்பேற்றார். தொடர்ந்து, 2019ம் ஆண்டு பாஜக முதல்முறையாக அம்மாநிலத்தில் தனது தலைமையிலன தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை அமைத்தது.  அந்த தேர்தலில் பாஜக 41 இடங்களைப் பெற்றது. அதைத் தொடர்ந்து, ஜனதா தளம்-யுனைடெட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 7 எம்எல்ஏக்கள் பாஜகவில் கட்சியில் இணைந்தனர். சமீபத்தில் இரண்டு தேசிய மக்கள் கட்சி (என்பிபி) உறுப்பினர்களும் மூன்று காங்கிரஸ் எம்எல்ஏக்களும் பாஜக முகாமுக்குச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.